
சூரியன் மீண்டும் தனது கோடையை, குதூகலமாய்த் துவங்கிய பரபரப்பான நேரம் காலை 8 மணி.
நேற்றைய அப்பாக்கள் எல்லாம், தலைமைப்பதவி பறிக்கப்பட்டு, தாத்தாவாக பதவி இறக்கம் பெற்று, பேரன் பேத்திகளோடு இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு பயணப்பட, சோகமும், கவலையும் கலந்த முகத்துடன் அவர்கள் வருத்தமாய்.
தாத்தா மாணிக்கம் தன் பேரன் முகேஷை, 'கேம்பிரிட்ஜ்' உள்ளூர் பள்ளி மூன்றாம் வகுப்பில் வண்டியில் விட்டுவிட்டு, வீட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்.
குறுக்கே வழி மாறி வந்த இளம் வயது ‘பைக்’காரன், மாணிக்கம் தாத்தாவை இடப்புறம் இடிக்க, “ஐயோ, அம்மா” என அலறலாய்ச் சரிந்தவரின் தலை, ரோட்டில் கிடந்த ஜல்லிக்குவியலில் மோதியது.
வினாடி நேரத்தில் ஏற்பட்ட நெற்றிப்பொட்டு வெட்டில், இரத்தம் பல கோடுகளாய்ப் பரிணாமம் எடுக்க, இலேசாக மயங்கிப் போனார் மாணிக்கம்.
மோதிய ‘பைக்’காரன் பயத்தில் பறந்தே போனான்.
‘சட்’டென நின்ற சிலர் மட்டும், துரித கதியில் அவரை அமர வைக்க முயல, வேகமாய் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய சங்கர், மாணிக்கம் தாத்தாவைக் கண்டதும் பதறிப் போனான்.
பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்தவன், கையிலிருந்த மினரல் பாட்டில் வாட்டர் மூலம் ஈரம் செய்து, அரை மயக்கத்தில் இருந்தவரை தன் காரில் ஏற்றி, தொடக்கச் சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தபின் சற்று ஆசுவாசமானான்.
அபாயம் இல்லை என உறுதி செய்து கொண்டவன், தொடக்க சிகிச்சைக்கு பணம் கட்டிவிட்டு, மாணிக்கம் தாத்தாவின் பையிலிருந்த அவரது அடையாள அட்டைக் குறிப்பை பார்த்து அலைபேசியில் அழைத்தான்.
“ஹலோ.. மாணிக்கம் ஐயா வீடுங்களா?.."
“ஆமா. என்ன வேணும்?” எதிர்முனையில் பெண் குரல்.
“அவருக்கு சின்ன விபத்து. நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். அநேகமா, அவரு உங்க குழந்தையை ஸ்கூல்ல விட்டுட்டு, திரும்பி வரும் போது, இது நடந்திருக்கலாம். அவரை கார்ல கூடிவந்து, 'மலர்' மருத்துவமனையில சேர்த்திருக்கேன். எனக்கு ஒரு அலுவலக மீட்டிங். அதான் அவசரமா கிளம்புறேன்...” என சங்கர் சுருக்கமாய் முடிக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தாள் மருமகள் மைதிலி.
“ந., நர்ஸ். இங்கே எமர்ஜென்சி ரூம் எங்கே இருக்கு?“ கேட்டவளுக்கு வழிகாட்டப்பட, எதிரில் வந்தவளை அறியாது கடந்து போனான் சங்கர்.
மாணிக்கம் அருகில் இருந்த நர்ஸ் விபரங்களை கூறி, சங்கர் என்பவர்தான் இங்கு வந்து சேர்த்ததாகவும், இப்போதுதான் அவர், கிளம்பிப் போனதாகவும் மைதிலிடம் கூற, சுற்றுமுற்றும் தேடிப்பார்த்துவிட்டு, அவரைக் காணாது, மாமானாரை விசாரித்தாள்.
உடன் கணவர் சிவாவிற்கு தகவல் சொல்லியவள், ஒரு மணி நேரம் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின், மாணிக்கம் சகிதம் வீடு திரும்பினாள்.
மாலை வீடு திரும்பிய மகன் சிவா, “நல்லவேளை, எங்க முகேஷுக்கு அடிபடலை. உனக்கு பொறுப்பே இல்லைப்பா..” எனத் திட்ட, தன்னைப் போய் ‘பொறுப்பில்லாதவன்’ என மகன் திட்டி விட்டானே என உள்ளுக்குள் குமுறியவராய், பழைய நினைவுகளில் மூழ்கினார்...
மாணிக்கம், அரசு பள்ளி ஒன்றில் துணைத்தலைமை ஆசிரியராகவும், கூடவே, வகுப்பு ஆசிரியராகவும் பணிபுரிந்த காலம் அது.
