
நாளைக்குத் தேர்வு. வீட்டுப் பலகணியில் நாற்காலி போட்டு, புத்தகம் விரித்து ஆழமாய், தீவிரமாய் படிக்க வேண்டும் என்று ஆசை. வேதியியல் ஒன்றும் ஆசையாய்ப் படிக்க வந்ததில்லை. நல்ல கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் இன்ஜியரிங் படித்தால் படிக்க வேண்டும். இல்லையெனில் ஏதேனும் ஒரு கலைக்கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிக்கலாம் என்று அப்பா கூற நாமும் பெரியாளாக வேண்டும் என்று எதையாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளும் வேகத்தில் வேதியியலைப் பற்றிக் கொண்டது தான்.
அப்பொழுதும் கூட பன்னிரெண்டாம் வகுப்பில் பட்ட அடி, வேதனை, வலி மிச்சமிருந்தது. அதன் காரணமாக வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேகமும் இருந்தது. கல்லூரி காட்டிய வழியில் மெத்தவும் சோம்பலில்லாமல் 80 விழுக்காடு எடுத்து இதோ இப்போது ஒரு கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் வழியில் படித்த நான் இளங்கலையில் தமிழும் ஆங்கிலமும் கலந்து பாடம் நடத்திய பேராசிரியர்களின் உதவியோடு படிக்க முடிந்தது. முதுகலைப் படிப்பில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்தும் பேராசிரியர்களிடமிருந்து குவாண்டம் வேதியியலைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. பெரும்பாலும் பாடப்பகுதிகள் எங்கள் வசமே செமினார் எடுப்பதற்காகப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒவ்வொரு பேப்பரையும் பாஸ் ஆவதற்குள் விழி பிதுங்கி விடுகிறது.
ஆசையாய்ப் படித்ததெல்லாம் பத்தாம் வகுப்போடு போயிற்று. அப்பொழுதும் கூட விளையாட்டாய், பெருமையாய் நான் வகுப்பில் முதல் என்று கர்வப்படுவதற்காகப் படித்ததாகத் தான் ஞாபகம். மேல்நிலையில் கிரிக்கெட் பைத்தியம். கல்லூரி நாட்களில் தமிழ் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட தீவிர மோகத்தால் நல்ல சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டுகொள்ள… பின் என்ன? ஒரே தேடல் தான். கவிதை எழுதுகிறேன். கதை எழுதுகிறேன் என்று சமூக ஊடகங்களில் ஒரு அடையாளம் தேட முயன்று... படிப்பின் மீதான காதல் விலகிப்போய் விட்டிருந்தது. கிரிக்கெட்டும் சினிமாவும் இலக்கியமும் ஏதோ ஓர் வீதத்தில் ஒரு கலவையாய் என்னுள் ஐக்கியமாயிருந்தன.
முதுகலைப் படிப்பினை முடித்து விட்டு அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தேர்வெழுத வேண்டும். நான்காவது செமஸ்டர் இறுதியிலேயே ஏதேனும் வேதித் தொழிற்சாலைகளில் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். எங்காவது இன்டர்ன்ஷிப் போக வேண்டும். இந்த இலட்சணத்தில் காதல் வேறு. மனதில் வைத்திருந்ததை இவ்வளவு வளர்ந்து விட்டோமே என்று சம்பந்தப்பட்டவரிடம் தெரிவிக்க ... அங்கும் அதே நிலையாய்.... மனதில் நிலைத்தன்மையைப் பற்றிய பயம் வந்திருந்தது. சீக்கிரமாய் நல்ல (பணம் பண்ணக்கூடிய) வேலை ஒன்றைக் கைக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த முதுகலைப் பட்டம் உதவக்கூடும்.
ம்ஹும். பாழாய்ப் போன என் எழுத்து ஆசை சகப்பிணைப்பு சேர்மங்களை விட சக மனிதனிடம் ஆழ்ந்து அவனுக்குள்ளிருக்கும் இலக்கியத்தை வெளிக்கொணரத் தேடி அலைகிறதே….
எதிர் வீட்டு மாடியில் கூட்டமாய் ஐம்பதிற்கும் நூற்றிற்கும் இடைப்பட்ட ஏதோ ஓர் எண்ணிக்கையில் சிட்டுக்குருவிகள். இத்தனை நாளும் என் கவனத்தை ஈர்க்காமல் இன்றைக்குப் போய், வேகமாய், மொத்தமாய் சிறகடித்துப் பறந்து அத்தெருவையே முழுதாய் அல்லது பாதியாய் ஓர் சுற்று சுற்றி விட்டு மீண்டும் எதிர்வீட்டு மாடியில் வந்தமர்ந்தன.
மேற்கு வானில் மறையப்போகும் சூரியனின் ஒளி ஏதோ ஓர் இயற்பியல் தத்துவத்தின்படி கிழக்கு வானில் உயரமாய் இருந்த மேகத்தின் விளிம்பில் பொன்னிறத்தைப் பதித்து விந்தை கூட்டியது. கைவிரல் பிடித்து அப்பாவுடன் சாலையைக் கடந்த குழந்தை நடுச்சாலையில் அப்பாவை விட்டு நின்று கொண்டது. சாலையைக் கடந்த அப்பா பயந்து போய் மீண்டும் ஓடி வர தன் சாமர்த்தியத்தை வியந்த குழந்தை அப்பாவிற்கு அழகு காட்டியது. கிழக்கே தொலைவில் குச்சிக்குச்சியாய் கறுப்பாய், கன்னாபின்னாவென்ற ஓலைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் வரிசைப் பனைமரங்களுக்கு எதை ஒப்புமையாய் கூறலாம் என்ற குழப்பம்.
இவ்வளவையும் விட்டு மீண்டு(ம்) சகப்பிணைப்பு சேர்மத்திற்கு வந்தால் எனக்கும் வேதியியலுக்கும் தொடர்பே இல்லையே என்பது போல இருந்தது.
ம்ஹும். இனி தேற முடியாது. இந்தப் பேப்பர் அரியர் தான். அடுத்த செமஸ்டரில் எல்லாம் படித்து, எல்லாம் இரசித்து, இல்லையெனில் மற்றெல்லாம் விட்டு வேதியியலையே எனதாய் தியானித்து… நாளையைப் பற்றிய கனவுகளும் நேற்றைய நினைவுகளுமே நானாய்.... உங்களின் கதாநாயகன் தோற்பவனா? ஜெயிப்பவனா? எதுவாய் இருப்பினும் இவன் வழி உங்களுக்கு வேண்டாம்.