

‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே!’
என்கிறது நம் தமிழ் இலக்கியம். ஏனெனில் கல்வியின் தன்மை அப்படிப்பட்டது.
பிச்சை எடுத்தாவது படித்து விட வேண்டுமாம். உண்மைதானே!
கல்லாதவர்களின் கண்களும், புண்கள் என்றல்லவா புகலுகின்றார் தெய்வப் புலவர். அந்தக் கல்வியை நமக்குக் கொடுப்பவர்கள் தெய்வத்துக்கு முந்தைய நிலையிலுள்ள (மாதா, பிதா, குரு, தெய்வம்) ஆசிரியர்கள் (Teachers) அல்லவா?
பெரியசாமி வாத்தியார் என்றால் அந்த ஊர் மட்டுமல்ல, பக்கத்துப் பல ஊர்களும் எழும்பி நிற்கும். ஆமாம்!எல்லோரிடமும் அவர் பெயர் பிரபலம்! பெரும்பாலானவர்கள் அவரின் மாணவர்கள்தானே. வறுமையுடன் கை கோர்த்தபடி அவர் வாழ்ந்தாலும், அவரிடம் படித்தவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தர அவர் என்றுமே தயங்கியதில்லை.
அந்தக் காலத்தில் ‘சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாது!’ என்று பள்ளி மாணவர்களிடம் கூறினால், அவர்கள் உடனடியாக ‘எங்க வாத்தியாரல கூடவா முடியாது?’ என்று கேட்பார்களாம். பெரியசாமி வாத்தியாரைப் போன்றவர்களைப் பார்த்துத்தான் அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். அவர் வாத்தியார் மட்டுமல்ல. உள்ளூர் போஸ்ட் மாஸ்டரும் அவர்தான். ஊருக்கு வருகின்ற பெரும்பாலான கடிதங்களைப் படிப்பதும், பதில் எழுதுவதும் அவர்தான்!அந்தச் சேவை மனப்பான்மையே அவரை உயரத்தில் தூக்கி வைத்திருந்தது.
பாடஞ் சொல்லிக் கொடுப்பதில் அவர் விளையாட்டாகவே சில புதுமைகளைப் புகுத்துவார். எதனையும் எளிதாக மனதில் இறுத்தும் விதமாக அது அமைந்திருக்கும். வாழ் நாளுக்கும் நமக்கு அது மறக்காது!
ஒரு நாள் வகுப்பில் "இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்?" என்று கேட்டு, ரஞ்சனை எழுப்பினார். அவனுக்கோ தெரியவில்லை. விழித்தான்.
"என்ன ரஞ்சா? இது கூடவா தெரியவில்லை! நேராப் பாரு!" என்றார்.
அவ்வளவுதான். "சார்! ஜவஹர்லால் நேரு!" என்றான்.
இன்றைக்குக் காலையில் கூட நான் இருக்கும் பகுதியில் ஓர் உறவினரின் வீட்டைக் கண்டு பிடிக்க, ஊரிலிருந்து வந்திருந்த நண்பனுடன் டூ வீலரில் சென்ற போது, வழியிற் சென்றவரிடம் முகவரியைக் கூறி நண்பன் கேட்க, அவரோ, "நேராப் போயி லெப்ட்ல திரும்பினா ரெண்டாவது வீடுதான்" என்றார். நேராப் போயி என்றதுமே, மனதில் நேருவும், கூடவே பெரியசாமி வாத்தியாரும் ஞாபகத்திற்கு வந்து விட்டனர்! பல பத்து வருடங்களுக்குப் பிறகும்!
பிறிதொரு நாள் பொது அறிவுக் கேள்விகளுக்கான நேரத்தில் அவர் கேட்ட கேள்வி, "எவரெஸ்டின் உயரம் எத்தனை மீட்டர்?" என்று. விளையாட்டாகவே எதனையும் விளக்கும் புதுமையைக் கையாண்ட அவர், கேள்விகளுக்குத் தகுந்தாற்போல் மாணவர்களின் உருவ அமைப்பையும் இணைப்பார். எவரெஸ்டின் உயரம் அதிகம் என்பதால் கடைசி பெஞ்ச் கதிர்வேலுவை, வகுப்பிலேயே உயரமானவனை, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப் பணிக்க, அப்பாவியாய் அவன் எழுந்து நின்றான். அவனுக்குப் பதிலும் தெரியவில்லை. அருகிலிருந்த ஜன்னல் வழியே பார்வையை ஓட்டினான்.
"கதிர்! ஜன்னல் வழியா பார்த்தால் எவரெஸ்டும் தெரியாது!அதன் உயரமும் புரிபடாது! நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க… எட்டு எட்டா நாலு எட்டு போட்டுக்கோ… எவரெஸ்டின் உயரம் இது தெரிஞ்சுக்கோ!"
கதிருக்கு அப்போதுதான் புரிந்தது! எட்டு, எட்டு, நாலு, எட்டு அப்படீன்னா… 8848 மீட்டர் ஓ...!
"சார்! எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர்!"
கதிருக்கு மட்டுமல்ல. அந்த வகுப்பில் இருந்த முப்பது பேருக்கும் எவரெஸ்டின் உயரம் ஆழமாகப் பதிந்து விட்டது!
பெரியசாமி வாத்தியார் செத்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அவர் சொல்லிக் கொடுத்தவை, அதுவும் எளிய வழிகளில் சொல்லிக் கொடுத்தவை இன்றளவும் மறக்கவில்லை!
டி.வி செய்திகளில் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தவர்கள் ஒன்று கூடி விழா வெடுத்துப் பள்ளிகளுக்கு அன்பளிப்புகள் வழங்கி விட்டுத் தங்கள் அக்கால ஆசிரிய, ஆசிரியைகளிடம் அன்பாகப் பிரம்படி வாங்குவதைப் பார்க்கையில், நான் உள்ளங்கையை நீட்டி, உளத்தில் உறைந்துள்ள பெரியசாமி வாத்தியாரிடம் அடி வாங்குவதாக எண்ணி மகிழ்கிறேன்!
ஆசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள்தான் நம் ஆழ்மனத்தில் பதிந்து என்றும் நம்மை ஆள்பவர்கள்!
பழசாக இருந்தாலும் பெரியசாமி வாத்தியாரின் நினைவுகள் என்றைக்கும் மனதுக்குள் புதுமையானது!