
மழை பெய்கிறது. பெய்துகொண்டே இருக்கிறது. அவ்வளவு மழை நீரும் காட்டிலே மேட்டிலே மண்ணிலே விழுந்து ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. தன் வீட்டு மாடித் தரையில் விழுகின்ற மழை நீரைச் சேமித்தால் என்ன? சேமித்துத் தூய குடிநீராக எல்லோர்க்கும் பகிர்ந்து அளித்தால் என்ன? இவ்விதமாக யோசிக்கத் தொடங்கினார் அரியலூர் மாவட்டம், கீழக் காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வரும், அந்தப் பகுதி விவசாயிகளின் களப் போராளி, 'பச்சை மனிதன்' தங்க. சண்முக சுந்தரம்.
உடனே செயல்படவும் தொடங்கி விட்டார். மாடியில் வைக்க வேண்டி வடிகட்டி மழைநீர்த் தொட்டி, அதில் இருந்து கீழே வீட்டில் அந்த மழை நீரினைச் சேமித்து வைத்திட வேண்டி படுக்கைவசத்திலான பெரிய நீர்த் தொட்டி. மேற்கண்ட இரண்டு விதமான தொட்டிகளுக்கும் இணைப்பாக குழாய் பதித்தல் என்று அதற்கான வேலைகளை நிறைவு செய்தார்.
மழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்து கொண்டே இருந்தது. இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த வடிகட்டப்பட்ட மழை நீர்ச் சேமிப்புத் தொட்டி நிரம்பி விட்டது.
நம்மிடம் தங்க. சண்முக சுந்தரம் பேசினார்:
“மழை நீரை அப்படியே குடிக்கலாமா என்று ஆய்வுகள் பலவும் வேறு வேறு கருத்துகளைச் சொல்லி வருகின்றன. நானே சுற்றுச்சூழல் ஆர்வலர் வேறு. அதனால் மழை நீரை நாம் நேரடியாகச் சேமிக்காமல், அதனை வடிகட்டி சுத்திகரித்துச் சேமிக்கலாம் என யோசித்தேன். மாடியில் மழை நீர் சுத்திகரிப்பு வடிகட்டி தொட்டி ஒன்றினை உருவாக்கினேன். அதாவது அந்தத் தொட்டியின் உள் பகுதி மட்டத்தில் பில்ட்டர் பாயின்ட் எனப்படும் துளையிடப்பட்ட தகடு பொருத்தினேன். அதன் மேலே கூழாங்கற்களைப் பரப்பினேன். அதற்கு மேலே தூய்மைப்படுத்தப்பட்ட அடுப்பு மரக்கரித் துண்டுகளை ஒரு லேயராக பரப்பி வைத்தேன். அதற்கும் மேலே ஒரு லேயராக ஆற்று மணல் பரப்பினேன். இப்போது மழை நீர் வடிகட்டி சுத்திகரிப்புத் தொட்டி ரெடியாகி விட்டது.
வீட்டின் கீழ்த் தளத்தில் நீளமான படுக்கை வசம் கொண்ட தொட்டி அமைத்தேன். பின்னர் இரண்டு தொட்டிகளுக்கும் இணைப்பாக குழாய் பொருத்தினேன். இப்போது சமீபத்தில் மழை பொழிந்த போது அந்தத் தொட்டி நிரம்பி விட்டது.
இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது அந்தத் தொட்டி. உடனே அக்கம்பக்கத்தவர்கள் தெரிந்தவர்கள் பலருக்கும் இதனைத் தெரிவித்தேன். விருப்பம் உள்ளவர்கள் குடிநீராக மழை நீரைப் பெற்றுச் செல்லலாம் என்றும் தகவல் சொன்னேன். பள்ளி மாணவ மாணவிகள் வந்து, இந்த நீரை ரசித்து ருசித்து அருந்தினர். சுற்றுப்புற வீடுகளில் வசிப்பவர்கள் வந்து குடங்களிலும் மற்ற பாத்திரங்களிலும் வாங்கிச் சென்றார்கள்.
பக்கத்து ஊர்களில் இருந்து பத்து லிட்டர், இருபது லிட்டர் வாட்டர் கேன்கள் கொண்டு வந்து, வடிகட்டி சுத்திகரிக்கப்பட்ட மழை நீரை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது. இனி வரும் மழைக் காலங்களிலும் இது தொடரும்.”