
சினிமாவில் டெக்னீஷியன்களுக்கான மரியாதை, டைரக்டர் ஸ்ரீதர் காலத்திற்குப் பிறகு வந்துவிட்டது. அவர்களைத் தனியே அடையாளங்கண்டு, பாராட்டுகிற பாங்கு ஏற்பட்டுவிட்டது. சினிமாவைப் பற்றி இடைவிடாது எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகைகள் இதற்குக் காரணம்.
நடிகர்களுடைய பலம், நல்ல டெக்னீனிஷியன்களின் அணிவகுப்பில் இருக்கிறது என்று தெரிந்து போய் விட்ட காலம். இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு நடிகர்களே டெக்னீஷியன்களானார்கள். அப்படி டெக்னீஷியனாக மாறிய இரண்டாவது நடிகர் கமலஹாசன். முதல் நடிகர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
புரட்சி நடிகரோடு நான் பழகியதில்லை. ஆனால், கமலஹாசனை மிக நுணுக்கமாகப் பார்த்திருக்கிறேன்.
முதன் முதலாய் படம் தயாரிக்க கம்பெனி திறந்து, சொந்தமாய் கேமிராவும், விளக்குகளும் வாங்கின கமலின் சந்தோஷத்தை கவனித்திருக்கிறேன்.
அந்த நேரம் அவர் வருமானம் மிக அதிகமில்லை. அப்படியே ஏதும் வருமானம் இருந்தாலும், அந்த வருமானம் வீடாகவோ, நிலமாகவோ, வீட்டிற்கு அத்தியாவசியமான பொருள்களாகவோ மாறாமல், கேமிராவாகவோ, லைட்டாகவோதான் மாறியது.
ஏனெனில், நடிகர் கமலஹாசன் ஒரு நல்ல டெக்னீஷியன்.
ஸ்டண்ட் நடிகர்கள் மட்டுமே வைத்திருக்கிற ஆயுதங்களை அவரும் வைத்திருப்பார். தூக்குக் கயிற்றிலோ, மலையுச்சியிலோ, மரக் கிளையிலோ தொங்குவதற்கான தோல் பெல்ட்டை சொந்த செலவிலே வாங்கி வைத்திருப்பார்.
நெருப்புப் பிடிக்கிற காட்சியா...ஒரு தீயணைப்புக் கருவி அவர் காரில் இருக்கும். அதுவும் அவர் காசில் வாங்கியதாகத்தான் இருக்கும். வேறு யாரோ அக்காட்சியில் நடித்தாலும் அவர் வீட்டிலிருந்து அது வந்துவிடும்.
ஏனெனில், நடிகர் கமலஹாசன் ஒரு நல்ல டெக்னீஷியன்.
புன்னகை மன்னனில், அருவியிலிருந்து காதலியோடு குதித்து அவர் மட்டும் மரக் கிளையில் மாட்டி, தப்பித்து விடுகிற சீன். அவருடைய பெல்ட்டை அவரது இடுப்பில் அணிவித்து, மேலே சட்டைமாட்டி, சட்டையில் ஓட்டை போட்டு மெல்லிய கம்பியை பெல்ட்டில் பிணைத்து, இழுத்து மேலே தூக்க... இருபது இருபத்தைந்து அடி உயரத்தில் கமல் தொங்க வேண்டியிருந்தது!
அந்தக் காட்சிக்காக கமலஹாசன் கிட்டத்தட்ட அரைநாள் தொங்கினார்.
கீழே இறந்து போய்க் கிடக்கும் காதலியை பார்த்து, அவளைக் காப்பாற்ற முடியாத வேதனையோடு, தாம் மட்டும் பிழைத்துக் கொண்டோமே என்கிற சோகத்தோடு அவர் கதற வேண்டும்.
பெருங்குரலில் பிளிறலாய், மாட்டிக்கொண்ட கிளையிலிருந்து தப்பிக்கும் வண்ணமாய்க் கதற வேண்டும்.
கமலஹாசன் கதறினார்.
எல்லா கோணங்களிலும், எல்லாவித கதறல்களோடும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. கமலஹாசன் கீழிறக்கப்பட்டார்.
சட்டையைக் கழற்றி, பிறகு பெல்ட்டை கழற்றினால், பெல்ட் இறுகின இடத்தில் ரத்தக் கசிவே இருந்தது.
வெகு நிச்சயமாய் சுளீரென்ற வலியை அந்த ரத்தக் கசிவு கொடுத்திருக்கும். இந்த விஷயம் எனக்கும், ஸ்டண்ட் மாஸ்டருக்கும், ஒரு மேக்கப்மேனுக்கும் மட்டுமே தெரியும். கமலஹாசன் வெளிப்படுத்தவில்லை.
