
“நண்பரே, ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களை மறக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய நினைவு தினத்தன்று சமாதியில் மலர் வைப்பது, படங்களை வணங்குவது, நினைவு நாள் கூட்டம் நடத்துவது என்று சில முறைகளை பின்பற்றுவது வழக்கம். அவையெல்லாம் அப்போதைய தலைப்பு செய்தி. சில நாட்களில் பழைய செய்தி.
மறைந்த என் தாத்தாவின் பிரேம் போட்ட படம் என் அப்பா உயிருடன் இருந்த வரை மாலை போட்டு வணங்கி மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. அப்பா இறப்புக்கு பின் தாத்தாவின் படம் பரண் மீது போடப்பட்டது. இப்போது என் அப்பாவின் படத்திற்கு நான் மாலை போடுகிறேன். அதற்கு பிறகு எனக்கு. என் தந்தையோ பரணில் படுத்திருப்பார். சில படங்கள் குப்பையில் போடப்படும்...
உலகில் முக்கிய நாவல்களில் ஒன்றான ‘கரமாஸவ் சகோதரர்கள்’ இல் தஸ்தயெவ்ஸ்கி கூறியுள்ளார். ‘இறந்தவர்களை நினைத்துக் கொண்டே இருங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்கிற அஞ்சலி’ என்று. 'ஆனால் நாமோ, மறக்க வேண்டிய பட்டியலில் மறக்க கூடாததையும் அல்லவா சேர்த்துக் கொள்கிறோம்' என்று இலங்கை வானொலியில் யாரோ ஒரு புதிய எழுத்தாளர் பேசிக் கொண்டிருந்தார்.