

இப்பொழுதெல்லாம் கல்யாணத்திற்கு பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. ராமசுப்பு ஏண்டா பிள்ளையைப் பெற்றோம் என்று சலித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார். பிள்ளை வெங்கட் எம்.எஸ் முடித்துவிட்டு அமெரிக்காவில் நிறைய சம்பளத்தில் பெரிய வேலையில் இருக்கிறான். அவன் தனியாக அமெரிக்காவில் இருக்கிறானே சீக்கிரம் கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று அவருக்குக் கவலை.
ஒரு இடத்தில், "பெண்ணை அமெரிக்காவுக்கு அனுப்பமுடியாது. அவள் இங்கே ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். பையைனை வேலையை விட்டு விட்டு வரச்சொல்லுங்கள்," என்றார்கள்.
வேறொரு இடத்தில் "வீட்டோடு மாப்பிளை வேண்டும்" என்று மறுத்துவிட்டார்கள்.
குடவாசல் கோபாலசாமி பெண்ணைக் கொடுக்கத்தயார்; ஆனால் பெண்ணின் சம்பளத்தை கேட்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். பையனிடம் கார், பங்களா உண்டா என்று கேட்டார்கள்.
ஒரு பெண்ணின் தாயார், அப்பா, அம்மா இல்லாத பையனாக பார்ப்பதாக சொல்லிவிட்டாள்.
தன் அண்ணா படும் அவதியைக்கண்டு தங்கை அம்புஜம் ஒரு நாள் தன் கணவனிடம் கேட்டாள்.