
பாஸ்கரன் அப்படியொரு முடிவை சொன்னதும், கொஞ்சம் பயப்படச் செய்தார்கள். அவனின் பெற்றோர்கள். "இது சரிபட்டு வருமாடா?”
“சரிவராதுண்ணு நினைச்சா நான் என்ன செய்ய முடியும்? வயசு 45 ஆகுது. எந்தப் பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது. நாளைக்கு என் கடைசிக் காலத்தில் யாரு பாத்துப்பா?
"நீங்க அப்படிக் கெஞ்சியும் மாமா பொண்ணு பத்மா விதவையாகி 5 வருஷம் ஆகுது... என்னைக் கட்டிக்கச் சம்மதம் அவளும் சரி, மாமா மாமி சரின்னு சொன்னார்களா? இல்லை மத்த சொந்தக்காரங்க தான் பெண் கொடுக்கத் தயாரா இருந்தாங்காளா?
"எல்லோரும் சொல்ற மாதிரி, 'நீ என்ன அரசாங்க வேலையில் இருக்கியா? எதை நம்பி என் பொண்ணைக் கொடுக்கறத்துண்ணு' கேட்டவங்கதானே! அம்மாவும், மாமாவைக் கன்வின்ஸ் பண்ண முடியல!"
இப்படிப் புலம்புவது நம் கதையின் கதாநாயகன் பாஸ்கரன். இப்போது வயது 45. அவனுக்கு அரசு வேலை இல்லாததால், இல்லை, இல்லை கிடைக்கதாதால், அவன் வரன் தேடும் போது யாரும் பிடிக்கொடுத்து கூடப் பேசவில்லை.
'ஒங்களுக்கு அரசாங்க உத்தியோகம் இருந்தா பேசுங்க இல்லை ஐ.டி கம்பனியில் வேலை பாக்கறீங்களா? வேறு சொத்து, சொந்தமா வீடு எதுவும் இருக்கா?'
- இப்படிக் கேள்வி கேட்ட பெரும்பாலான பெண்களுக்குப் பதில் 'இல்லை' என்பதே அவன் நிலைமை.
“சொந்தமா சின்ன டெய்லர் கடை தான் இருக்கு. ஆனாலும் வருகிற பெண்ணைக் கண் கலங்காம வச்சிருப்பேன்.“
“நீங்க எந்தக் காலத்தில் இருக்கீங்க மிஸ்டர் பாஸ்கர்? ஒங்க டெய்லர் கடை மூலமா மாசம் ஒரு லட்சம் கிடைக்குமா? தீபாவளி பொங்கல் வர்ற டயத்திலே வேனா பைசா பாக்கலாம்.“ என்று ஏளனப்பேச்சுப் பேசிய பெண்கள் லிஸ்ட் ஐம்பதை தாண்டும்.
அதிலும் பெண்ணைப் பெற்றவர்களின் திமிரான பேச்சு இரண்டு வார்த்தை பேசுவதற்கு முன்பே மொபைலை கட் செய்வது. இதெல்லாம் அவமானத்தின் உச்சமாகத் தெரிந்தது பாஸ்கருக்கு.
பீ.காம் டிகிரி தேர்ட் கிளாஸ். படித்த படிப்புக்கு, எந்த அரசாங்க வேலையும் கிடைக்கல! ஜெனரல் கேட்டகரியில் பிறந்தவங்க சுமாரான மார்க் வாங்கி இருந்தால், வேலை கிடைக்காது. இது தெரிந்த விசயம் தான்...
இப்படி அவனுடைய திருமண வாய்ப்பு எல்லோராலும் நிராகரிக்கப் பட்டதால், பாஸ்கரன் மட்டுமல்ல, அவன் பெற்றோர்களும் கவலைப்படும்படியானது.
சாஸ்திர சம்பிரதாயத்தில் ஊறிய வைதிக மனுஷன் ராமு சாஸ்திரிகள். வைதீகம் மூலம் சொற்ப சம்பளம். வாய்க்கும், வயத்துக்கும், போதாத சம்பளம்.
