
அது ஒரு பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம்! மார்க்கட்டில் அந்த நிறுவனக் கார்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு! ஆண்டுக்கு ஆண்டு விற்பனை கூடிக் கொண்டே இருந்தது! அந்த ஆண்டும் ஆயிரக் கணக்கான கார்கள் தயாராகி விட்டன்! தொழிற்சாலையை விட்டு கார்களை வெளியேற்றும் விழா! நிறுவனத் தலைவர் வந்து, கொடி அசைத்து கார்களை போகச்சொல்லி விட்டார்! ஆனால் கார்கள் வெளியேறவில்லை! என்ன ஆனது?
பெரிய, பெரிய அதிகாரிகள் எல்லாம் வாசலுக்கு ஓடி வருகிறார்கள்! வந்து பார்த்த பிறகுதான் அவர்களுக்கு விஷயம் தெரிய வருகிறது! தவறு புரிகிறது!அதாவது, வாசலின் உயரத்தைவிடக் கார்களின் உயரம் ஓர் அங்குலம் அதிகமாகி விட்டது!
கார் தயாரிப்பின் பொறுப்பு அதிகாரி ஓடி வந்து நிறுவனத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்!
"ஓர் இஞ்ச்தான் சார்! கொஞ்சம் ஸ்க்ராட்சும், பெயிண்டும் போகும்! வெளியில் நிறுத்தி, பழுது நீக்கி, பெயிண்ட் பண்ணி அனுப்பிடலாம் சார்!" என்று அவர் சமாதானம் சொல்கிறார்!
கட்டிடத் தலைமைப் பொறியாளர் ஓடி வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "ஓர் இஞ்ச்தான் சார்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல! வாசலை ஒடைச்சி ஒயரமாக்கிடலாம்!அப்புறம் சிமெண்ட் வெச்சி பூசிடலாம்! சிமெண்டும், ஆள் செலவுந்தான்!" என்கிறார்!
"சரி! சரி! நிதானமா யோசிச்சு செய்யுங்க! வேணும்னா கான்பரன்ஸ் ஹால்ல மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுங்க!எல்லோரையும் கூப்பிடுங்க! நானும் வரேன்! ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!" என்று தலைவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த கேட் கீப்பர் முன்னே வந்து தலைவரை வணங்கி விட்டுச் சொல்கிறார்!
"ஐயா! இதுக்கு எங்கிட்ட ஈசியான ஐடியா இருக்கு! சரின்னா சொல்றேன்!"
"நீ என்னத்த பெரிசா சொல்லப் போறே? சரி! உன்னோட ஆசையை ஏன் கெடுப்பானே! நீயும் எதை ஒடைக்கணும்னு சொல்லு!"
"ஐயா! எதையும் ஒடைக்கவும் வேண்டாம்! பூசவும் வேண்டாம்! ஓர் அங்குலம் தானுங்களே! எல்லாக் கார்லயும் காத்தைக் கொஞ்சம் கொறைச்சிட்டுப் போகச்சொல்லுங்க!" என்று சாதாரணமாகச் சொன்னார் கேட் கீப்பர்!
அவ்வளவுதான்! தலைவரிலிருந்து அத்தனை பேரும் வெட்கித் தலை குனிந்தனர்! அந்த ஐடியா அவர்களில் எவருக்குமே தோன்றவில்லையே! இவ்வளவுக்கும் அவர்கள் அத்தனை பேரும் அவரவர் துறையில் 'டாக்டரேட்' வாங்கியவர்கள்!
அந்த தலைவர் நல்லவர்! எனவே ஒரு மாற்றத்தை உடனடியாகச் செய்தார்! கருத்துக்கள் வழங்கும் கூட்டங்களுக்கு அனைவரையும் கூப்பிட ஏற்பாடு செய்தார்! கேட் கீப்பரையும் சேர்த்துத்தான்! அதற்கு முன்பெல்லாம் பெரிய அதிகாரிகள் மட்டுமே அக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும்!