தன் பையன் சிவா, பத்தாவது படித்த நிலையில், அவனைத் தன்னுடைய வகுப்பில் சேர்க்காமல், பக்கத்து வகுப்பில் சேர்த்து, சிவா முதல் மாணவனாய் வருவதை, தன்னுடைய சக ஆசிரியர் மூலம் உறுதிப்படுத்தி வந்தார் மாணிக்கம்.
அதே சமயம், இவர் வகுப்பு மாணவன் கணேஷ், நல்ல புத்திசாலி. எல்லா பாடங்களிலும் முதல் மாணவன்.
இருந்தாலும், ‘அப்பா’ பாசம் மாணிக்கத்தின் கண்ணை மறைக்க, கணேஷ் மதிப்பெண், தன் மகன் சிவாவை விட, நான்கைந்து குறைவாக இருக்குமாறு, தன்னுடைய சக ஆசிரியர் மூலம் பார்த்துக் கொண்டார் மாணிக்கம்.
‘அன்று சிவாவைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து பாராட்டியதற்கு, இன்று இப்படி பொறுப்பில்லாதவன் பட்டம் வழங்குகிறானே...’
கண்களில் வழிந்த கண்ணீர், கன்னம் வழியே உருவெடுத்து, சட்டைக் காலரை ஈரப்படுத்தியது.
“தாத்தா, என்ன தாத்தா? என்ன புலம்பற?..” பேரன் முகேஷ்.
“அ.. அது., வலி, வேதனை. நீ ஒன்னும் கவலைபடாத..” எனத், தன்னருகே வந்து அமர்ந்த பேரனை, பக்கவாட்டில் திரும்பி அணைத்தவர், அவனை மெதுவாக இறக்கி விட்டுட்டு, உள்ளுக்குள் புழுங்கினார்.
‘அப்பா’ என்கிற பேராசை நிலையால், தான் சறுக்கியது குற்றமாய் உணர்ந்த அதே சமயம், ஆசிரியராய் தான் பெற்ற ‘நல்லாசிரியர் விருது’ நினைவுக்கு வர, ஆனந்தம் மற்றும் வருத்தம் கலந்த கண்ணீர் மாணிக்கம் கண்களில்.
அடுத்து வந்த வாரம் சற்று மெதுவாய் நகர்ந்தது.
மாணிக்கம் சகஜமான நிலைக்கு வந்தவுடன், வழக்கம்போல் பேரனை பள்ளியில் விட, தன் வண்டியை துடைத்து ஆயத்தமாக்கி, “டேய் முகேஷ் பையா, தாத்தா ரெடி..” என ஆர்வமாய், ஆசையாய் கூப்பிட்டார்.
“அப்பா.. இனிமே நீங்க பேரனை ஸ்கூல்ல விட வேண்டாம். நான் ஏற்கனவே உங்கள எச்சரிச்சிருக்கேன். பத்திரமா போய், உங்க ரூம்ல கிடங்க. நான் என் கம்பெனி கார் டிரைவரை, தினமும் வரச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டேன்..” மகன் சிவா குரலை உயர்த்திப் பேசவே, ‘சட்'டென முகம் சுருங்கிப் போனார் மாணிக்கம்.
“ அட., அதில்லப்பா...”
‘ஒரு’ விரலைக் காட்டி வாயை மூடச் சொன்னவன், “இங்கே பாருங்க. இதுக்கும் மேல, உங்க கிட்ட பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பல. எங்களுக்கு முகேஷோட பாதுகாப்பு முக்கியம். இது உங்களுக்கு சொன்னா புரியாது..”
“குட்மார்னிங் சார் ..” எனக் கம்பெனி டிரைவர்.
“டேய் முகேஷ், இன்னும் 15/20 நிமிஷத்துல நீ கிளம்பணும். கார்ல ஏறனும்” எனப் பையனை விரட்டினான்.
“சிவா என்னை ஏண்டா இப்படி நடத்துற? நீ இந்த அளவுக்கு உயர்ந்ததுக்கு நானும் ஒரு காரணம். அதை மறக்காதடா..” என அவமானப்பட்ட குரலில் மாணிக்கம்.
முன்பை விட அதிக கோபமாய் அப்பாவின் அருகே வந்த சிவாவின் பார்வையில், கீழே கிடந்த பேப்பரின் முதல் பக்க விளம்பரம்.
“ஆகாஷ் ஜூவல்லர்ஸ்” ஆரம்பம். அருகே இருந்த படத்தில் அதே கணேஷ். போட்டி கணேஷ்.
மீண்டும் மனதுக்குள் அவனைப் பற்றிய பொறாமைத் ‘தீ’ பற்றிக் கொண்டது.
“ஐ.. ஐயா, யாரோ வி.ஐ.பி. வெளிநாட்டுக் காரில் வந்து வாசல்ல இறங்குறாங்க...” என டிரைவர் ‘பட, பட’க்க, குழப்பமாய் வாசலை அடைந்தான் சிவா, கூடவே மாணிக்கம்.
