சொந்த வீட்டிலேயே குடிநீர் இணைப்பை துண்டித்த முதல்வர்!

ஜூலை 15, கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள்
கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர் காமராஜர்
Published on
kalki vinayagar
kalki vinayagar

காமராஜர் ஒரு சமயம் சுற்றுப்பயணம் சென்று திரும்பும் வழியில் தம் ஊருக்குச் சென்று தனது தாயை சந்தித்தார். தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் இருந்து குழாய் நீர் குடத்துக்குள் விழும் ஓசை கேட்டது. உடனே தனது தாயிடம், ‘அது என்ன தண்ணீர் சத்தம்?’ என்று கேட்டார்.

தாயோ, ‘பொதுக் குழாய்க்கு சென்று நான் தண்ணீர் எடுக்க சிரமப்பட்டதை பார்த்து முனிசிபாலிட்டியில் குழாய் லைன் போட்டு கொடுத்தாங்க’ என்றார்.

உடனே, ‘குடிநீர் குழாய் இணைப்பு வேண்டுமானால் முதலில் மனு கொடுக்க வேண்டும். நான் விண்ணப்பிக்கவே இல்லை. ஊரில் உள்ள தாய்கள் எல்லாம் பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கும்போது நீ மட்டும் என்ன உசத்தியா?’ என்று கூறியதோடு நில்லாமல், முனிசிபாலிட்டி அலுவலரை அழைத்து குழாய் இணைப்பை துண்டித்து விட்டாராம்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பல ஊர்களில் கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதை கவனித்த ஒரு தீவிரத் தொண்டர், ‘இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குதானே கொடுக்கப் போகிறார்’ என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக் கொண்டார்.

கூட்டம் முடிந்து தங்குமிடத்திற்கு வந்ததும், அந்தத் தொண்டரை காமராஜர் அழைத்து, ‘ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்து விடு’ என்றார்.

அந்தத் தொண்டர் அதிர்ந்து போனார். ‘ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே என்று மனம் வருந்தினர்.

‘தம்பி, உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால், இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால், இதெல்லாம் சென்னையில் உள்ள பால மந்திர் என்கிற ஏழை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு’ என்றார் காமராஜர். காமராஜரின் ஏழைக்கு உதவிட வேண்டும் என்கிற அந்தக் கருத்தை கேட்ட தொண்டரும் தன்னுடைய செயலுக்காக வருந்தினார்.

மிழக முதலமைச்சராக காமராஜர் பதவியில் இருந்த நேரம், ஒரு நாள் இரவு கூட்டத்தில் கலந்து கொண்டு தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். சென்னையில் ஒருவழிப்பாதை ஒன்றில் அவர் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. அதைப் பார்த்து காமராஜர், காரை நிறுத்தச் சொன்னார். ‘ஏன் கார் செல்ல அனுமதி இல்லாத பாதையில் செல்கிறாய்? காரை திருப்பு’ என ஓட்டுநரிடம் அன்புடன் சொன்னார்.

‘ஐயா, இந்த இரவு நேரத்தில் போக்குவரத்து மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் பாதை வழியில் போனால் நாம் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்’ என்றார் ஓட்டுநர்.

‘இரவு நேரம் என்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்பதற்காக நாம் இப்படி போவது தவறு. இது உனக்கு எப்போதும் பழக்கமாகிவிடும். சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தை பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள்’ என ஓட்டுநரிடம் கூறி ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார். ஓட்டுநர் வேறு வழி இல்லாமல் திரும்பி வந்து சரியான பாதையில் சென்றார். சட்டம் என்று இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும் என்பது காமராஜரின் எண்ணமாகும்.

ர்மவீரர் காமராஜர் ஒரு சமயம் தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றை பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஒரு இடத்தில் நின்றவர், ‘இந்தக் கோயிலைக் கட்டினது யாரு’ எனக் கேட்டார்.

உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். உடனே சிரித்துக்கொண்டே, மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டி காமராஜர், ‘இவ்வளவு காலம் நிலைத்து நிற்கிற இந்தக் கோயிலை கட்டியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு மாதம் கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப்லைட் உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெருசா எழுதி வச்சிருக்காங்க பாருங்களேன்’ என்று கூற, உடன் வந்தவர்கள் வாய் விட்டு சிரித்தார்களாம்.

குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணையைக் கட்டினால் அது பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அதை உடனடியாகக் கட்டும்படி உத்தரவிட்டார் காமராஜர். அந்தத் திட்டத்திற்கு ஆதரவு இருந்ததை போல எதிர்ப்பும் இருந்தது. காமராஜரை சந்தித்து, ‘அணை கட்டினால் ஆயிரக்கணக்கான ரப்பர் எஸ்டேட்டுகள் அழிந்துவிடும். எனவே, திட்டத்தை கைவிட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களிடம் காமராஜர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். ‘அரிசிக்கு பதிலாக ரப்பரை தின்று வாழ முடியும் என்றால் சொல்லுங்கள். அணைத் திட்டத்தை கைவிடுகிறேன்’ என்றார். ரப்பர் எஸ்டேட் முதலாளிகள் வாய் அடைத்து போய் விட்டனர்.

காமராஜர் மற்றவர்களை தமது நகைச்சுவையால் அடிக்கடி சிரிக்க வைப்பதுண்டு. ஒரு சமயம் மதுரை டிவிஎஸ் விருந்தினர் விடுதியில் காமராஜர் தங்கி இருந்த சமயம், பத்திரிகை நிருபர்களை சந்திக்க தமது அறையில் இருந்து வெளியே வந்தார். வரிசையாக நாற்காலிகளில் நிருபர்கள் அமர்ந்தனர். காமராஜரும் நடுவில்  நாற்காலியில் அமர்ந்தார்.

ஒரு நிருபர் அவரின் அருகில் அமர அச்சப்பட்டு நாற்காலியை தள்ளிப்போட்டுக்கொள்ள முயன்றார். அப்போது கூம்பு வடிவில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்ட் தடுக்கி அந்த நிருபர் விழப்பார்த்தார். உடனே பெருந்தலைவர் அவரைப்பிடித்து பத்திரமாய் உட்கார வைத்துவிட்டு, ‘எந்த பத்திரிகை?’ என்று கேட்டார். அவர், ‘அலையோசை’ என்றார்.

இதையும் படியுங்கள்:
கல்விக் கண்களைத் திறந்த மாபெரும் தலைவர்!
கர்மவீரர் காமராஜர்

‘ஓஹோ அலை வேகமாய் அடிச்சிட்டு போல இருக்கு’ என்று தலைவர் வேடிக்கையாகக் கூற, அங்கு சிரிப்பொலி பொங்கியது.

ரண்டு முறை பிரதம மந்திரி பதவி காமராஜரை தேடி வந்தது. இரு முறையும் அதனைத் தவிர்த்து விட்டார். இறுதிவரை மக்களுக்கு சேவை செய்பவராகவே வாழ்ந்தார். தானும் எளிமையாக வாழ்ந்து, தனது குடும்பத்தாரையும் எளிமையாகவே வாழ வைத்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது சொந்த பந்தங்களுக்கு சிறு உதவி கூட செய்யாதவர். தனது தங்கை நாகம்மாள் தனக்கு உடல் நலம் குறைவாக இருப்பதாகவும், மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரை பார்க்க வேண்டும் என்றும், அதற்காக பணம் அனுப்பும்படியும், அவர் மரணமடைய பத்து நாட்கள் இருக்கும்போது கடிதம் எழுதி இருந்தார். காமராஜர் இருபது ரூபாய் அனுப்பிவிட்டு, ‘நீ பெரிய டாக்டர் எல்லாம் பார்க்க வேண்டாம். மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துக்கோ. செலவுக்கு இருபது ரூபாய் அனுப்பி இருக்கிறேன்’ என்று பதில் எழுதினார்.

இதுபோன்ற ஒரு தலைவரை, முதல்வரை இனி நாடு சந்திக்குமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.

‘பிரபலங்களும் சுவையான சம்பவங்களும்’ என்ற நூலில் இருந்து...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com