
தாமிரபரணி தீரத்தில் பிறந்த இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவர்களில் குறிப்பிடத்தக்கவராக எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும், மூத்த இலக்கியச் செயற்பாட்டாளருமான தி.க.சி என்கிற தி.க.சிவசங்கரனை சொல்லலாம். இலக்கியத்துறையின் பொதுவான முற்போக்கு வளர்ச்சிக்கு சகல சக்திகளையும் உள்ளடக்கி நிற்கும் ஓர் இயக்கப் போக்கே இன்றைய வரலாற்றுச் சூழலில் பொருத்தமானது என்கிற சிந்தனையைக் கொண்டிருந்த தி.க.சி.யின் நூற்றாண்டு மார்ச் 30, 2025 அன்று நிறைவு பெற்றது.
தி.க.சி.யுடன் உரையாடுவது ஓர் ஆனந்த அனுபவம். அப்போதுதான் அறிமுகமான புதிய மனிதரிடத்தில் கூட, எந்த விகல்பமுமின்றி நெடுநாட்கள் பழகிய மனிதரிடத்தில் பேசுவது போன்று உரையாடுவது அவரின் தனித்த இயல்பு. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்வு சார்ந்த வேறொரு ஞாபகக்கூறல், அஞ்ஞாபகக்கூறல் தொடர்புடைய மற்றொரு சம்பவம் எனத் தங்குதடையின்றி, தொய்வின்றி, சரளமாக, உற்சாகமாக உரையாடுவது அவரின் தொனி. அவருடன் உரையாடித் திரும்புவர்களிடத்தில் தன்னிகரில்லாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள் கூட அவரை உணர்வுபூர்வமாக நேசித்ததை, அவருடைய அசாதாரண ஆளுமையின் தனித்த வெளிப்பாடாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஒருமுறை தி.க.சி.யை சந்திக்கச் சென்ற போது, கையடக்க டிரான்ஸ்சிஸ்டரில், அன்றைய தின இரவு 7.15 மணி செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். சைகையால் மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்காரச் சொல்லி சில இதழ்களை வாசிக்கக் கொடுத்தார். சில நிமிட இடைவெளியில் செய்திகள் நிறைவுற்ற பிறகு, டிரான்ஸ்சிஸ்டரை அணைத்து விட்டு என்னிடம், 'புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து'ன்னு ஒரு திரைப்பாடல் உள்ளதே, அது எந்தப் படத்தில் இடம்பெற்றதென கேட்டார். ‘செய்தி ஒலிப்பரப்புக்கு முன்னாடி இந்தப் பாட்டை போட்டாங்க. இந்தப் பாட்டு எனக்குப் பிடிச்சிருந்தது. இலங்கையில் நடக்குற யுத்தம் நிறுத்து, எனக்கு காதல் வந்ததே..'ன்னு ஒரு வரி வந்துச்சு. இதுக்கே இந்தப் பாட்டுக்கு நூறு மார்க் கொடுக்கலாம்..' என்றார்.
தி.க.சி.யின் 90-வது வயதில், அவர் இயற்கை எய்துவதற்கு ஆறேழு நாட்களுக்கு முன்பு அவரது கைகளில் கிடைக்கப்பெற்ற ‘தி.க.சி. நாட்குறிப்புகள்’ நூலின் முன்னுரையில் ஓர் இடத்தில் ‘தனிமையை தான் விரும்புவதாகவும், அதை ஒரு வரமாக கருதி, ஏகாந்தமாக அனுபவிப்பதாகவும்’ சொல்லியிருப்பார். நூலின் உள்ளே ஏப்ரல் 13,1948-ஆம் தேதியிட்ட நாட்குறிப்புப் பகுதியில் 'தனிமை மனிதனைக் கொன்றுவிடும் என்பது என் முடிவு. மனிதன் கூட்டாக வாழும் பிராணியல்லவா..?' எனக் குறிப்பிட்டிருப்பார். இம்முரண்பாட்டை பற்றி அவரிடம் நான் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்ட போது, 'கலைஞன் என்பவன் முரண்பட வேண்டும். இந்த தொண்ணூறுல தனிமை எனக்கு ஏகாந்தமாயிருக்கு. ஆனா அந்த இருபத்தியோரு வயசுல தனிமை கொடுமையா இருந்திருக்கு. இந்த முரண்பாடு தானே ஒரு கலைஞனை பக்குவப்படுத்துகிறது...' என்றார்.
