

ராஜகோபால், செங்கமலம் என்ற பெயர் (Name) வைத்த நபர்களைச் சந்தித்து விசாரித்தால் அவர்கள் பூர்வீகம் அனேகமாய் மன்னார்குடி ஆக இருக்கும்.
ராஜகோபால் அங்கே கோவில் சுவாமி பெயர். தாயார் செங்கமலத் தாயார்.
சுவாமிநாதன் என்ற பெயர் கும்பகோணம் பக்கம் அதிகம். சுவாமிமலை அறுபடை வீடு 5 கிலோமீட்டர்.
சீனிவாசன், உப்பிலி போன்ற பெயர்கள் திருநாகேஸ்வரத்தில் நிறைய.
கள்ளக்குறிச்சி அருகில் ஒரு மலை கிராமம். வெள்ளிமலை... உத்தியோக நிமித்தம் ஒரு வாரம் போயிருந்தேன். அந்த ஊரில் ஆண்கள் பெயர் வெள்ளி, பெண்கள் பெயர் தங்கம் இரண்டே. மற்ற பெயர்கள் மிகவும் குறைவு. அனேகமாக கிடையாது.
"எப்படி சார் அடையாளம் கண்டு பிடிப்பீங்க.", என்றேன் ஆபீஸரிடம்.
"போட்டோ வச்சுதான். மக்கள் மிக நல்லவர்கள். ஆள் மாறாட்டம் செய்யமாட்டார்கள்... கட்டுப்பாடு அதிகம்."
எந்தப் பிரச்னையும் பெயரால் வந்தது இல்லையாம். 'வெள்ளி' மலை சுவாமி பெயர்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அனேகமாக 16 ஆம் நாள் பெயர் வைப்பது வழக்கம். தாத்தா, பாட்டி அல்லது பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி பெயர் தான் வைப்பார்கள். இப்போது இது குறைந்து விட்டது.
நேமாலஜி ஒரு நவீன வரவு. அந்த நவீன பண்டிதர்கள் ஜாதகப்படி இத்தனை எழுத்து மொத்தம் இருக்கணும் முதல் எழுத்து கே, கோ இப்படி வரணும் என்று கண்டுபிடித்து ஒரு ஃபீஸ் வாங்கி விடுவர்.
சிலருக்கு வீட்டில் வைக்கும் பெயர் ஒன்று. தாத்தா பாட்டி பெயரை வைத்து விட்டால் அதைச் சொல்லி கூப்பிடுவது மாமனார் மாமியாரைக் கூப்பிடுற மாதிரி இருக்கும். குழந்தைகளை "டேய் சீனிவாசா, வாடி கமலா", என டக்கென கூப்பிட முடியாது.
அதனால், கூப்பிட ஒரு பெயர் இருக்கும். சுப்பு, பாலு, அபி, அம்மு, இப்படி. குட்டி, ரோஸு, சீனி, அப்பு, பட்டு, புட்டு இப்படியும் இருக்கும்.
பள்ளியில் சேர்க்கும் போது பர்த் சர்டிபிகேட் சில சமயம் இரண்டு இருக்கும். பெயரில்லாமல், பெயர் வைத்தது.
பெயர் வைத்த சர்டிபிகேட்டில் உள்ளது தான் கணக்கில் வரும்.
"குழந்தை பெயர் வரணுமா. பெயர் சொல்லுங்க." பதிவு அலுவலகத்தில் அவசரம்.
அப்புறம் அலைவது கஷ்டம்.
அவசரத்தில் அள்ளித் தெளித்த சில பெயர்கள் வாயில் நுழையாததாக இருக்கும்.
ஒரே ஆளுக்கு மூணு நாலு பெயர்கள்.
வைத்த பெயரை சட்ட வழிகள் மூலம் மாற்றிக் கொள்ளலாம். பேப்பரில் "நட்டுவாக்கிளி" ஆகிய நான் இனி இன்று முதல் "நடராஜன்" என குட்டி விளம்பரம் கொடுத்து.
ஆதாரில் பெயர் அனேகமாக நிச்சயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடனே வரும். அது தான் எல்லா இடத்திலும் ஸ்பெல்லிங் ஆக பிரிண்ட் ஆகும். ஆதார் எல்லா துறைகளிலும் லிங்க் ஆவதால்.
பிறகு சரி செய்ய வேண்டும்... ஆதார் மையங்களுக்குப் போய்.
யோகேஷ்வரஹ் ஷண்முகானந்தன் இப்படியாக பெயர் இருந்தால் போச்சு. ஒவ்வொரு தரமும் ஒரு இடத்தில் ஹெச் எழுத்து விடுபட்டு பர்ஃபெக்ட் ஸ்பெல்லிங் வர பல வருட முயற்சி தேவை.
ஆகையால் பெயர் வைக்கும் போது பாலு, ராமு, கலா இப்படி சின்னதாக வையுங்கள். குழந்தைகள் வருங்காலம் சிக்கல் இன்றி இருக்க.
பாஸ்போர்ட் விசா இவற்றுக்கும் சின்ன பெயரே நல்லது.
அப்பா பெயர் சேர்த்து தான் வரும்.
தமிழ் நாட்டில் குடும்பப் பெயர், surname குறைவு.
வடக்கே, அயல் நாட்டில் அதிகம். கட்டாயம் இருக்கும்.
மணிலால் பிஸ்வால், சோம்னாத் சாட்டர்ஜி. அணில்குமார் உபாத்யாய, அயல் நாட்டில் பிட்ஜெரால்டு கென்னடி, ராபர்ட் கென்னடி, ஜான்சன் கென்னடி இப்படி வரும்.
