

சென்னை சாதாரணமாகத்தான் அன்றும் விழிக்கத் தொடங்கி இருந்தது. பறவைகள் ஜோடி ஜோடியாய் காலை உணவிற்காக காதல் பரிமாறி சுறுசுறுப்பாகப் பறந்துகொண்டிருந்தன. சாலை ஓரங்களில் ஆவின் பால் பைகள் தங்கள் தினசரி வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி காத்திருந்தன. செய்தித்தாள் போடும் பையன்கள் வண்டிகளில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகள் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.
சூரியன் சோம்பேறித்தனமாய் மேலே எழுந்துகொண்டிருந்தது. நாதனுக்கும் அது இன்னொரு சாதாரண நாளாகவே ஆரம்பமாகி இருந்தது. டிகாக்ஷன் காபி கொடுத்த காஃபின் உற்சாகத்துடன் இலங்கையின் எதிர்காலம் பற்றி செய்தித்தாளின் தலையங்கம் கண்டு கவலைகொண்டான். அமெரிக்க டாலர் அபரிமித வலிமையை வங்கிகள் பார்வையில் நோக்கி வியந்தான்.