தனது இந்த நாட்குறிப்பு நூலுக்கு முன்னுரை எழுதுவதற்கு அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டார். ஏதேனும் ஓர் உள்ளூணர்வு அவருக்குள் இருந்திருக்கும் போல. மூன்று கட்டங்களாக அமர்ந்து அவர் சொல்ல சொல்ல அந்த நூலுக்கு முன்னுரை எழுதியது எனக்கொரு பேரனுபவம். எழுதுகின்ற சமயத்தில் தனது ஆரம்ப கால வாழ்க்கை சம்பவங்களை நினைவு கூர்கின்ற போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கச் சொன்னார். இம்முன்னுரைக்கு முதலில் அவர் வைத்திருந்த தலைப்பு, ‘விட்டு விடுதலையாகி..’. பிறகென்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘தேடல்-படைத்தல்-பகிர்தல்’ எனத் தலைப்பை மாற்றச் சொன்னார். ‘நம்ம சமாச்சாரம் ஊசிப் போகாதது. என்னைக்கும் அதுக்கொரு வேல்யூ உண்டு’ என்றார். இந்நூல் வெளிவந்து பெரும்பாலானவர்களின் கவனத்திற்கு உள்ளான போது அவர் சொன்னதையே நினைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
'தாமரை' இதழாசிரியராக அவர் பணியாற்றிய சமயத்தில், தி.ஜானகிராமன் அவரை சந்திக்க வந்திருந்ததைப் பற்றியும், அவருடனான உரையாடல்கள் குறித்தும் நினைவுபடுத்தி ஒரு முறை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். தி.ஜ.ரா.வின் 'அம்மா வந்தாள்' நாவல் வெளிவந்த சமயத்தில் மிகுந்த எதிர்ப்புக்கிடையில் அவரது புகைப்படத்தை 'தாமரை' இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டதைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமான உரையாடல் அது.
அதனை மையப்படுத்தி, அவரது பன்நெடுங்கால இலக்கிய வாழ்வு குறித்தும், இலக்கிய நண்பர்கள் குறித்தும் ஒரு நூல் எழுதலாமே என்கிற என்னுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னேன். 'அதை அப்புறம் பார்த்துக்கலாம், விடுங்க..' என்றார். இந்நூல் குறித்து நான் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வரவே, ஒருநாள் இரவு என்னை வரச் சொன்னார். ஓர் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழின் பின்பக்கத்தில் தான் எழுத நினைக்கின்ற இருபத்தியோரு இலக்கிய நண்பர்களின் பெயர் பட்டியலை குறித்து வைத்திருந்ததை அப்படியே வாசித்துக் காண்பித்தார். 'தி.க.சி.யாகிய நான்..' அல்லது 'நான் தி.க.சி..' என்ற தலைப்பில் இப்புத்தகம் எழுதப்பட்டால் நன்றாக இருக்குமென என்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். தலைப்பில் அவருக்கு உடன்பாடில்லை. 'நான்' என்கிற தனிப்பட்ட சொல்லை அவர் வெறுத்தார். 'தலைப்பை அப்புறம் பாத்துக்கலாம். உங்களுக்கு நேரம் அனுமதித்தால் மாதம் இரண்டு நாட்கள் உட்கார்ந்து எழுதி விடுவோம்..' என்றார்.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் 30ந் தேதி இரவு என்னை அலைபேசியில் அழைத்து முன்னர் சொன்ன நூல் குறித்து எழுதுவதற்கு வரச் சொன்னார். மறுநாள் மே 1, 2013 அன்று அவரது வீட்டிற்கு சென்றேன்...
'இன்று மே 1. எனக்குப் பிடித்தமான தொழிலாளர் தினம். நூலுக்கான முன்னுரையை இன்று தொடங்கி விடுவோம்..' எனச் சொல்லி, 'வாக்குமூலம்' என்ற தலைப்பில் அம்முன்னுரையை எழுதச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எழுதிய நான்கு பத்தியோடு அப்படியே முற்றுப் பெறாமல் நிற்கிறது அந்த முன்னுரை. பின் தொடர்ந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இந்நூலினை அவர் எழுதவில்லை. இந்நூல் முழுமை பெற்றிருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு நல்ல, அரிய வரவாக அமைந்திருக்கும்.
தி.க.சி.யைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அந்த 90வது வயதிலும் அவரிடமிருந்த திடநம்பிக்கையையே எண்ணிக் கொள்ளத் தோன்றும். அவரது வளவு வீட்டின் தெற்கு மூலையிலிருந்த அந்த ஒற்றையறைக்குள் இருந்து கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை இயக்க முடியும் என அவர் திடமாக நம்பினார்.
ஒருமுறை அவர் சொன்னார். “எப்போதுமே, நான் ஒரு Optimist. ஒளியில் நம்பிக்கை கொண்டவன். எதிர்காலம் இருளடைந்து கிடப்பதாக நான் என்றைக்குமே சொன்னதில்லை. 'தமிழன்னை மலடி அல்ல' என்று ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறேன்.”
பல்வேறு சந்தர்ப்பங்களில் இடையறாத உரையாடலை தனக்கே உரித்தான உடல்மொழியில் அவர் வெளிப்படுத்தி வந்த கணங்களிலெல்லாம், மரணமெல்லாம் ஒருபோதும் அவரை அண்டவே அண்டாது என்று நான் எண்ணிக் கொண்டதுண்டு. அவரது பேச்சிலும், செயலிலும் எப்போதும் ஒரு கனிந்த முதுமை இருக்கும்.
ஓர் மூத்த படைப்பாளி - வாசகன் என்கிற நிலையைத் தாண்டி, என்னளவில் எந்த மனத்தடையுமின்றி நினைத்ததை பகிர்வதற்குரிய மனிதராகவே அவர் இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் பேசி விட்டு திரும்புகையில், வாசல் வரை வந்து வழியனுப்புகிற வழக்கத்தையுடைய அவர், அந்தச் சொற்தொடரை கேட்பார்.. 'அய்யா.. பேச வந்த விஷயம் வேறெதையும் பேச மறந்திரலையே...?'
பேரன்புப் பெருந்தகை அவர். (மார்ச் 30, 2025 - தி.க.சி நூற்றாண்டு நிறைவு)