Yonge Street
Yonge Street

ஒரு தெருவின் நீளம் 86km என்றால் நம்பித்தான் ஆக வேண்டும் மக்களே!

- கனடாவிலிருந்து... ஸ்வர்ண ரம்யா

உலகின் மிக நீளமானத் தெரு!

கனடாவின் பொருளாதார தலைநகரம் டொரொண்டோ. சென்னை ரங்கநாதன் தெருவைப் போல எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது டௌண்டௌன் என்றழைக்கப்படும் டொரொண்டோவின் மத்திய நகரப்பகுதி. முக்கியமான ஐ.டி. நிறுவனங்கள் முதல் பரபரப்பான வணிக வளாகங்கள் வரை அனைத்தையும் '2 x’ வேகத்தில் பார்ப்பதுபோல் இருந்தது. பழைய டொரொண்டோ மாவட்டம் என்கிறார்கள் கனடாவாசிகள். பெயரில் மட்டுமே பழைமை.

நேதன் ஃபிலிப்ஸ் ஸ்கொயர் என நீங்கள் கூகுளில் தேடினால் ‘TORONTO’ என்கிற ஆங்கில எழுத்துகள் கொண்ட 3டி எல்.இ.டி வடிவத்தின் படங்களை பார்க்கலாம். இதுதான் டௌண்டௌன் பனகல் பார்க். கலை நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டம், குளிர்கால லைட்ஸ் திருவிழா, அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம்… என நேதன் ஃபிலிப்ஸ் ஸ்கொயரின் கால்ஷீட் டைட்டாகவே இருக்கிறது. இங்கே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குளம் குளிர்காலத்தில் மக்கள் பனிச்சறுக்கு செய்யும் மைதானமாகிவிடும்.

TORONTO
TORONTO

டெல்லியில் உள்ள ராஜ்பாத் சாலையைப் போல இந்த நேதன் ஸ்கொயரைச் சுற்றி மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன.

நவீன ஸ்மார்ட்ஃபோன்களின் நடுவில் ஒரு பேஜரை வைத்தது போல் நவீன கட்டிடங்களுக்கு நடுவில் ரெட்ரோ லுக்கில் நின்று கொண்டிருந்தது ஓல்ட் சிட்டி ஹால்.1899இல் நிறுவப்பட்ட ஓல்ட் சிட்டி ஹால்தான் அப்போது வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மாநகராட்சி கட்டிடம். இங்கிருக்கும் மணிக்கூண்டுதான் அக்காலத்தில் டொரொண்டோவிலேயே மிக உயரமான கட்டிடம். அறுபது ஆண்டுகள் தன் பணியை சீராக செய்து கொண்டிருந்த ஓல்ட் சிட்டி ஹால் ஓய்வுகாலம் நெருங்குவதை தன் சீரமைப்புகள் மூலம் உணர்த்தத் துவங்கியது. அப்போதிருந்த டொரொண்டோ மேயர் நேதன் ஃபிலிப் மாநகராட்சி பணிகளுக்கு ஒரு புதிய கட்டிடத்தை உருவாக்க முடிவெடுத்தார். உலகளவில் ஒரு மாபெரும் கட்டிடக்கலை வடிவமைப்புப் போட்டியை அறிவித்தார். நாற்பத்திமூன்று நாடுகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட வடிவமைப்புத் திட்டங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வடிவமே சற்றே வளைந்த மான் கொம்புகள் போல் காணப்படும் தற்போதைய நியூ சிட்டி ஹால்.

புதிய வாரிசுக்கு வழிவிட்டு தற்போது நீதிமன்றமாக கம்பீர தோற்றம் கொண்டு நிற்கிறது (தாத்தா) ஓல்ட் சிட்டி ஹால்.

இதையும் படியுங்கள்:
நாம் யோசித்துக்கூட பார்க்காத அசௌகரியங்கள் இவர்களுக்கு உண்டு! என்ன கஷ்டம்டா சாமி!
Yonge Street
Yonge Street
Yonge Street

யாங் தெரு (Yonge Street):

இங்கிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் உலகின் மிக நீளமான யாங் தெருவிற்கு வந்துவிடலாம். 86 கி.மீ நீட்டி முழக்கி ஒரு வழியாக இந்த தெரு முடியும்போது கனடா – அமெரிக்கா எல்லைகளில் ஒன்றான மினஸோட்டாவே வந்துவிடும். இந்த தெருவின் முக்கியமான அம்சம்… யாங் – டண்டாஸ் ஸ்கொயர் எனப்படும் திறந்தவெளி சாலை கலையரங்கம். தாய்லாந்து கலைஞர்களின் நடனம், சீக்கியர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி, தெற்காசிய இளைஞர்களின் கச்சேரி என கோடைகாலம் முழுக்க இங்கே இசையும் இளமையும் கொப்புளிக்கும்.

யாங் தெருவைப் பற்றிய சர்ச்சை…

வழக்கமாக தெருவில் சண்டைகளும் சர்ச்சைகளும் நிகழும். ஆனால் இங்கே ஒரு தெருவே சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள யாங் தெருவின் உண்மையான நீளம் கிட்டத்தட்ட 2000 கி.மீ. (1999ம் ஆண்டு வரை) ஆனால் சமீபகாலத்தில் யாங் தெரு ஒரு கட்டத்தில் நெடுஞ்சாலையாக மாறுகிறது என்று கின்னஸ் குறிப்பிட்டுள்ளது.

நீங்கள் என்னதான் ‘காப்பியர் மெஷின்’ என கூறினாலும் அது எங்களுக்கு ‘ஜெராக்ஸ்’தான். யாங்தான் உலகின் நீளமான தெரு. அந்த பெருமை எங்களுக்குத்தான் என கூறுகின்றனர் டொரொண்டோ மக்கள்.

logo
Kalki Online
kalkionline.com