சிறுகதை: திக் திக் திகில் கதை - இன்னும் ஐந்து செகண்டுகள்தான்!

Tamil Short Story - Only Five Seconds to Go!
Man talking on the phone
Published on

படுவேகத்தில் வந்துகொண்டிருந்தது எக்ஸ்பிரஸ் ரயில். சுமார் இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் எச்சரிக்கைக் கம்பங்கள் பச்சையாய் வழிகாட்ட, எந்தத் தடையுமில்லாததால் தாராள வேகத்துடன் வந்துகொண்டிருந்தது. புலர்ந்துவிட்ட காலையின் 7 மணிப் பொழுது. இன்னும் ஒரு மணிநேரத்தில் பிரதான ஸ்டேஷனை அடைந்துவிடலாம். அவருடைய பார்வை மட்டும் முன்னே நீண்டு செல்லும் தண்டவாளத்திலும் அதிலிருந்து பிரியும் அல்லது வந்து சேர்ந்துகொள்ளும் தண்டவாளங்களிலுமே பதிந்திருந்தது. தொலைவில் தெரியும் பச்சை சிக்னலையும் அவ்வப்போது கவனித்துக்கொண்டார்.

ஐயோ இதென்ன, ஒரு இளைஞன் இந்த ரயிலின் தண்டவாளத்துக்கு அருகில் வருகிறானே! மடக்கிய வலது கை, வலது காதில் செல்போனை அணைத்து கொடுக்க, யாரிடமோ, எதையோ பேசிக்கொண்டு வருகிறானே. அடப்பாவி! தண்டவாளங்களைக் கடந்து போய்விடுவான் என்று பார்த்தால், இரண்டுக்கும் நடுவில் கொஞ்சம்கூட ஆபத்தை உணராமல் ஸ்லீப்பர் கட்டைமேல் நடந்துபோய்க் கொண்டிருக்கிறானே!

பதறிப் போனார் டிரைவர். மிக அழுத்தமாக ஹாரனை இயக்கினார். அது உலகத்தையே உலுக்கிப் போட்டாலும், அந்த இளைஞன் மட்டும் எந்த சலனமுமில்லாமல் நிதானமாக நடக்கிறானே! இன்னும் அதிகபட்சம் பத்து செகண்டுகளுக்குள் அவனை ரயில் மோதிவிடுமே! உடலே வியர்த்தது அவருக்கு. என்ஜினை இயக்கும் கைப்பிடியிலிருந்து கையை எடுத்தால், அதனால் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாமே தவிர, இளைஞன் மீது மோதுவதைத் தவிர்க்கவே முடியாது. அவனைத் தாக்கிவிடாதபடி கட்டுப்படுத்த இப்போது அதிரடியாக பிரேக் பிடித்தால் அது அந்தப் பையனை மோதாமல் நிற்குமா என்பதும் சந்தேகமே. அதோடு சில கிளை தண்டவாளங்கள் இந்த தண்டவாளத்துடன் அடுத்தடுத்து இணையவோ, பிரியவோ போகின்றன என்பதால், அப்படி பிரேக் பிடித்தால், ஒருவேளை ரயில் தடம் புரளக்கூடும். அப்படி தடம் புரண்டால், ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள், இறப்பு அல்லது படுகாய ஆபத்துக்குள்ளாவார்களே…

படுவேகமாகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்த மரங்கள், கட்டிடங்கள் எல்லாம், அந்த இளைஞன் தன் முடிவை வெகுவாக நெருங்கிக்கொண்டிருப்பதை அவசர அவசரமாக அறிவித்தன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இருட்டை மீறி திமிறிய உருவம்!
Tamil Short Story - Only Five Seconds to Go!

இப்போது என்ன செய்வது? அந்த ஒருத்தனைக் காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பயணிகளை ஆபத்திற்குள்ளாக்குவது முறையா? அல்லது இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒருத்தன் போனால் பரவாயில்லையா? குழம்பித் தவித்தார் டிரைவர். இன்னும் ஐந்து செகண்டுதான்....

இரண்டாவதுதான் சரி. இந்த இளைஞன் பலியாகட்டும். ஆனால் அது, கொலையல்லவா? ஒருவர் இன்னொருவர் மீது கடுங்கோபம் கொண்டு தாக்கினாலோ அல்லது தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கும்போதோ அது கொலையில் முடியலாம். ஆனால் இது எதில் சேர்த்தி? எந்த முன் விரோதமும் இல்லாத, தற்காப்புக்கான எந்த அவசியமும் இல்லாமல் நேரப்போகும் இந்தக் கொலை எதில் சேர்த்தி? ‘விபத்து’ என்று அலட்சியமாகச் சொல்லித் தப்பித்துவிட முடியுமா? இந்த ரயில் என்ஜின், இந்த இளைஞனை என் கண்ணெதிரிலேயே கொல்லப் போகிறதே, இதனை விபத்து என்று சொல்லி சமாதானமாக முடியுமா? இந்தக் ‘கொலை‘யால் அந்தப் பாவம், தன்னையும், தன் குடும்பத்தையும் துரத்துமா? என் வாரிசுகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமா? அட, நான்தான் இந்தக் கொலைக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்க முடியுமா? இந்தச் சம்பவம் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சை அறுத்துக்கொண்டிருக்குமே!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அரை ஏக்கர் தென்னை; ஐம்பது ரூபாய்!
Tamil Short Story - Only Five Seconds to Go!

இப்பொது இவன் இறந்தால், மறுநாள் செய்தித்தாளில் தகவல் வரும்: ‘‘செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர் ரயில் மோதி மரணம்.’’ ஆனல் அவனைப் போலவே செல்பேசிக்கொண்டு ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடப்பவருக்கு எச்சரிக்கையாக இருக்கட்டுமே... ஆனால்… அதற்காக இவன் கொலையாக வேண்டுமா?

விபத்தைத் தவிர்க்க வேறு எந்த உத்தியும் தோன்றவில்லையே! கடவுளே என்னை மன்னித்து விடு. இந்த இளைஞனை என்ஜின் மோத, அவன் சிதறி பல துண்டுகளாக ஆங்காங்கே விசிறியடிக்கப்படப் போகிறான்...

பெரும் துயரத்துடன் கண்களை மூடிக்கொள்ள டிரைவர் முயன்றபோது... அட, இதென்ன, யாரோ ஒருவர் அவனருகே ஓடி வந்து அவனை அப்படியே பிடித்து தண்டவாளத்தை விட்டு வெளியே தள்ளிவிட்டு, தானும் அவனைக் கட்டிப் புரண்டபடி தண்டவாளத்தை விட்டு ஒதுங்குகிறாரே!

நன்றி கடவுளே! பெருமூச்சிட்டார் டிரைவர். ரயில் வேகம் குறையாமல், சந்தோஷ நிம்மதியுடன் அந்த இடத்தை வேகமாகக் கடந்தது.

இது நிஜமா? இல்லை திரைப்படமா? தன்னைத் தானே கிள்ளி பார்த்து கொண்டார் டிரைவர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com