

தஞ்சாவூர் மாவட்டம். அதில் பேராருணீ என்று ஒரு சிறு நகரம். அங்கே இருந்து கிழக்கில் ஒரு பிரிவு (மாட்டு வண்டி செல்லும் அளவு) குக்கிராமத்திற்குச் செல்லும். அந்தக் கிராமத்தில் நுழையும்முன் ஒரு வனத்தேவதை காளி அம்மன் கோயில்.
சுமார் 1.5 கிலோ மீட்டரில் நல்ல சாலை இல்லை. சாலை வசதி கோரி கிராம மக்கள் நெடுஞ்சாலையின் சாலை நடுவே உட்கார்ந்து அறப்போராட்டம் செய்தார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று, அந்தக் கிராமத்திற்குச் செல்லும் பாதையில் கற்களை முதலில் போட்டது.
அப்போது கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சுந்தரம். காளி கோயிலில் சென்று சாமி கும்பிட்டு வந்துப் பார்த்தால் செருப்பைக் காணவில்லை. வேறு வழியின்றி வெறும் காலால் கிராமம் நோக்கிச் சென்றான். ஆனால், அவனால் நடக்க முடியாமல் போனது. கரடு முரடாக பாதை இருந்தது.
காலில் கற்கள் குத்தியது. பயங்கர சூடு வேறு. முன்னால் ஒரு பெரியவர் வந்துகொண்டு இருந்தார். அவர் பெயர் கோபால். அவர் சுந்தரம் தடுமாறி நடப்பதைப் பார்த்தார். அருகே வந்ததும்… சுந்தரத்திடம் “தம்பி… நீ நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவதைப் பார்த்தேன்…!” என்று கூறினார்.
சுந்தரம் “ஆமாம்” என்று சொன்னான்.
கோபால் பெரியவர், “தம்பி… எனக்கு இந்தப் பாதையில் நடந்து பழகிவிட்டது. நான் நடந்துவிடுவேன். நீ இன்னும் ஒரு கிலோமீட்டர் நடக்கவேண்டும்.
நேற்றுதான் நான் எனக்கு முதல்முதலாக செருப்பு வாங்கினேன்… நீ இதை போட்டுக்கொள்…!” என்று பரிவுடன் சொன்னார் கோபால்.
சுந்தரம் மிகவும் கஷ்டப்பட்டு… அவரது புது செருப்பை போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
'அட அவருக்கு நன்றிகூடச் சொல்லாமல் வந்துவிட்டோமே…!' என்று கவலைப்பட்டான்.
மறுநாள் தஞ்சாவூரில் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி (கணிதம்) முதலாமாண்டு சேர, கிராமத்திலிருந்து புறப்பட ஆயத்தமானான்.
அவனுக்கு கால்செருப்பு இல்லை. கோபால் பெரியவர் கொடுத்த புதுச்செருப்பை அணிந்துகொண்டு, அவரையே நினைத்துகொண்டே கிளம்பினான்.
சுந்தரம் படிப்பில் மிகவும் ஆர்வம் உடையவன். அவன் மாணவர் விடுதியில் சேர்ந்து படித்தான். எல்லாம் சுந்தரத்தின் அக்கா உபயம்.
முதல் இரண்டு செமஸ்டர்கள் முடிந்தவுடன் சரியாக இரண்டு மாதம் விடுமுறை. சுந்தரம் இன்னும் கோபால் பெரியவரின் செருப்பையே பயன்படுத்தி வந்தான்.
தான் சேமித்து வைத்த பணத்தில் கோபால் பெரியவருக்காக ஒரு கதர் வேட்டியும் ஒரு கதர் சட்டையும் குறைந்த விலையில் வாங்கினான். ஆனால், கதர் வேட்டி மற்றும் சட்டை நன்றாக தரத்தில் இருந்தது.
பஸ் பிராயணம். அம்மா... நான் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
இப்போது தார் சாலையாக இருக்கும் என்று கனவு கண்டு வந்தான்.
நெடுஞ்சாலை பிரிவில் இறங்கி கிராம தேவதை காளி அம்மனைக் கும்பிட்டுவிட்டு வந்தான்.
சுந்தரத்திற்கு அதிர்ச்சி. அந்தப் பாதை அப்படியே கரடு முரடாகத்தான் இருந்தது. சுந்தரம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. தான் இப்போதும் கோபால் பெரியவரின் செருப்பைத்தான் உபயோகித்து வருகிறான் என்று மனம் சோர்ந்தான். கோபால் பெரியவர் செருப்பு இல்லாமல் இருப்பாரோ என்று நினைத்தான்.
கிராமத்திற்கு வந்தவுடன் தனது அக்காவிடம், கடந்த வருடம் காளி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, செருப்பைத் தொலைத்து, கற்களில் நடந்து வருவதற்கு மிகச் சிரமப்பட்டதையும் பெரியவர் கால்செருப்பு கொடுத்ததையும் சொன்னான். பிறகு அந்தப் பெரியவர் பேர் மற்றும் முகவரி கேட்டான்.
அவன் சொன்ன அடையாளங்களை உள்வாங்கி, “சுந்தர்… அது கோபால் பெரியவர்… மூன்றாவது தெருவில் இருக்கிறார்…!” சட்டென்று சொல்லி விட்டார்.
வந்ததும் வராததுமாக மூன்றாம் தெருவிற்குப் போனான்.
கோபால் பெரியவரைப் பார்த்தான். அவருக்கு நினைவு இல்லை. சுந்தரம் ஒரு வருடம் முன் நடந்ததைச் சொல்ல, பெரியவருக்கு நினைவு வந்தது.
சுந்தரம், தான் வாங்கிய வேட்டி சட்டை கொடுத்து “என்னை ஆசிர்வதியுங்கள்..!” என்று சொல்லி அவர் காலில் விழுந்தான்.
“நல்ல இருப்பா…!” என்று சொல்லி வேட்டி மற்றும் சட்டையை வாங்கிக்கொண்டார்.
அடுத்த வருடமும் சுந்தரம் வரும்போதும் தார் சாலை இல்லை.
தார் சாலை எப்போ வரும்…?