எழுத்தாளர்கள் பல புனைபெயர்களில் எழுதுவார்கள். மனைவி, அம்மா, அப்பா பெயர்களில்... சுஜாதா, பாக்கியம் ராமஸ்வாமி...
சினிமாவில் அறிமுக நடிகையின் பெயரில் ஏற்கனவே ஒருத்தர் இருப்பார். டைரக்டர் புதிதாய் ஒரு பெயர் வைத்து விடுவார்.
இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கு?
சினிமாவில் படத்தின் பெயர் படத்தைவிட முக்கியம். நல்ல பெயர் வைத்து விட்டால் பாதி எடுத்த மாதிரி.
சினிமாவில் மட்டும் எதுவும் நடக்கும்.
ஹீரோவுக்கு வைக்கும் பெயர்கள் ஆனந்த், பாஸ்கர், கோபால் இப்படி.
வில்லன் பெயர்கள் பாருங்க கபாலி, ரங்கன், நாகராஜ், நஞ்சுண்டன்.
பெயர் என்பது உருவத்தைக் குறிக்கும் சொல் ஆகும். அடையாளப் படுத்தும்.
அல்வா என்பது ஒரு வஸ்து பெயர். ஆனால் பெயர் சொன்னாலே பிரவுன் கலந்த சிவப்பு, நெய் மணம், பிடும் போது ஒரு நழுவல். வாயில் போட்டவுடன் ஒரு வழுக்கல் பயணம் தொண்டையில்.
இத்தனையும் தெரியும் அல்வா, ஸாரி அல்லவா.
"ஒலி" க்கும் பெயர் உண்டு. மோகனம் ஒரு இராகம்.
பெயரில் ம இருந்தாலும் ஸ்வரத்தில் மத்யமம் இருக்காத ஒரு இராகம்.
அரோகண. அவரோகணம். ஸ ரி க ப த ஸ... ஸ த ப க ரி ஸ
மோகனம் என்றவுடன் அந்த இராகம் காதில் ஒலிக்கும்.
(எளிதில் பிடி பட... அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா.
மோகனம் பழகத் தெரிய. வேணும்... பெண்ணே... மிஸ்ஸியம்மா)
ஒளியின் பெயர் ஏழு வண்ணங்களாகும்.
காற்றுக்கும் பெயர் உண்டு தென்றல், புயல், சூறைக் காற்று.
தீயின் பெயர்கள் அனல், தணல், நெருப்பு, தீபம், விளக்கு.
மண்ணுக்கும் பெயர் உண்டு மணல், களி, கரிசல், செம்மண்.
இலைக்கு தமிழில் மட்டுமே கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என பெயர்கள் வரும்.
இப்படி அண்ட சராசரத்திலும் கோள்கள் நட்சத்திரங்களுக்கும் பெயருண்டு.
எண்ணுக்கும் எழுத்துக்கும் கூட பெயர் உண்டு.
ஒரு விண்வெளி விஞ்ஞானி சொன்னார், சனிப் பெயர்ச்சிபலன் நான் அவருக்கு சொன்ன போது, "சார் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. நாம வச்ச பெயர் தான் சனி. அதுக்கு தன் பெயர் சனின்னு தெரியவே தெரியாது."
ஜோதிடத்தில் பெயர் ராசி உண்டு. பெயருக்கும் பலன் சொல்வார்கள்.
பெயர் இல்லாதது எதுவும் இல்லை.
உருவம் உள்ள எதுவும் ஒரு பெயரால் அழைக்கப்படும்.
உருவமற்ற புளிப்பு, கசப்பு என்பதும் சுவையின் பெயர் ஆகும்.
அக்காலத்தில் நாள் கிழமைகளில் புதுப் பட ரிலீஸ்... தியேட்டரில் முண்டி அடித்து கூட்டம் க்யூ கட்டுப் பாடின்றி இருக்கும்போது "போலீஸ்", என ஒருத்தன் சொல்வான். கூட்டம் தானாக சரியான வரிசையில் நிற்கும். பிறகே டிக்கெட் கொடுக்கும் மணி ஒலிக்கும். தூரத்தில் தொப்பி தெரியும். கேரியரில் பிரம்புடன் கான்ஸ்டபிள் கேட்டில் சைக்கிளில் நுழைவார். "போலீஸ்", என்ற நாமத்தின் வலிமை அது.
பள்ளியில் ஹெச் எம், பிரம்புடன் வராந்தாவில் வலம் வருவார். "டேய் ஹெச் எம் டா",என்பான் ஒரு பொடியன், ஜன்னலோர இருக்கைக்காரன். லீவு போட்ட ஆசிரியர் இல்லாத, கும்மாளம் போட்ட அந்த வகுப்பு கப்சிப் ஆகிவிடும். "ஹெச் எம்" நாமத்தின் சக்தியா அல்லது பிரம்படியின் சக்தியா தெரியாது.
மனுஷாளைப் பொறுத்த மட்டில் கோவிந்து, மணி, ராமு இப்படி பெயர்கள் எல்லாமே உடலில் உயிர் இருக்கும் வரையே.
இந்தப் பெயர் உள்ளே வாழும் ஆத்மனுக்கே.
மூச்சு நின்றவுடன் பெயரும் மூச்சோடு போய்விடும்.
"பாடி", எப்ப எடுப்பாங்களாம்..?
எங்கே போச்சு பெயர்? பெயரில் என்ன இருக்கு போங்க?!