

அந்தக் காட்டின் வழியே துறவிகள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பானை நிறைய அதிகமான பணக்கட்டுகள் இருந்தன. அதைப் பார்த்த உடனே இவர்கள் பயந்து போய்,
“ஐயோ! உயிர்கொல்லி இங்கே கிடக்கிறது! உயிர் கொல்லி இங்கே கிடக்கிறது!” என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஒதுங்கிச் சென்றனர்.
பிறகு,
இரண்டு நபர்கள் அந்தக் காட்டின் வழியே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, அந்த உயிர்க்கொல்லியைப் பார்த்து சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் சைகை செய்து கொண்டார்கள். ஒருவனுக்கு இந்தப் பணத்தை முழுவதுமாக நாமே வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. மற்றொருவனும், இந்த பணத்தை நாம் அவனுக்கு கொடுக்காமல் மொத்தமாக நாமே வைத்துக் கொள்வோம் என்று எண்ணினான். அவர்கள் மனதில் நினைத்ததை சொல்லாமல், இந்தப் பணத்தை நாம் இருவரும் பங்கு பிரித்து வைத்துக் கொள்வோம் என்று ஒருவன் கூறினான்.
அதற்கு மற்றொருவனும் ஒப்புக்கொண்டான்.
“சரி இதனை எடுத்து நாம் அந்த மரத்தடிக்கு கொண்டு செல்வோம்! யாராவது வந்து விடுவார்கள்!” என்று பணம் அதிகம் உள்ள அந்தப் பானையை எடுத்து ஒரு மரத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.
இருவருக்கும் பசி ஏற்பட்டது. அப்போது ஒருவன், “நாம் இருவரும் பக்கத்தில் உள்ள கிராமத்திற்குச் சாப்பிட செல்வோமா?”
“வேண்டாம்! நான் இங்கே இருந்து இந்தப் பானையைப் பாதுகாத்துக் கொள்கிறேன். நீ சென்று நாம் இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு வா!”
“சரி நான் போய் வாங்கிக் கொண்டு வருகிறேன், நீ பத்திரமாக பார்த்துக்கொள்!” என்று கூறிவிட்டுச் சென்றான்.
அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவனுக்கும் உணவை வாங்கி, அந்த உணவில் விஷத்தை கலந்து எடுத்து வந்து கொண்டிருந்தான். இந்த உணவை அவன் சாப்பிட்ட பிறகு இறந்து விடுவான். இந்தப் பானை நிறைய உள்ள பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது.
மற்றொருவனும் அருகிலுள்ள மரத்திலிருந்து ஒரு கம்பை கூர்மையான ஆயுதமாக மாற்றி வைத்துக் கொண்டு இவன் வருகை நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.
அவன் வந்த பிறகு அவனை இந்த ஆயுதத்தை வைத்து கொலை செய்துவிட்டு அந்த பணப்பானையை முழுவதுமாக தானே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இவனுக்குள்ளும் எழுந்தது.
அவன் அருகில் வருவதைப் பார்த்து இவனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவனுக்கும் இவனைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கியது. ஒருவருக்கொருவர் மனதில் 'இந்த பணப்பானை எனக்கு மட்டும்தான் சொந்தம்' என்ற எண்ணம் ஊசல் ஆடிக் கொண்டிருந்தது.
உணவை கொண்டு வந்தவன், “இந்த உணவைச் சாப்பிடு சீக்கிரம். நாம் இந்த இடத்தை விட்டு உடனடியாக செல்வோம்!” என்றான்.
“நீ சாப்பிடவில்லையா? நான் சாப்பிட்டு விட்டு உனக்கு வாங்கி வந்தேன்!” என்று கூறி கீழே வைத்த போது, அவன் பின்புறத்தில் இருந்து அவனை தலையில் தாக்கி அந்த ஆயுதத்தால் கொலை செய்து விட்டான்.
அவனுக்கு மிகுந்த பசி இருந்ததால், 'இதனைச் சாப்பிட்டுவிட்டு, இந்தப் பணப்பானையை எடுத்துக் கொண்டு செல்லலாம்' என்று மிகுந்த மகிழ்ச்சியில் சாப்பிட தொடங்கினான். அந்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ரத்த வாந்தி எடுத்து அங்கேயே விழுந்து மயங்கி உயிரை விட்டான்.
உயிர்க்கொல்லிகளைப் பார்த்து துறவிகளைப் போல நாம் ஒதுங்கி தான் செல்ல வேண்டும். இல்லையென்றால், “உயிர் கொல்லி மனித உயிரைக் கொல்லும்” என்பது நிதர்சனமான உண்மையாகும்.