அக்காலம் முதல் இக்காலம் வரை இசையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற / கொண்டு செல்லும் கலைஞர்கள் பலர் நம்மிடையே உண்டு. இவர்களில் கடந்த அரை நூற்றாண்டாக தனது முதல் பாடலில் தொடங்கி இன்று வரை மக்கள் மனங்களில் தனது இசையால் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார் இளையராஜா என்றால் மிகையில்லை.
இசையில் தோல்வி என்பதே இல்லாமல் தனது அயராத இசைத் தேடல் மற்றும் உழைப்பினால் ஊர் போற்றும் இசைக்கலைஞராகத் திகழ்கிறார். தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவரான இசைஞானி இளையராஜா திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து வெற்றியுடன் பயணிக்கிறார். அவர் இசையில் வந்த பாடல்களைக் கேட்பதற்காகவே தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் சென்றது.
தேனி மாவட்டத்தின் பண்ணைபுரத்து மகனான ஞானதேசிகன் எனும் ராசய்யா இன்று தனது 80 வயதிலும் தரமான பாடல்களைத் தந்து தமிழ் மக்களின் மனங்கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பது பெரும் சாதனை.
* இசையமைப்பாளர், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நடத்துனர் இசைக்கலைஞர், பாடலாசிரியர், அருமையான பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பல இசைக்கருவிகள் வாசிப்பாளர் என பன்முகத் திறமைகளை தன்னகத்தேகொண்ட இளையராஜா 1943ல் ஜூன் 3 அன்று பிறந்தவர்.
* இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவரது இசை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு பிரபலமானவர்.
* கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்ததால் இளையராஜா சிறு வயதிலேயே பலவிதமான தமிழ் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தினார். தனது 14 வயதில், தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக் குழுவில் சேர்ந்து தென்னிந்தியா முழுவதும் தன் இசைத்திறனை வெளிப்படுத்தினார்.
* இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மறைந்த சமயம், தமிழ் கவிஞரான கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவிற்கு தனது முதல் இசைத்தொகுப்பை நிகழ்த்தி கவனம் பெற்றார்.
* இவர் இதுவரை சுமார் 20,000க்கும் மேற்பட்ட கச்சேரிகள், சுமார் 7,000 பாடல்களுக்கு மேல் இசையமைப்பு மற்றும் 1,000 படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
* இளையராஜா 1976ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ எனும் திரைப்படத்தில் இசையமைத்ததின் மூலம் தனது முதல் இசைப் பயணத்தைத் தொடங்கியவர்.
* இந்தியத் திரைப்பட இசையில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தி மக்கள் செவிகளுக்கு விருந்தளித்தவர். 1986இல், ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக கணினி மூலம் ஒலிப்பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளரும் ஆனார்.
* இவரின் இசைத் திறமை பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுத் தந்தது. 1988ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் ‘இசைஞானி’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைத் துறையின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றார்.
* லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா, இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). இதன் காரணமாக ‘மேஸ்ட்ரோ’ என்றும் குறிப்பிடப்படுகிறார்,
* இசையில் சிறந்து விளங்கியதற்காக தமிழ்நாடு, கேரளா (1994, 1995, 1998), ஆந்திரப் பிரதேசம் (1981, 1988, 1990) மற்றும் மத்தியப் பிரதேசம் (தி லதா மங்கேஷ்கர் விருது) (1998) ஆகிய மாநில அரசுகளிடமிருந்து மாநில அரசின் விருதுகள் பெற்றார்.
* 2004 ஆம் ஆண்டில் என்டிஆர் தேசிய விருது, ஒரிசாவின் மதிப்புமிக்க இசை விருதான அக்ஷய சம்மான் (2010) போன்ற எண்ணற்ற விருதுகளை வென்றார்.
* 2006ல் முதல் இந்திய சொற்பொழிவாளர் எனும் பெருமையுடன் சிம்பொனியில் திருவாசகத்தை நிகழ்த்தியது பெரும் சிறப்பு .
* 2010இல், அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது, இது இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமாகும்.
* 2012ஆம் ஆண்டில், இசைத் துறையில் அவரது படைப்பு சாதனைகளுக்காக நிகழ்த்துக் கலைத் துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.
* 2013 இல், CNN-IBN இந்திய சினிமாவின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியபோது 49% வாக்குகளைப் பெற்று நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 2014ஆம் ஆண்டில், அமெரிக்க உலக சினிமா போர்டல், ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ எனும் சினிமா வரலாற்றில் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியலில் அவரை 9வது இடத்தில் வைத்தது.
* 2018இல் பத்ம விபூஷண் வழங்கப்பட்டது, இது இந்திய அரசாங்கத்தால் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதாகும்.
* 2022 ஜூலை முதல் இந்திய மேலவையான ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.
இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் இசைஞானி இளையராஜா. இவருடைய வாழ்க்கை வரலாறு (Biopic) அருண் மாதேஸ்வரன் இயக்கி தனுஷ் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரும் புகழுடன் இருந்தபோதும் தன்னுடைய பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என இளையராஜா சொல்லியதில் இருந்து தற்போது அவருக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும் இசை உலகம் உள்ளமட்டும் இசைஞானியின் புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.