- சன்மது
ஓலை குடிசை மிக அழகு. அதிலும் மலையில் உள்ள ஓலை குடிசை அதைவிட அழகு. நீண்டு வளர்ந்த மரத்தின் இலைகளின் முகத்தில் மறைந்து கொள்கிறான் பரிதி. அந்த ஒற்றை குடிசை அந்த மலையின் அரணாக தனிமைகொண்டது. மாலை சாயம் நிமிடத்திற்கு நிமிடம் வெளுத்துக்கொண்டே போனதால் பறவைகளின் தேடல் குரல் அமைதிக்கு வந்தது. வனம் ஒரு கணம் மௌனத்தால் கனம் கொண்டது.
“கொல்... கொல்... என குடிசைக்குள் இருந்து வந்த இரும்பல் சத்தம் அந்த வனத்தை சற்று அசைத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதே சத்தம்…
அந்த இரவில் எழுந்து கொள்ளும் காட்டின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தான் மணி. வெள்ளை நிறம் கொண்டவன் ஆங்காங்கே கறுப்புப் புள்ளிகள். பின்னங்காலில் அமர்ந்துகொண்டு நாக்கை சுழற்றி கொண்டவன் காது அந்த இரும்பல் வரும் திசையை நோக்கி அசைந்தது. சற்றும் தாமதிக்காமல் குடிசைக்குள் ஓடினான்.
அகவை முதிர்ந்த சோலையம்மாள் உடலை குறுக்கிக்கொண்டு ஒரு போர்வைக்குள் அகப்பட்டு இருந்தாள். மணி காதை மடித்து வாலை ஆட்டிக்கொண்டு சோலையம்மாளை சுற்றி சுற்றி வந்தான். சிறிதுநேரத்தில் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு உற்று பார்த்தவன், பிறகு கால்களை நீட்டி வாயில் மூச்சு விட ஆரம்பித்தான்.
"ஏன்டா மணி... ம்... (கொல்... கொல்...) அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லைடா... (கொல்... கொல்...)"
பேசிய பாஷை புரிந்தது போல வாலை ஆட்டிக்கொண்டான்.
மனித நடமாட்டம் இல்லாத காட்டின் ஒரு பகுதிக்குள் தனித்தே வாழ்ந்து பழகியவர்களின் கதையை காடு அறியும். அவர்களிடம் தொலைந்ததை அந்த வனம் பத்திரப்படுத்தியது. அவர்களின் பசியை அங்கிருக்கும் மரங்களும், செடிகளும் தீர்த்துவைத்தது. மனிதர்களின் வாடையை அறவே ஒதிக்கிக்கொண்டவர்களின் மனதில் ஒரு சிறிய ஓடை போன்று உருண்டது வாழ்க்கை.
எப்போதும் போல கோர இருட்டின் பிடியில் இருந்தது காடு. வெளியில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த மணி விருக்கென வெளியில் வந்தான்.
ஒரு உருவம் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததிற்கான சுவடு இலைகளின் அசைவொலியில் இருந்தது. சற்றே கிலி கொண்ட மணி இந்த முறை தைரியத்தை வரவழைத்து கொண்டு குரைக்க ஆரம்பித்தான்.
சில வினாடிகள் இடைவெளியில் மீண்டும் காய்ந்த சருகுகள் நொறுங்கும் சத்தம் கேட்டது. இந்த முறை மணியின் ஒலி அடி தொண்டையில் சத்தமில்லாமல் உறுமிக்கொண்டது. காது முன்னும் பின்னுமாக காற்றை சல்லடை இட்டது. மணி இருட்டில் தெரிந்த கருப்பு மரங்களை உற்றுப் பார்த்தான்.
மரம் காற்றின்றி மெதுவாக அசைந்தது. இந்த முறை மணியின் கால்கள் பின்னோக்கி நகர்ந்தன. உருவமற்ற ஒன்று முன்னேறி வருவது போல இருந்தது.
தடாலென்று ஒரு பெரிய உருவம் இருட்டை மீறி திமிறியது.
மலையென நின்றவற்றுக்கு இரண்டு பெரிய கொம்பு அந்த வனத்தின் கோர பற்களாக வாய்பிளந்தது. எதிர்பார்த்ததை போல் மணி தன் உடலை மடக்கி இடதுபுறம் காற்றில் நீந்துவதற்குள்...
அனகோண்டா போன்ற ஒன்று மணியை சுற்றியது...
கொம்பன் (யானை) இன்று வேறொரு உருவம் கொண்டவனாய் காட்சி அளித்தான். கொம்பன் அந்த காற்றிக்கு ராஜா. இரவில் அவனுக்கு எதுவும் கிடைக்காவிட்டால் அவன் கிடைத்ததை விடுவதில்லை.
மணி கொம்பனின் பிடியிலிருந்து நழுவி கால் சந்திற்குள் புகுந்து கிழக்குப் பக்கமாக ஓடினான். இப்பொது மணியை மரணத்தின் பிடியில் சற்று அவகாசம் கிடைத்தவனாய் குரைப்பதை மறந்து ஓடினான்.
மேற்கு நோக்கிய தன் உடலை கிழக்குப்பக்கம் திருப்பும் முயற்சியில் இருந்த கொம்பன் அதீத முயற்சியால் முன்னங்காலை ஊன்றி மிக ஆக்ரோஷமாக திரும்பினான். தன் தும்பிக்கையால் இருட்டில் மணி தூண்டில் போட்டுக்கொண்டு நகர்ந்தான். கொம்பனின் கால் படும் இடம் எல்லாம் பொடியாய் நொறுங்கியது.
