

தமிழின் பெருமையை முழுவதுமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால், அதன் பெருமையைச் சொல்ல முயன்ற நூல்கள் பல; தம்மால் முடிந்த வரையில் தமிழின் பெருமையைக் கூற விழைந்த புலவர்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட நூல்களில் அரிய ஒரு நூலாகத் திகழ்வது தமிழ் விடு தூது என்னும் தூது நூல். இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
தமிழில் அரிய நூல்களின் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பல அரிய நூல்களை வெளியிட்ட மகாமகோத்பாயாய ஶ்ரீ உ. வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் இந்த நூலை 1930ம் ஆண்டு வெளியிட்டார்.
96 வகை பிரபந்தங்களில் தூது என்பதும் ஒரு வகை பிரபந்த நூல். 268 கண்ணிகளைக் கொண்டது இந்த நூல். ஒரு கண்ணியில் இரண்டு அடிகள் இருக்கும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (கண்ணி எண் 151)
என்ற வரிகள் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய வரிகளாகும்,
இந்த நூல் மதுரை சோமசுந்தரக் கடவுளின் மீது காதல் கொண்ட ஒரு தலைவி விரக்தியால் துன்புற்று, தமிழையே அவர் பால் தூது விடுத்ததாக இயற்றப் பெற்றது.
“கபிலர், பரணர், நக்கீரர் உள்ளிட்ட சங்கத்து மேலோரும், ஐயடிகள் காடவர் கோன். கழற்றறிவார், திருமூலர், தெய்வத் திருவள்ளுவர் உள்ளிட்ட மேலோர் உன் புகழைப் பெருக்கினர்.
இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் ஆகிய நான்கு சொற்களையும் அகத்திணை ஏழையும் புறத்திணை ஏழையும் நீ கொண்டிருக்கிறாய். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் ஆகிய எட்டையும் முப்பத்தைந்து அலங்காரங்களையும் கொண்டு நீ திகழ்கிறாய்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட நூல்களைக் கொண்டு இலங்குகிறாய்.
கம்பர், ஒட்டக்கூத்தர், வில்லிப்புத்தூரார் போன்ற மகாகவிகள் உன்னை அலங்கரித்துள்ளனர்.
உனது நூல்கள் மனத்து இருளை மாற்றும் திறன் வாய்ந்தவை.
அகத்தியருக்கு முருகன் அன்றோ தமிழை உணர்த்தி அருளினான்.
சோமசுந்தரக் கடவுளுக்கு நீ பொருளாக வந்தாய். (இறையனார் அகப்பொருள் நூலாக வந்தாய்)
திருவள்ளுவரின் ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் அன்றோ!
சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவை நாச்சியாரிடம் தூது சென்றாய்.
ஞானசம்பந்தருக்காக ஆண் பனையைப் பெண் பனை ஆக்கினையன்றோ!
திலகவதியாருடன் திருநாவுக்கரசரைப் பிறப்பித்தாய்.”
இப்படி வரிசையாக பல தமிழ் பெரியார்களின் அரும்செயல்களை தமிழ் விடு தூது என்னும் தூது நூல் குறிப்பிடுகிறது.
காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், திருவையாறு, மதுரை உள்ளிட்ட பதினைந்து பெருநகரங்களை நூல் குறிப்பிடுகிறது.
ஊமை தமிழை அறிவித்தது, இரசவாதம் செய்தது உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட திருவிளையாடல்களை நூல் விளக்குகிறது.
சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாயன்மார்கள், பெரியார்களின் வரலாற்றை நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழின் அருமையை சுவைபட நூல் சொல்லும் போது வியந்து பிரமிக்கிறோம்.
தமிழின் அருமை பெருமைகளை புலவர் இப்படிக் கூறுகிறார்:
“தேவர்களுக்கு உரிய குணங்கள் சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள் மட்டுமே தான் உள்ளன. உனக்கோ அறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணவணிகள் அன்றோ உள்ளன!
ஆக, தேவர்களை விட நீ உயர்ந்தல்லவா இருக்கிறாய்!
வெண்மை, செம்மை, கருமை, பொன் நிறம், பசுமை என்று வண்ணங்கள் மொத்தம் ஐந்து தான். உனக்கோ வண்ணங்கள் நூறு உள்ளன.
கசப்பு, புளிப்பு, துவர்ப்பு உள்ளிட்ட சுவைகள் உணவிற்கு ஆறே தான் உள்ளன. உனக்கோ ஒன்பது சுவைகள் உள்ளன.
உனக்கு அழகு எட்டு அழகுகள் உள்ளன. அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழை ஆகிய எட்டு வனப்பு உனக்கு உண்டு அல்லவா?”
இப்படி தமிழின் அழகை இந்நூல் வர்ணித்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
தமிழ் ஆர்வலர்களும், தமிழர்களும், தமிழை கற்க ஆசையுடன் வரும் அயல் மொழி வல்லுநர்களும் தவறாது படித்து மகிழ வேண்டிய நூல்களுள் முதல் இடத்தைப் பிடிக்கிறது தமிழ் விடு தூது. படிப்போம்; தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்புவோம்!
