சின்னதாய் ஒரு கேள்வி...

Pension Scheme
Pension Scheme
Published on
Kalki Strip
Kalki Strip

நீண்ட நாட்களாக அரசு ஊழியர்கள் வேண்டுகோள்கள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தமிழக அரசிடம் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வைத்த கோரிக்கைகளுக்கு, இப்போது முடிவு கிடைத்திருக்கிறது.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்களின் பங்கு மகத்தானது. அதனை எவ்விதத்திலும் மறுப்பதற்கில்லை!

தற்போது தமிழக முதல்வர் டேப்சை (TAPS-Tamil Nadu Assured Pension Scheme), அதாவது தமிழ்நாட்டின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

டேப்சின் முக்கியக் கூறுகள் இவைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

- அரசு ஊழியரின் கடைசி மாதச் சம்பளத்தின் பாதியை (50%), இனி ஓய்வூதியமாகப் பெறப் போகிறார்கள்.

- ஓய்வூதியதாரர் இறக்க நேரிடின், அவர் பெறும் ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதன் காரணமாக, ஓய்வூதிய நிதியத்திற்குக் கூடுதலாக 13000 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். மேலும் ஆண்டுதோறும் ரூபாய் 11000 கோடி, அரசுக்கு செலவாகும். அரசுப் பணியாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லாச் செலவினங்களையும் அரசே ஏற்குமென்றும் அறிவிப்பு தெரிவிக்கிறது. மேலும், அகவிலைப்படி உயர்வு, பணிக்கொடை போன்ற பிற இனங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் – தமிழக அரசு அறிவிப்பு!
Pension Scheme

தற்போது தமிழக அரசு சந்தித்து வரும் நிதிச்சூழலில், இந்த அறிவிப்பால் நிதிச்சுமை மேலும் பெருகும் என்றாலும், பணியாளர்களின் நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த எல்லாச் செலவுகளும் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் கட்டும் வரிகளில் இருந்துதான் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இன்கிரிமெண்ட் இருக்கிறது; அகவிலைப்படி உயர்வு இருக்கிறது; குறைந்த சம்பளக்காரர்களுக்குப் போனஸ் இருக்கிறது; இப்படி இன்னும் பலவும் உள்ளன.

ஆனால் உழைக்கும் மக்களுக்கு என்ன இருக்கிறது? அவர்கள் பாடு எப்போதும் வறுமையிலும், ஏழ்மையிலுந்தானே! எதிர்வரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கூட இந்த அரசு வழங்கும் அரிசியும், சர்க்கரையும், கரும்பும், வேட்டி, சேலையும் வேண்டியதாய் இருக்கிறது அவர்களுக்கு!

அதற்காக அரசுப் பணியாளர்கள் தங்கள் கைப்பணத்தை அவர்களுக்குக் கொடுங்கள் என்று கேட்க வரவில்லை. அரசுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள, அரசு அலுவலகங்களில் உள்ள உங்களைத் தேடி வரும்போது, அவர்களை இழுத்தடித்துக் கொல்லாமல் அவர்களுக்கு வேண்டியதை இரக்கமுடன் செய்து கொடுங்கள்!

பட்டா கேட்டு வருவோரைப் பாடாய்ப் படுத்தாமல் அவர்கள் திருப்தியுறப் பணியாற்றுங்கள். எல்லாவற்றுக்கும் அன்பளிப்பு கேட்டு அவர்களை அல்லல் படுத்தாதீர்கள்! அலைய விடாதீர்கள்!

எமது அனுபவத்தில், வெளி நாடுகளில் அரசு அலுவலகங்களுக்கு ஏதாவது வேலை நடைபெற வேண்டுமென்ற நோக்கில் அங்குள்ள பணியாளர்களை அணுகினால், அதனை முடித்துக் கொடுப்பதிலேயே அவர்கள் முனைப்பைக் காட்டுகிறார்கள். நம்மைத் தாமதிக்க வைப்பதை இழிவாகக் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! இமாச்சல பிரதேச அரசு அதிரடி!
Pension Scheme

ஆனால் நமது நாட்டிலோ, எந்த அலுவலகம் சென்றாலும், பெரும்பாலும், தாமதிப்பதையும், இழுத்தடிப்பதையுமே நடைமுறையில் காண முடிகிறது!

அரசுப் பணியாளர்கள் மனம் வைத்தால், லஞ்சப் பேயை முழுவதுமாகவே நாட்டை விட்டே துரத்தி விடலாம்! இந்த 2026-வது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நமது அரசுப் பணியாளர்கள் முயல்வார்களா என்பதே சின்னதாய் ஒரு கேள்வி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com