அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் பெரிய அருவி ஒன்று இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது. இவற்றில் ஒன்று நேராக பூமியில் விழுந்து நதியாகப் பாய்கிறது. இன்னொன்றின் ஆரம்பம் தெரிகிறது, விழுவதும் தெரிகிறது. ஆனால் எங்கே போகிறது என்று தெரிவதில்லை! இவ்வாறு தோன்றியும் காணாமல் போகும் அருவிப் பிரிவுக்கு ‘பிசாசின் கெட்டில்‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறார்கள், இன்னமும் அந்த இரண்டாவது பிரிவு அருவி எங்கே போகிறது என்றே கண்டு பிடிக்க இயலவில்லை.
இங்கிலாந்தின் ஸ்டோன்ஹான்ஜ் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக அசையாமல் காட்சி தருகின்றன அடுக்குப் பாறைகள். மந்திரமா, தந்திரமா, மாயமா, கண்கட்டு வித்தையா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இவை நின்றிருக்கின்றன. ஒரு கோணத்தில் பார்த்தால் தூண் போன்ற இரு பாறைகளுக்கு மேலே படுகையாக அமைந்திருக்கும் மூன்றாவது பாறை, சறுக்கி விழுந்து விடும்போலத் தோன்றுகிறது. ஆனால் பல்லாண்டுகளாக அப்படி விழவேயில்லை என்பதுதான் அதிசயம். கற்கால நாகரிகத்தின் எடுத்துக்காட்டுகளாக இந்தப் பாறைகள் நிற்கின்றன. உண்மையில் இந்தப் பாறைகள் இந்த இடத்திலேயே கிடைத்தவை அல்ல. பல நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெம்ப்ரோக்ஷயர் என்ற ஊரிலுள்ள ப்ரெசெலி மலைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டு இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்தப் பாறைகளை எப்படி இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து எடுத்து வந்திருப்பார்கள், அதோடு இப்படி ஒரு பாறைக் கலையை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? யாருக்குமே தெரியவில்லை.
போலந்து நாட்டிலுள்ள க்ரைஃபினோ என்ற ஊரில் ஒரு பெரிய காடு இருக்கிறது. இங்கே சுமார் 400 மரங்கள் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. பூமியிலிருந்து வெளிவரும் இடத்தில் கோணலாக வளைந்து மேலே போய் 50 அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்திருக்கின்றன இந்த மரங்கள். 1930 முதல் 1945 ஆண்டுகளுக்குள் இவை நடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. மரத்தைக் கையால் பிடித்துத் தள்ளிவிட்டால் அப்படியே வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தனை பேர் கை வைத்துத் தள்ளினாலும் அசராமல் அப்படியே வளைந்த தோற்றத்திலேயே நிற்கின்றன இந்த மரங்கள். அடர்ந்த பனிப் பொழிவாலோ அல்லது புவி ஈர்ப்பு சக்தியாலோ இவ்வாறு அவை கோணல் உருக்கொண்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கிணற்றின் உட்புறமாக, பக்கவாட்டில் சிறு சிறு பாறைத் தொகுதிகளைக் காணலாம். எப்போதும் விழுந்துவிடுவேன் என்று சொல்வதுபோலத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறைத் தொகுதிகள் எப்படி உருவாயின? இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படும் அல்லது கிணற்றுக்குள் போடப்படும் எந்தப் பொருளும் பாறை போன்ற உறையால் மூடப்படுவதன் மர்மம் என்ன? இது ஏதோ பிசாசின் மாய வேலை என்றெல்லாமும் நினைத்து பயந்திருக்கிறார்கள். ஆனால், இது கிணற்று நீரிலுள்ள அதிக அளவு தாதுப் பொருட்களால் உருவாவதுதான் என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த தாதுப் பொருட்கள் ஆவியாகும்போது அப்படியே தனக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளின் மீது படிந்து விடுகிறது. நாளாவட்டத்தில் இவ்வாறு படியும் தாது இறுகி, பாறை போன்று ஆகிவிடுகிறது. இந்தக் கிணற்றைப் பார்க்க வரும் சுற்றுலாவாசிகள் தாம் கொண்டு வந்திருக்கும் சில பொருட்களை கயிறுகளில் கட்டித் தொங்க விடுகிறார்கள். ஒருசில விநாடிகளில் அந்தப் பொருட்களைச் சுற்றி உலோக உறை போன்று தாதுப் பொருட்கள் படிந்து உறுதியாகிவிடுகின்றன. அருகிலுள்ள பொருளை ஒருசில விநாடிகளுக்குள்ளாகவே பாறையாகவே மாற்றிவிடும் அதிசயம் எப்படி நிகழ்கிறது? இதுதான் புரியவேயில்லை.
சில நாடுகளில் வெப்பமான நீர்நிலைகள், ஆறுகள் உண்டு. நம் இந்தியாவில் வட மாநிலமான உத்ராஞ்சலில் பத்ரிநாத் புண்ணியத் தலத்தில் தப்த குண்டம் என்ற வெந்நீர் ஊற்று உள்ளது. ஆனால், பெரு நாட்டில் ஒரு ஆறே கொதிக்கக் கொதிக்க, ஆவி பறக்க ஓடுகிறது!
இதற்குக் காரணம் என்ன? இந்த ஆற்றிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் ஒரு எரிமலை இருக்கிறது. அதன் தாக்கம் இத்தனை தொலைவு கடந்து வந்து ஆற்றை வெம்மையாக்குமா? அதைவிட ஆற்றின் துவக்கத்திலிருந்து அது பாய்ந்து கடக்கும் பெரு நாட்டு அமேஸான் காடுகள் வரை 200 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் குறையாத ஒரே சீரான வெப்பம், ஆண்டாண்டு காலமாக நிலவுவது எப்படி? யாருக்கும் புரியாத புதிர் இது!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் காணப்படும் சில பாறைகளைத் தட்டினால் சங்கீதம் எழுகிறது. அதாவது வெண்கலம் போன்ற உலோகப் பாத்திரத்தைத் தட்டினால் எழுவது போன்ற ஒலி. ஒரே பாறையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஒலி! ஸைலஃபோன் இசைக்கருவி உருவாக்கும் நாதம். இந்தப் பாறைகளை நேர்ப்படுத்தித் தட்டினால் ‘ச ரி க ம ப த நி ..‘ என்றும் ஒலிக்கக்கூடும்! எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்? இது இயற்கையின் சிறப்புக் கொடை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?