

புட்டபர்த்தி ஶ்ரீ சத்ய சாய் பாபா - அன்பு, சேவை மற்றும் பக்தியின் முக்கியத்துவத்தை மக்கள் உணரும்படி செய்து மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட இவ்வுலகில் அவதரித்தவர். அவரது தாரக மந்திரம் 'அனைவரின் மீதும் அன்பு கொள், சேவை செய்' என்பதாகும். பாபா பக்தர்கள் இன்றும் அவரின் அருளை மற்றும் அற்புத அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து சேவை செய்து வருகிறார்கள்.
எங்களுடைய குடும்பத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றை பாபாவின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் இங்கு பகிர விரும்புகிறேன். வாய்பளித்த கல்கி குழுமத்திற்கு நன்றி.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது. எங்கள் மாமியின் (அம்மாவின் தம்பி மனைவி) குடும்பத்தில் அனைவருமே ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்கள். அவர்கள் வசித்த ஈரோடு வீட்டிலேயே ஸ்ரீ சத்ய சாயி சேவா மையத்தைத் தொடங்கி ஏழைகளுக்கு உணவு, கல்வி போன்ற சேவைகள் செய்து வந்தனர். குடும்பத்தின் எந்த நிகழ்வுக்குமே, புட்டபர்த்தி சென்று பாபாவை தரிசித்து அவர் கூறியபடிதான் செய்வார்கள்.
என் மாமியின் திருமணத்தை நடத்த உத்தேசித்த அவரது பெற்றோர்கள் தகுந்த வரனை தேடும் முன் பாபாவை தரிசித்து கேட்டனர். அதற்கு ஸ்வாமி, “சேலத்திலிருந்து வரன் கேட்டு வருவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அந்த சமயம் சேலத்திலிருந்த எங்கள் மாமாவிற்கும் வரன் தேடிக்கொண்டிருந்தார்களாம். மாமியின் தந்தையுடன் பணி புரிந்தவர் மாமாவைப் பற்றிக் கூற, இரு வீட்டினரும் கலந்து பேசி திருமணமும் பாபாவின் அருளால் நிச்சயிக்கப்பட்டது.
பெண் வீட்டினர் புட்டபர்த்திக்கு சென்று ஸ்வாமியை வணங்கி திருமணத்தை நடத்தி வைக்க ஈரோடுக்கு வருகை தரவேண்டும் என வேண்ட, பாபா ”நான் தான் உங்களுடனே இருக்கிறேனே. எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என ஆசி வழங்கியிருக்கிறார்.
திருமண நாளுக்கு முந்தைய தினம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பெண்ணின் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டார் இருந்த இடத்திற்கு சென்றபோது ஏதோவொன்று விழுவது போலத் தோன்றியதாம். கீழே பார்த்த போது அது திருமாங்கல்ய சரடு. பாபா ஆசிர்வதித்து அருளிய திருமாங்கல்யம் என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். பெற்றோர் மெய் சிலிர்த்துப் போனார்கள். பாபா ஆசிர்வதித்து தந்த அந்த திருமாங்கல்ய சரடைத்தான் திருமண நாளன்று மணமகன் மணமகளுக்குக் கட்டினார்.
திருமண நாளன்று மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்ததாம். அன்று நல்ல மழை காலையிலிருந்தே கொட்டத் தொடங்கி நிற்கவேயில்லையாம். மாமியின் தாய் கவலையுடன் “ஸ்வாமி நீ திருமணத்தில் எங்கள் கூடவே இருப்பதாகச் சொன்னாயே. இப்போது இப்படி மழை கொட்டுகிறதே. நீ தான் நிறுத்த வேண்டும்” என்று கூற மழையும் நின்று திருமணம் நல்லபடியாக பாபாவின் அருளால் நடந்து முடிந்தது.
திருமணத்துக்குப் பின் மாமாவும் மாமியும் உறவினர்களுடன் புட்டபர்த்திக்கு சென்று பாபாவை தரிசனம் செய்த போது, ஸ்ரீ சத்ய சாய், அவர்களை ஆசிர்வதித்து புடவை மற்றும் வேஷ்டி கொடுத்தருளினார். இன்றும் மாமியின் குடும்பத்தினர் புட்டபர்த்தியிலேயே தங்கி சேவைகள் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் எங்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத ஒன்று. ஒரு முறை எங்கள் திருமண நாளன்று பாபாவின் தரிசனத்திற்காக புட்டபர்த்தி போயிருந்தோம். அப்போது தரிசன வரிசையில் சிறிது நேரம் காத்திருந்த பின் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து பாபாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தோம். என் கணவருக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்திருந்தது. நான் ஐந்தாம் வரிசையில் அமர்ந்திருந்தேன்.
சிறிது நேரத்தில் பாபா சிறுபுன்னகையுடன் பக்தர்களை ஆசிர்வதித்தவாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். என் கணவர் அருகே வந்தவுடன் ஒரு நிமிடம் நின்றார். என் கணவரும் பாபாவின் முன் விழுந்து வணங்கி எழுந்தபோது பாபா தன் கைநிறைய சாக்லேட்டுகளை எடுத்துத் தந்து ஆசி வழங்கினார். எங்கள் திருமண நாளன்று பாபாவின் ஆசியோடு பாபாவிடமிருந்தே இனிப்புப் பிரசாதமும் பெற்றது மறக்க முடியாத ஒன்று.
ௐம் ஸ்ரீ சாய்ராம்.