டெங்குவால் கர்நாடகாவில் ஒருவர் பலி... ஒரே நாளில் 115 பேருக்கு பாதிப்பு!

Dengue
Dengue
Published on

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருவதுடன், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் அச்சமூட்டும் விதமாக தீவிரமாகி வருகிறது.

மழைக்காலம் வந்துவிட்டது என்றாலே கொசுக்கள் அதிகமாகிவிடும். அதேபோல், கொசுக்களால் ஏற்படும் நோய்களும் அதிகளவில் பரவ ஆரம்பிக்கும். குறிப்பாக, டெங்கு காய்ச்சல், பலரையும் அச்சமூட்டும் ஒரு காய்ச்சலாக உருவெடுக்கும்.

அந்தவகையில் கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளும் அச்சமூட்டி வருகின்றன. சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் டெங்குவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடிபந்தே நகரைச் சேர்ந்த வேணு(50) என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கர்நாடகாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 155 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு பிபிஎம்பியின் கீழ் மொத்தம் 107 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் மொத்தம் 343 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலால் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது.

சமீபக்காலமாக கர்நாடகாவில் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைக்கு வருவதால், அனைவருக்கும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில்தான்  155 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிரதமர் மோடி விண்வெளிக்குச் செல்கிறாரா? இஸ்ரோ தலைவர் சோம்நாத் சொன்னது என்ன?
Dengue

பெங்களூரில் 107 பேருக்கும், சித்ரதுர்காவில் 10 பேருக்கும், தாவங்கரேயில் 4 பேருக்கும், ஷிமோகாவில் 9 பேருக்கும், உத்தர கன்னடாவில் 2 பேருக்கும், விஜயநகரில் 4 பேருக்கும், ஹாசனில் 16 பேருக்கும், உடுப்பியில் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழகத்திலும் ஆங்காங்கே டெங்கு பாதிப்பு ஏற்படுவதால், மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com