

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கல்கி குழுமம் வாசகர்களிடம் 'சாய்பாபாவின் அனுபவங்கள்' குறித்த படைப்புகளைக் கோரியது. வாசகர்கள் அனுப்பியிருந்த படைப்புகள் மிகுந்த உயிர்ப்புடனும் சிலிர்ப்புடனும் அமைந்திருந்தன.
கல்கி குழுமத்தின் ஆன்லைன் வாசகர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் படைப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.
நாங்கள் திருவள்ளுரில் குடியிருந்தோம். அப்பொழுது அரசு பணியில் இடமாறுதலில் நாமக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்று பணியில் இருந்தேன். வீட்டிற்கு வாரத்திற்கு ஒரு முறை இரயில் பயணம் செய்து குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோரிடம் உரையாடிவிட்டு மீண்டும் நாமக்கல் சென்று விடுவது வழக்கம்.
அப்படி இருந்த சமயத்தில் என் மனைவி சாய் பக்தை மிகவும் நம்பிக்கை கொண்வர். ஷீரடி சாய்பாபா மற்றும் புட்டபர்த்தி சாய்பாபா படங்களை வைத்து வணங்குவது வழக்கம்.
நாங்கள் புது வீடு கட்டும் பொழுது, கடைக்கால் பணியின் பொழுது இடைவிடாத மழை பெய்து மேற்கொண்டு பணி நடைபெறாமல் முடங்கி இருந்த சமயத்தில், என் மனைவி கடைக்கால் போடும் இடத்தில் தண்ணீர் குழாய் மேடை மீது சாய்பாபா படங்களை வைத்து பூஜை செய்தார். அவருடன் நானும் என் குழந்தைகளும் கூட்டு பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சர்யம்!
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
மறுநாள் அதிகாலை பளிரென்று வெளிச்சம். வீட்டு கடைக்கால் வேலை துரிதமாக நடைப்பெற்று மூன்றே மாதங்களில் நிறைவு பெற்று புது வீட்டிற்கு சென்றோம். அப்பொழுதே என் மனைவி ஷீரடி அல்லது புட்டபர்த்தி போய் வாருங்கள் என்று சொன்னார்.
நான் பணியின் நிமித்தம் நேரம் கிடைக்காததால் செல்லவில்லை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தேன். இரவு நேரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளி வராந்தாவில் காற்று வரும் இடத்தில் நானும் சில நண்பர்களும் தூங்குவோம்.
அப்படி ஒரு நாள் தூங்கும் பொழுது, எனக்கு தூக்கம் வரவில்லை.. புரண்டு புரண்டு படுத்தேன். முடியவில்லை… நான் கண்களை மூடினால்…. ஒரு உருவம் நிழலாடுவது போல காட்சியளித்தது. கண் திறந்தால் காண இயலவில்லை. அத்தோடு மட்டுமல்லாது, கண்களை மூடிக் கொண்டிருக்கும் பொழுது, புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் அங்கி என் மீது உரசி செல்வது போல உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து விடுவேன். இது போல விடியற்காலை நடந்தது.
விடுமுறை நாளில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகவல் சொல்ல ”நான் சொல்வதை எங்க நீங்க கேட்கறீங்க.. அதான் அவரே வந்து உங்களை கூப்பிடுகிறார். உடனே புறப்படுங்கள்” என்றார். அன்றே பெங்களூர் இரயில் ஏறி ஒயிட் பீல்டில் இரவு மூன்று மணிக்கு இறங்கி புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமம் சென்று குளித்து விட்டு காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஏராளமான பக்தர்கள் கூட்டம். தன்னார்வலர்கள் செய்யும் பணிகள் பார்த்து வியந்து விட்டேன். புட்டபர்த்தி சாய் அவர்களின் தரிசனம் கிடைத்தவுடன் தான் மனம் திருப்தி ஆனது. ஆங்கே ஓர் நாள் தங்கி மறுநாள் திரும்பினேன்.
ஷீரடி சாய்பாபாவும், புட்டபர்த்தி சாய்பாபாவும் எங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.