

மெட்ராஸில் ரயில்வே துறையில் வேலை செய்யும் ஒருவர் எங்கள் எதிர் வீட்டில் இருந்தார். வழக்கமாக தினமும் காலையில் சற்று மெதுவாகச் செல்லும் அவர், ஞாயிற்றுக்கிழமை ஆனால் காலை ஆறு மணிக்கே மிகவும் சுறுசுறுப்பாகத் தன் வீட்டிலிருந்து புறப்படுவார். ஆனால், மாலையில் வீடு திரும்பும் போது மிகவும் சோகமாக நடந்து வருவார். அக்கம்பக்கத்தில் உள்ளோர், “அவர் சரியான ரேஸ் பைத்தியம்,” என்று பேசிக் கொள்ளுவதை நான் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில்தான் நான் கிண்டி ரேஸைப் பற்றி அறிந்தேன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாவார்கள். எழுபதுகளில் மெட்ராஸ் மற்றும் செங்கல்பட்டு முதலான நகரங்களில் வசித்தவர்கள் பலர், கிண்டி ரேஸிற்குச் சென்று குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.
லாட்டரி சீட்டைப் போல இதுவும் ஒரு ஆபத்தான விளையாட்டாகக் கருதப்பட்டது. விளையாட்டாக ஆரம்பித்து, பின்னர் அடிமையாகி, ரேஸிற்குத் தொடர்ந்து சென்று தங்கள் செல்வங்களையெல்லாம் இழந்து நடுத்தெருவிற்கு வந்தவர்கள் பலர். ஒருமுறை குதிரைப் பந்தயத்திற்குச் சென்று பழகியவர்கள், அதிலிருந்து மீண்டு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்பார்கள்.
செல்வந்தர்கள் முதல் பாமரர்கள் வரை அவரவர் தகுதிக்கேற்ப பந்தயம் கட்டி விளையாடுவார்கள். பொதுவாகச் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கிண்டியில் ரேஸ் நடைபெறும். குதிரையின் பலம், அதை ஓட்டும் ஜாக்கியின் திறமை முதலான பல விஷயங்களைக் கணித்து, எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று தீர்மானித்து பணத்தைக் கட்ட வேண்டும். வாராவாரம் “ரேஸ் டிப்ஸ்” என்றொரு கையடக்கப் புத்தகமும் விற்பனைக்குக் கிடைக்கும். அதில் எந்தக் குதிரை ஜெயிக்கும் என்பது முதலான பல தகவல்கள் தரப்பட்டிருக்கும். ரேஸிற்குச் செல்பவர்கள் அந்தப் புத்தகத்தைத் தவறாமல் வாங்கி, அதில் தரப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பின்பற்றி பணத்தைக் கட்டுவார்கள்.
அமரர் கல்கி அவர்கள், “தப்பிலி கப்” என்ற தலைப்பில் கிண்டி ரேஸை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் கிண்டி குதிரைப் பந்தயம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை நகைச்சுவையாகவும் இயல்பாகவும் விவரித்திருப்பார். கதையின் நாயகனும் எழுத்தாளனுமான ராஜகோபாலன் (ராஜுவும்) மற்றும் அவன் நண்பன் நாடக நடிகனான சீனுவும் பால்ய கால சிநேகிதர்கள்; தொடர்ந்து ரேஸிற்குப் போகிறவர்கள். ஒரு கட்டத்தில் இருவருமே தங்களிடம் இருக்கும் பணத்தை ரேஸில் இழந்து, அடுத்து என்ன செய்வது என்ற அறியாத சூழ்நிலையில் இருப்பார்கள்.
ஒருநாள் இருவரும் குதிரைப் பந்தயத்தில் தோற்று, கையிலிருக்கும் பணத்தையெல்லாம் இழந்து பந்தய மைதானத்திற்கு வெளியில் சந்தித்துக் கொண்டார்கள். பஸ்ஸில் பிரயாணம் செய்யக் காசு போதாமல், இருந்த சொற்ப காசை வைத்து ரயிலில் பயணிப்பார்கள். ரயில் பிரயாணத்தில் அருகில் அமர்ந்திருப்பவர்கள் ரேஸைப் பற்றிப் பலவிதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். வீட்டிற்குச் செல்லப் பிடிக்காமல் சீனுவுடன் அவன் அறைக்குச் செல்லும் ராஜு, தன் கஷ்டமான சூழ்நிலையைச் சொல்லி அழுவான்.
சீனுவிற்கு அப்போது ஒரு அபாரமான யோசனை தோன்றும். அவன் ராஜுவிடம், “நீ குதிரைப் பந்தயத்தை மையமாக வைத்து ஒரு நாடகத்தை எழுது. அதை நான் மேடையேற்றுகிறேன். அது நிச்சயம் வெற்றி பெறும். வரும் தொகையில் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டு கடன்களை அடைத்து நிம்மதியாக வாழலாம்,” என்று சொல்ல, ராஜுவும் இதை ஏற்று அப்போதே தன் நாடகத்திற்கு “தப்பிலி கப்” என்று பெயர் சூட்டி எழுதி முடிப்பான்.
அந்த நாடகத்தில் கதாநாயகன் குதிரைப் பந்தயத்தால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்து, தற்கொலை வரை சென்று, பின்னர் மனைவியால் திருந்தி, “இனி குதிரைப் பந்தயமே விளையாட மாட்டேன்,” என்று சத்தியம் செய்வான். அந்த நாடகம் அபாரமாக வெற்றி பெற, நாடகத்தின் மூலம் கிடைத்த ஐயாயிரம் ரூபாயை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வார்கள். ராஜு தன் குடும்பத்தினரைக் காண ஊருக்குச் செல்வதாகக் கூறிப் புறப்பட; சீனுவோ கொடைக்கானலுக்குச் செல்வதாகக் கூறிப் புறப்படுவான். ஆனால், இருவருமே ஊட்டி குதிரைப் பந்தய மைதானத்தில் மீண்டும் சந்தித்துக் கொள்ளுவதாகக் கதை முடியும்.
குதிரைப் பந்தயத்தினால் ஏற்படும் இழப்புகளையும், துன்பங்களையும், குடும்பத்தினர் படும் அவஸ்தைகளையும் அமரர் கல்கி மிக அருமையாகத் தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அபாரமான படைப்பு ‘தப்பிலி கப்’.