

சிக்மா குழுமத்தின் உறவால் நாதனின் கிளை வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடைந்திருந்தது.
நாதனின் பெயரும் வங்கி வட்டாரத்தில் பிரபலமடைந்திருந்தது.
பிராந்திய மேலாளருக்கு மாற்றல், யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு நாள் வந்தது.
அவசரக் காரணங்களால் அடுத்த நாள் வேறொரு பிராந்தியம் சேரும் வண்ணம் விடுவிக்கப்பட்டார்.
அவர் இடத்திற்கு வந்த புதிய பி.மே. அடுத்த நாளே பொறுப்பு எடுத்துக்கொண்டார். அன்று மாலை புதிய பி.மே. பிராந்தியம் இணையும் விருந்து. பிராந்தியத்தில் இருந்த பதினாறு கிளை மேலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நாதனும் நாலு மணிக்கு பிராந்திய அலுவலகம் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்து தயாராகி இருந்தான்.
அப்பொழுது சிக்மா குழும வரவேற்பாளரிடம் இருந்து நாதன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
“நாதன் ஐயா! தலைமையகம் வரமுடியுமா உடனே தயவு செய்து”
“நாளை காலை வரட்டுமா. இன்றொரு அலுவல் உள்ளது”
“எதிர்மறையான பதிலை தியாகராஜ் அவர்கள் விரும்ப மாட்டார்.”
நாதன் முடிவெடுத்துவிட்டான்.