தர்ப்பணம் செய்து வைக்கும் இடத்தில் யாராவது மந்திரத்தை சரியா சொல்லவில்லை என்றால் அவர்களைத் திட்டி விட்டு அரங்கேற்றம் படத்தில் வரும் சுப்பையா மாதிரி கோபம் வேறு வரும். அன்னிக்கு வர வேண்டிய தட்சணை வராது. இல்லை கிடைக்காது.
“நியோகம் என்பது Surrogacy, அதாவது கணவன் அல்லது மனைவி இறந்து போனால், மற்றொரு ஆண் அல்லது பெண் மூலம் பிள்ளை பெறுதல்.
“உன் மாமா பெண் இளம் விதவை. அவள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்!”
நியோகா மூலம் பிறந்தவர்கள்:
1. அம்பிகையிலிருந்து திருதராஷ்டிரன்.
2. அம்பாலிகையிலிருந்து பாண்டு.
3. பணிப்பெண்ணிடமிருந்து விதுரர்.
என்று விளக்கம் கூடவே கொடுத்தார் ராமு சாஸ்திரிகள்.
"ஒரு முக்கியமான விஷயத்தைக் மறந்துட்டு பேசறீங்க அப்பா. நீங்க சொன்னதெல்லாம் புராண காலம்...”
இந்தச் செயல் கலிகாலத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். மனிதனுக்கு இந்திரிய கட்டுப்பாடு இல்லாததால், இப்பொழுது இந்த முறையைப் பின்பற்ற கூடாது.
“நீ சொல்லும் மாமா பெண் மட்டுமல்ல எந்தப் பெண்ணும் கல்யாணம் ஆகாமல் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்! இரண்டாம் தாரமாகவே வர விருப்பம் அவளுக்கும், அவள் பெற்றோர்களுக்கும், இல்லாத போது, நீங்க எதிர்பார்ப்பது சாதாரண ஆசை இல்லை பேராசை. இது நிச்சயமாக நடக்காது.
“மாதொருபாகன் என்னும் புதினம் பெருமாள் முருகன் எழுதி 2010 இல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் அல்லது ஆண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதைச் சாதிய ஒடுக்குமுறை நிறைந்த ஒரு சமூகம் எதிர்த்து, அந்தத் தம்பதியரை அழிப்பதையும் பற்றிய புதினக் கதை.
“இந்தப் புதினத்தின் உள்ளடக்கத்தை, இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும், எதிர்த்தன. இதனால் பெருமாள் முருகன் பல சிக்கல்களை எதிர்நோக்கினார். ஒரு புதினம் பெரிய சிக்கல்களை உண்டு பண்ணியது. எனவே நீங்கள் இது மாதிரி யோசனைகள் சொல்ல வேண்டாம்.
"குழந்தை ஒன்று, ஓடி விளையாட வேண்டும் என்று நினைத்தால் ஏதாவது அனாதை குழந்தையைத் தத்து எடுப்பது மூலம் பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வரலாம்.” அதற்கும் சட்ட சிக்கல்கள் நிறைய இருக்கு."
“யார் பெத்து எடுத்த குழந்தையை நாம தத்து எடுப்பதா? ஒருகாலும் சம்மதிக்க மாட்டேன்" என்றாள் அம்மா.
45 வயது கடந்து விட்டது, திருமணம் செய்து கொள்ளும் வாழ்க்கை மைல்கல்லை, இனி தன்னால் தொட முடியாது. தான் தந்தையாகும் கனவு கானல் நீர் மாதிரி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டான்.
“உங்கள் இருவர் கையிலும் பேரன் அல்லது பேத்தியைப் வைத்து கொஞ்ச வேண்டும் என்கிற ஆவல் இருக்கு! அந்த ஆவலை விட்டுவிடத் தயாராக இல்லை நான். என்னைப் போன்ற தனியொருவனுக்கு கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தைகள் காப்பகம் மூலம் தத்து எடுப்பது தான் சரியான வழி."