மணியின் மனதில் ஒருபுறம் எமனும் இன்னொருபுறம் சோலையம்மாளும் வந்து வந்து போனார்கள்... சிறுத்தையின் வேகத்தை கடன் வாங்கியது போல இருந்தது அந்த ஓட்டம். நம்பிக்கையை மட்டும் பத்திரப்படுத்திக்கொண்டே வந்தான் மணி. மாதத்தில் இரண்டு முறை கொம்பனிடம் சிக்குவான் மணி. ஆனால் வீட்டினுள் ஓடி மறைந்து கொள்வதால் தப்பித்துக்கொள்வான். இந்த முறை பிடி நங்கூரமாக இருந்ததால் திசை மாறிவிட்டது. ஒவ்வொரு தும்பிக்கை தேடலிலும் தப்பித்து கொண்டே வந்தவன், வலது புறம் இருந்த பள்ளத்தில் இடறி சரிந்தான் .
மின்னலென வந்துகொண்ட கொம்பன் சற்று நிதானித்து தன் சிறிய கண்களில் முரட்டுப் பார்வையை சிதறவிட்டான். தலையை இடதுபுறமும் வலதுபுறமுமாக வேகமாக திருப்பி தன் ஆற்றாமையை கூர் கொம்பால் காற்றில் வரைந்துகொண்டான். பள்ளத்தில் விழுந்த மணி மண்ணில் கிளைகொண்ட ஒரு மரத்தின் வேரில் மாட்டி தன்னை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருந்தான். அந்த பள்ளம் அதல பாதாளமாய் நீண்டது. ஒரு புறம் கொம்பன் மறுபுறம் பாதாளம். மணி மூச்சற்று நின்றான். அவன் வாயிலிருந்து உயிரை புதைக்கும் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. மணியின் கண்கள் எல்லாப்பக்கமும் சுழன்றது. உடல் ஒரு நிலைகொள்ளாமைக்குள் போய் போய் வந்தது.
மெதுவாக சந்திரன் மரத்தின் இடைவெளியில் வெள்ளொளியை சிந்திக்கொண்டபோது வனம் பெருமூச்சுவிட்டது.
அசையாமல் நின்ற கொம்பன் திரும்பி பக்கவாட்டில் இருந்த ஒருமரத்தின் முதல் கிளையை உடைத்துக்கொண்டு நகர்ந்தான்.
வெகு நேரமாய் மறந்துபோன மணியின் குரைத்தல் இப்பொது சற்று ஒலிகண்டது. ஒவ்வொருமுறை ஏற எத்தனிக்கும் போதும் சறுக்கிய மணல் முற்றிலும் பள்ளமானது. இதற்குமேல் பள்ளம் தோண்டினால் அடுத்தது பாதாளத்தில் மரணம் தான் என்ற சித்தாந்தத்தின் விளிம்பில் நின்றவாறு வாயில் மூச்சுவிட்டுக்கொண்டான் மணி. விட்டால் சரிந்து கொள்வோம் என்பதால் மெல்லிய வேரை முன்னங்கால்களில் தாவிப்பிடித்துக்கொண்டான்.
சோலையம்மாள் வெகுநேரமாய் மணியின் குரல் கேட்காமல், இரும்பிக்கொண்டே மணியை தேடினாள். தன் போர்வையுடன் அந்த அறையின் இருளை கவர்ந்த லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.
இரவின் பனி இறங்கிக்கொண்டதால் குளிர்ந்த காற்றின் பிடியில் மணி தனக்கு பின்னால் இருந்த பாதாளத்தை மறந்துகொண்டது போல திரும்பிக்கொண்டான். தன்னை சுமந்து கொண்ட மெல்லிய வேரும் முறிந்து கொள்வது மணியை இன்னும் ரணமாகியது. மணி தன் உடலை அசைக்காமல் கத்தி பார்த்தான். உணர்ச்சியற்ற வேர் சற்றும் நிதானிக்காமல் இன்னொரு முறை விலகி கொண்டது.
நூல் போன்ற ஒரு வேரின் நுனியில் தன் உயிரை நிறுத்திக்கொண்ட மணி நம்பிக்கையற்று காணப்பட்டான். அடித்த காற்றில் முழுவதுமாய் கைவிட்டது வேர். இந்த முறை சோலையம்மாள் தன்னை இறுதியாய் முத்தமிடுவது போல இருந்தது. வாழ்வின் முடிவில் வலிகொண்ட நொடிகளாய் கண்ணீர் சுட்டது. வானத்தில் தெரிந்த நிலா மிக அருகாமையில் ஒளிரியது. கொம்பனின் வாய் என பாதாளம் தெரிந்தது. மூச்சு முதலும் கடைசியாய் உயிர் தொட்டு வெளியேறியது. கவலை நிரப்பிய கண்கள் மூடிக்கொண்ட பொழுதில்…
தன் இடதுகையை… ஒரு கரம் இறுகப்பற்றியது.
சோலையம்மாள் தன் இடது கையை ஒரு மரத்தின் அடிவேரை பிடித்துக்கொண்டு தனது வலது கையால் மணியின் இடது முன்னங்காலை பற்றி இழுத்தாள். இழுத்த இழுப்பில் மணி மேட்டுப்பகுதிக்கு வந்து விழுந்தான். விழுந்தவுடன் சோலையம்மாளை எட்டி எட்டி அன்பால் கடித்துக்கொண்டான்.
கண்ணீரும் வாயில் இருந்த எச்சிலும் அந்த பூமியை நன்றியால் ஈரமாகின.
ஒன்றும் புரியாமல் இருந்த சோலையம்மாள் "ஏன்டா... இங்க வந்து விழுந்த..."
கொம்பனின் பார்வையில் சோலையம்மாளை பார்த்தான் மணி. வனம் மீண்டும் சயனம் கொண்டது…