தன்னைத்தானே அறிய…

தன்னைத்தானே அறிய…
Published on

ன்னைத்தானே யாரென்று பூரணமாக அறிந்துகொள்வதை ‘அத்யாத்மவித்தை' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்ட ஒருவன் தன்னைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால் அவனால் என்ன பயன்?

ஒருவன் உபந்நியாசங்கள் செய்யலாம். பலருக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லலாம். கூட்டத்தில் எல்லோரும் பாராட்டும்படிப் பேசலாம். சாஸ்திரங்களை விளக்கலாம். அவற்றைப் பற்றி எழுதலாம். இதனால் அவனுக்குப் பெயரும், புகழும் உண்டாகலாம். பணமும் கிடைக்கலாம். ஆனால், இதனால் மட்டுமே அவன் ஆத்மபற்றுகளிலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைந்துவிட முடியாது.

அவன் தன்னைப் பற்றிய சிந்தனை செய்து, தான் யார்? என்பதைத் தன் விவேகத்தாலும், சாதனைகளாலும் நன்கு உணர்ந்த பின்புதான் அவன் இறைவனை நெருங்கும் நிலையை அடைகிறான் என்று ஆதிசங்கர பகவத்பாதாள் கூறியுள்ளார்கள்.

நமது முந்தைய ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர மஹா ஸ்வாமிகள் வரலாற்றிலிருந்து ஒரு சிறு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அவர்கள் அடிக்கடி வெளியில் வராமல் தவத்திலும், பூஜை புனஸ்காரங்களிலும், தனிமையில் தியானம் செய்வதிலும் பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார்கள். சிருங்கேரிக்கு வரும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல சமயங்களில் அவர்களைத் தரிசித்து அவர்களோடு பேசிச் செல்லும் வாய்ப்பைப் பெற முடியாமல் போயிற்று. ஒருநாள் தியான நிலை கலைந்து வந்த ஆச்சார்யாளிடம், ஸ்ரீ மடத்தின் தர்மாதிகாரி சென்றார்.

“தாங்கள் பல நாட்கள் தவத்திலும், தியானத்திலும் ஈடுபட்டுத் தனிமையில் அமர்ந்து விடுகிறீர்கள். அதனால் இங்கு வரும் பக்தர்கள் தங்களைக் கண்டு பேச முடியாமல் போய் விடுகிறார்கள். நீங்கள் பக்தர்களை விசாரித்து அவர்கள் குறைகளைக் கேட்டு அருள் பாவித்தால் நலமாயிருக்கும்" என்றார்.

அதற்கு ஜகத்குரு அவர்கள் “முதலில் நான் எனக்குள்ளே என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் யார்? என்று சரியாக முதலில் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்புதான் மற்றவர்களைப் பற்றி விசாரிக்கத் தகுதி ஏற்படும்” என்றார்.

எத்தகைய உயர்ந்த தத்துவம். எனவே, ஒவ்வொருவரும் முதலில் தனியே அமர்ந்து தன்னைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். தன்னைத் தானே அறிந்துகொண்ட பின்புதான் தெய்வத்தை நாம் அறிய முடியும்.

நம்மை நாம் அறிந்துகொள்ள நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ள சரியான வழிமுறை, ஆன்மிகப் பயிற்சி சாதனை. இந்த ஆத்மவித்யா அல்லது சுயப்பரீஷை நடத்தத் தேவையான வழிமுறைகளை சத்குருவிடமிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com