உள்ளூர் மருத்துவர் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி CARA (CENTRAL ADOPTION RESOURCE AUTHORITY) அமைப்பின் உதவியை நாடினான் பாஸ்கர்.
அந்த அமைப்பின் களஞ்சியத்தில் தனக்கு ஒரு குழந்தையைத் தேடி கண்டுபிடிக்க அவனுக்கு மூன்று வருடங்கள் ஆனது.
தான் தன்னலமற்ற உதவிகளைப் பயன்படுத்திக் கொண்ட சொந்தங்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் தான் ஒரு அனாதை குழந்தையைத் தத்து எடுக்கும் விஷயத்தைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள் தான்.
“இவனுக்குப் புத்தி கெட்டுபோச்சு. அதான் இப்படிப் பேசறான். எல்லாத்துக்கும் ஆண்டவன் ஒரு கணக்கு வெச்சுருக்கான்.”
ஆனாலும் அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை.
“எனக்குள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருக்கும் வரை நான் ஜெயிப்பேன். நான் தத்து எடுக்கப் போகும் பையனுக்கு நான் ஒரு அன்பான கடமை உணர்வோடு கூடிய தந்தையாக இருப்பேன்" என்று தன் பெற்றோர்களிடம் வாதிட்டான்.
“உங்களுக்கு ஒரு பேரன் கொஞ்சுவதற்கு வேண்டும். அதே சமயத்தில் நான் தத்து எடுக்கும் பையன் மூலம் என் அந்திம காலத்தில் தோள் சாய அவன் வேண்டும்."
பாஸ்கர் பேசிய பேச்சு அவனுடைய அப்பா அம்மாவின் மனசை நெகிழ வைத்திருக்க வேண்டும்.
2022இல் CARA மூலம் மனு கொடுத்து மூன்று வருடம் கழித்து நல்லதொரு தீர்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு ஞாயிறு சுப முகூர்த்த வேளையில் அப்சர்வேஷன் ஹோமில் குழந்தைகளுடன் மிக நெருக்கமாகப் பழகிய குழந்தை மருத்துவர் சட்ட ரீதியான பார்மலிடீகள் முடிந்தவுடன் பாஸ்கர் கையில் அந்த மூன்று வயது குழந்தையைக் கொடுக்க, அவனுக்கும் அவன் குழந்தைக்கும் மங்கள ஆரத்தி எடுத்து ஸ்வாமி படம் முன்பு கிடத்தினார் அவன் அம்மா.
மூத்த அதிகாரி SARA (State Adoption Resource Authority), நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, "ஒரு பேச்சுலர் ஒரு தந்தையாக இம்மாதிரி ஒரு குழந்தையை ஆஸ்ரமதிலுருந்து சட்ட ரீதியாகத் தத்து எடுப்பது பெருமைக்குரிய செயல் மற்றும் நல்ல எண்ணம். அம்மாதிரி இவர் தத்து எடுத்து இருப்பது மாநில அளவில் இவர் தான் முதல் தந்தையா திகழ்கிறார். குழந்தைக்கு என் வாழ்த்துகள்" என்று வாழ்த்திவிட்டுப் போனார்.
“என் செல்ல குழந்தை மூலம் இனி என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். பெற்றோர்கள் தங்கள் பெண்களை இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிபந்தனைகள், அது சரிவர அமையாமல் போக, மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாத பல ஆண்கள், இந்தச் சமூகத்தில் என்னைப் போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிங்கிள் தந்தையாக நான் செய்து இருக்கும் என் செயல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்," என்று நெகிழ்ந்தான் பாஸ்கர்.
அன்று மாலை குழந்தைக்கு வித விதமான பொம்மைகள், டிரஸ், ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்துப் பெருமை கொண்டான் பாஸ்கர்.