தமிழகத்தில் சந்தி சிரிக்கிறதா சட்டம் ஒழுங்கு?

ஆம்ஸ்டிராங்
Published on

குஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங். இவர் நேற்று முன்தினம் மாலை கூலிப் படையினரால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை, பெரம்பூரில் அவரது இல்லத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பு வைத்து ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த பயங்கர சம்பவத்தை செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் அங்கு வரத் தொடங்கினர். சில இடங்களில் சாலை மறியல்களிலும் ஈடுபட்டனர். சென்னை வடக்குக் கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கிய நிலையில், பிரபல ரௌடியான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட எட்டு பேர் அண்ணாநகர் துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அக்கும்பலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலை வழக்குத் தொடர்பாக நடந்த பழிக்குப் பழியான சம்பவம் இது என்றும் சொல்லப்படுகிறது.

பொதுமக்களை பெரிதும் உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்திற்கு ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், கமல்ஹாசன், அண்ணாமலை, வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தனது கடும் கண்டனத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு எனது கடும் கண்டனம். ஆம்ஸ்டிராங் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கொலையாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ள மாயாவதி, 'ஆம்ஸ்டிராங்கின் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனை தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாரம் குடித்து இறந்த 60க்கும் மேற்பட்டோரின் ஈரம் காய்வதற்குள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில், இந்தக் கொடூர படுகொலை அரங்கேறி இருக்கிறது. காவல்துறையும் உளவுத்துறையும் என்னதான் செய்கிறது? சட்டம் ஒழுங்கின் பொருள்தான் என்ன?

இதையும் படியுங்கள்:
டெங்குவால் கர்நாடகாவில் ஒருவர் பலி... ஒரே நாளில் 115 பேருக்கு பாதிப்பு!
ஆம்ஸ்டிராங்

சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘கொலை நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாக 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று உளவுத்துறைக்கு தெரியாமல் போனது எப்படி? ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?

பி.எஸ்.பி. கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்கின் கொலை ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், இந்தக் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை மிக விரைவில் கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் அவர்கள் குடும்பத்துக்கு இந்த அரசு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com