தமிழ்நாட்டிற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்திற்கு பெருமை சேர்த்த மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் சில குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்/இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள் தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்கள் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை இருக்க வேண்டும். (இதற்கான 2025ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்). மத்திய அரசின் ஓய்வூதியம் அல்லது வேறு மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. அதேபோல், முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters sports meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
தகுதியுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள், www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டம், விளையாட்டு வீரர்களின் தியாகத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்). வருமானச்சான்று (2025ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்). ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில் / விளையாட்டு சார்ந்த).
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஆவணங்களுடன் வரும் 31.07.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். மற்ற மாவட்டத்தினர், உங்களுடைய மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.