யார் இந்த ஆரோக்கிய ராஜீவ்? தடகளத்தில் இவரின் சாதனைகள் என்னென்ன?

Athlete Arogya Rajeev
Athlete Arogya Rajeev
Published on

விளையாட்டுத் துறையில் பல இளைஞர்கள் சாதனை படைத்து வருகின்றனர். கிரிக்கெட்டை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளைப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இருப்பினும் கைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, தடகளம் மற்றும் பல விளையாட்டுகளில் இளைஞர்கள் அதீத ஆர்வமுடன் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்நிலையில், தடகளத்தில் சாதனைப் படைத்த திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியத் தடகள வீரரான ஆரோக்கிய ராஜீவ், தடகளத்தில் சாதனைப் படைத்தது மட்டுமின்றி நாட்டுக்காக பல்வேறு பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளார். ராஜீவ் 1991 மே மாதம் 22 இல் திருச்சியில் பிறந்தார். தடகளத்தில் ஆர்வம் கொண்ட இவர், இடைவிடாத பயிற்சியின் மூலம் தற்போது சாதித்தும் காட்டியுள்ளார். இவர் இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் படைப் பிரிவில் 8-வது பட்டாலியனில் சுபேதராக கடந்த 2011 ஆம் ஆண்டில் சேர்ந்தார். தொடக்கத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்று விளையாடிய ராஜீவ், அதன்பின் 400மீ ஓட்டப் பந்தயத்தில் தனது முழுகவனத்தையும் செலுத்தினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் 400மீ ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி வரைச் சென்று, 46.63 விநாடிகளில் எல்லைக் கோட்டைக் கடந்து 6-வது இடத்தைப் பிடித்தார். 2014 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டின் 400மீ ஓட்டப் பந்தயத்தில் எல்லைக் கோட்டை 45.92 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜீவ், 4*400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். ரியோ ஒலிம்பிக் (2016) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் (2020) தொடர் ஓட்டத்திலும் இவர் பங்கேற்று விளையாடினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆரோக்கிய ராஜீவ் இடம் பிடித்திருந்த இந்திய அணி, பதக்கம் வெல்லத் தவறியது. இருப்பினும் முந்தைய ஆசிய மற்றும் தேசிய சாதனைகளை முறியடித்து, 3 நிமிடங்கள், 25 விநாடிகளில் எல்லைக் கோட்டைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தது.

இதையும் படியுங்கள்:
MI Vs LSG: இரு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதல்!
Athlete Arogya Rajeev

ராஜீவ் வென்ற பதக்கங்கள்:

  • ஆசிய விளையாட்டு: 2014ல் ஒரு வெண்கலம் (400மீ), 2018ல் ஒரு தங்கம் (கலப்பு 4*400 மீ), 2018ல் ஒரு வெள்ளி (ஆண்கள் 4*400 மீ)

  • உலக இராணுவ விளையாட்டு: 2015ல் ஒரு வெள்ளி (400மீ)

  • தெற்காசிய விளையாட்டு: 2016ல் இரண்டு தங்கம் (400மீ மற்றும் 4*400 மீ)

  • ஆசிய விளையாட்டு: 2017ல் ஒரு தங்கம் (4*400 மீ), ஒரு வெள்ளி (400மீ)

  • தடகளத்தில் ராஜீவ் படைத்த சாதனைகளை கௌரவிக்கும் விதமாக, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதானஅர்ஜுனா விருது கடந்த 2017 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. பகாமாசில் வரும் மே 4 முதல் 5 வரை நடைபெற உள்ள உலக தடகள 2024 தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக, ராஜீவ் அடங்கிய இந்திய அணி சென்றுள்ளது. இவர்கள் அங்கு சாதிக்கும் பட்சத்தில் அடுத்து நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.

'ராஜீவ் ராக்ஸ்' என்ற தலைப்புச் செய்திகளை விரைவில் எதிர்பார்ப்போம்! All the best Rajiv..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com