'எரியுது இறக்கிவிடு' என்று கத்தியிருக்கலாம். முடியாது என்று யாரும் சொல்லப் போவதில்லை. கால்களை ஊன்றிக்கொண்டே தொங்கியது போல் நடித்திருக்கலாம். தெரியாதது போல் எடுத்துவிட முடியும்.
நடிகர் கமல்ஹாசனுக்குத் தம்மை விட, தாம் நடித்து வெளி வரும் படம் முக்கியம். தாம் நடிக்கின்ற காட்சி முக்கியம்.
ஏனெனில், அவர் நல்ல நடிகர் மட்டுமில்லை. நல்ல டெக்னீஷியன்.
அதே படத்தில் இதே மாதிரி ஒரு பெல்ட் முப்பதடி உயரத்தில் அறுந்து, குத்துச் செங்கலில் விலா அடிபட்டு, சுருண்டு துடித்ததும், நானறிவேன்.
ஏன்...யார்....எதனால் இது நேர்ந்தது என்று அவர் கத்தவேயில்லை. அந்த விபத்தைத் தம் தொழிலில் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டார்.
ஏனெனில், நடிகர் கமலஹாசன் நடிகர் மட்டுமில்லை. நல்ல டெக்னீஷியன்.
அவரோடு நான் பணிபுரிந்த குணாவிலும் கமலஹாசனை என்னால் இப்படித்தான் பார்க்க முடிந்தது. யூனிட் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கொடைக்கானலில் மனைவி, குழந்தைகளோடு வந்து இறங்கி, பள்ளத்தாக்கு பள்ளத்தாக்காய், குகை குகையாய் வழுக்கும் கற்களில் கால் வைத்து, அபாயமான சரிவுகளில் லொகேஷனுக்காக சுற்றித் திரிந்த நடிகர் அவர். போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லுங்க. ஷூட்டிங் அன்னிக்கு நான் வந்துடறேன் என்று கண்ணாடி தம்ளரில் கன்னம் வைத்துப் பேசுவதில்லை. இருள் புரியாத காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் லொகேஷன் பார்க்கக் கிளம்பிய வேகத்தை நானறிவேன்.
சினிமா வெறும் நடிப்புத் திறமையை மட்டும் நம்பியிருக்கவில்லை. அது உரத்துப் பேசும் வசனங்களால் மட்டும் உருவாகி விட முடியாது. அல்லது நெருப்புப் பொறி பறக்கும் வாள் சண்டை நிறைவைக் கொடுத்து விடாது. சங்கிலியால் கட்டப்பட்டு நெடு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. சினிமா விஞ்ஞானத்தைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டது. அதனால்தான் அடுத்தடுத்து இந்த கலை அநேக மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
வெறும் நடிகனாக இருந்தால் சினிமாவை ஆள முடியாது. ஒரு நல்ல நடிகன் ஒரு நல்ல டெக்னீஷியனாகத் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தம்மை மாற்றிக் கொண்டவர். மற்ற நடிகர்களையும் மாற்றிக் கொண்டிருப்பவர்.
அந்த ஆர்வம் இந்தியனிலும் வெளிப்பட்டிருக்கிறது. அழுத்தமான ஒரு திரைக்கதைக்கு மக்களின் மனோவேகத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு பாத்திரப் படைப்புக்கு கமலஹாசன் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முகம் இழுக்கும் ரப்பர் பசையை மாதக்கணக்கில் பொறுத்துக்கொண்டார். டைரக்டர் என்கிற டெக்னீஷியனோடு இன்னொரு டெக்னீஷியனாய்க் கலந்துகொண்டார்.
பந்தா பண்ணுகிற நடிகராய் ஏன் கமலஹாசனால் இருக்க முடியவில்லை? அது அவர் இயல்பில்லை. அவர் இயல்பு தரையில் கால் பதித்து நிற்றல். வேரிலிருந்து ஆரம்பித்தல். அவர் வெறும் பூ இல்லை. முழுமையான மரம். பயனுள்ள தாவரம். அதனால்தான் சினிமாவின் எல்லா இடங்களிலும் அவர் தம் தடத்தைப் பதிய வைக்கிறார். தம் இருப்பை இடைவிடாது உணர்த்துகிறார். இதுதான் அவர் இயல்பு. இதுதான் அவர் சுபாவம்.
(18.5.97 தேதியிட்ட கல்கி இதழில், எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய அனுபவக் கட்டுரையிலிருந்து...)
இது போல் இன்னும் படிக்க...