கோட் சூட்டில் காரிலிருந்து இறங்கிய சங்கர் கணேஷ், கூடவே, இரண்டு உதவியாளர்கள். அவர்கள் கைகளில் பெரிய பழக்கூடைகள்.
“வணக்கம் ஐயா. நலமா இருக்கீங்களா?.. நீண்ட இடைவெளிக்கு பின்னாடி உங்களை சந்திக்கிறேன்..” என நிமிர்ந்தவன், “என்ன சிவா? எப்படி இருக்க?..” என ஆதரவாய்க் இவனை நோக்கி கையை நீட்ட, கூச்சமாய் கை நீட்டினான் சிவா.
“வாங்க, உள்ளே வாங்க. இப்பதான் பேப்பர்ல உங்க கடை விளம்பரம் பார்த்தேன்..” என சங்கர் கணேசின் தோற்றத்தைப் பார்த்து பிரமிப்போடு பேசினான் சிவா.
தொடர்ந்து வந்த ஐந்து நிமிடங்களில் பரஸ்பரம் அறிமுகம் முடிந்ததும், “மாணிக்கம் ஐயா, நீங்க இந்த ஊர்ல இருக்கிறது எனக்கு தெரியாது. நான் வேலை நிமித்தமா பத்து வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நம்ம நாட்டுக்குத் திரும்பணும்னு ஆசைப்பட்டு, நம்ம ஊருக்கு வந்து, அதற்கான வேலைகள்ல இறங்கினேன். அப்பத்தான், போன வாரந்தான், நான் உங்களக் கண்டுபிடிச்சேன்..” சஸ்பென்ஸ் வைத்தான் சங்கர் கணேஷ்.
“சங்கர், நீ என்னப்பா சொல்ற? எப்படி?..” மாணிக்கம் புருவத்தைச் சுருக்க, “ஐயா நான் என் கடையோட புதுக்கிளை திறக்கிற பரபரப்பில இருந்ததினால, விபத்து அன்னிக்கு உடனே கிளம்பிட்டேன். இப்ப, உங்களுக்கு நெற்றியில் ஏற்பட்ட காயம் ஆறிடுச்சுங்களா?” என விசாரிக்க, தன்னைக் காப்பாற்றியது, தன்னுடைய பழைய மாணவன் சங்கர் கணேஷ் எனப் புரிந்ததும், அப்படியே அவனைத் ஆறத் தழுவினார் மாணிக்கம்.
“நீயாப்பா என்னைக் காப்பாத்தினது.. ரொம்ப நன்றிப்பா..” என மாணிக்கம் கும்பிட, “ஐயா.. நீங்க என் தெய்வம். நான் தான் கும்பிடணும். என்னுடைய இந்த வளர்ச்சி, நீங்க கொடுத்த படிப்பு, ஒழுக்கத்தினால வந்தது.”
“எப்போதுமே, உன்னையத் தான் பெருமையா பேசுவாரு இவரு. இனிமே, ம்..” எரிச்சலாய் சிவா.
அடுத்த நாள், சங்கர் கணேஷ் சொன்னபடி, கார் காலையிலேயே நேரத்துக்கு வந்துவிட, மாணிக்கம், தனது மகன், மருமகள், பேரன் முகேஷ் சகிதம் காரில் மிதந்து கடையை அடைந்தார்.
பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் ‘பளிச்’களுக்கு இடையே நின்ற சங்கர் கணேஷ், “ஐயா, மாணிக்கம் ஐயா, முன்னாடி வாங்க. நீங்க தான் என் கடையோட ரிப்பன் வெட்டணும். உங்களுக்கு நான் சின்ன பரிசு கொடுக்கிறேன். அதை கண்டிப்பா நீங்க வாங்கிக்கணும்,” என்றவாறு, ஒரு தங்க மோதிரத்தை அவர் விரலில் போட, அதிர்ந்து போய் ஆச்சரியப்பட்டு போனார் மாணிக்கம்.
தொடர்ந்து பாராட்டிவிட்டு, சங்கர் கணேஷ், மாணிக்கத்தைப் பேச அழைக்க, “கணேஷ், என்னைய ரொம்பப் பெருமைபடுத்திட்ட. ஒரு ஆசிரியராத்தான், நான் என் கடமையைச் செய்தேன். அதுக்கு இப்படியொரு கௌரவமா? சொல்லப்போனா, இன்றைக்கு நான் ஆசிரியரா அடைந்திருக்கிற ஆனந்தம், ஒரு அப்பாவா இருக்கிற ஆனந்தத்தை விட உயர்வா நினைக்கிறேன்...” பேச முடியாமல் மாணிக்கம் தடுமாற, ஓடிச்சென்று அவரை நாற்காலியில் சங்கர் கணேஷ் அமர வைத்ததும், தன் மகன் சிவாவைப் பார்க்க, நல்லாசிரியர் மாணிக்கம் 'விஸ்வரூப'மாய் தெரிந்தார் அவனுக்கு.