

தவறு இழைப்பது மனித சுபாவம் என்றாலும், அதன் தாக்கத்தைப் பொறுத்தே அத்தவறின் தன்மை கணக்கிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் 2-A தேர்வில் (தொழில்நுட்ப கோளாறு காரணமாக) பெருங்குளறுபடி செய்து, தேர்வர்களை அலைக்கழித்தது தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய பெருந்தவறு! அதிலும் அத்தவறு மாநிலத்தின் தலைநகரிலேயே அரங்கேறியிருப்பதுதான் பெரும் வேதனையைத் தருவது! நமது அரசு ஊழியர்களின் மந்தமான, (lethargic) பணிக்கு இதுவே தக்க சான்று! ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் முன்னால் அவை சரிபார்க்கப்பட்டிருந்தால் இத்தவற்றைத் தவிர்த்திருக்கலாமே!
தேர்வை மற்றொரு தேதிக்கு மாற்றி அறிவிப்பது, அதிகாரிகளைப் பொறுத்தவரை ஒரு சாதாரணச் சடங்கு. ஆனால் தேர்வர்களை அவை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
- பல நாட்களாகத் தூக்கத்தைத் தொலைத்து, கண் விழித்துப் படித்து, சென்னையையும் பிற தேர்விடங்களையும் தேடி வந்து தேர்வை எழுதி முடித்தோரையும், மீண்டும் தேர்வெழுதச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
- பரீட்சை ஹாலுக்கு வந்தாயிற்று. இன்னுஞ் சில நிமிடங்களில் தேர்வை எழுதி விட்டு நிம்மதியுடன் ஊர் திரும்பலாம் என்று வந்தவர்கள், ‘உன் ஹால் இதுவல்ல! ஓடு அங்கே!’ என்று அலைக் கழிக்கப்படும்போது அவர்கள் மனம் படும்பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா?
- நமது மக்கள் அனைவருமே என்ன செல்வச் சீமான்களா? கடனை ஒடனை வாங்கி, சரியாகச் சாப்பிடாமல், தங்குவதற்குக் கூடத் தக்க இடமில்லாமல் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பொழுதைக் கழித்து இங்கு தேர்வு எழுத வந்தோரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அப்படிப் பட்டவர்களை மீண்டும் தேர்வு மையங்களுக்கு வர வைப்பது சரியான செயல்தானா?
- தேர்வை நன்றாக எழுதத் தேர்வர்களின் ‘மைண்ட் செட்’ முக்கியமல்லவா? அந்த மைண்ட் செட்டைத் தகர்த்தாற் போலல்லவா இந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது!
இப்படித்தான் சில வாரங்கள் முன்னதாக, நிர்வாகக் கோளாறால் இண்டிகோ விமான நிறுவனம் பல விமானங்களைத் திடீரென்று ரத்து செய்தது. விமான நிலையங்களுக்குக் குடும்பத்துடன் வந்தவர்கள் அலைக் கழிக்கப்பட்டு, சோர்வடைந்து போனார்கள். ‘நாங்கள் பயணக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தருகிறோம்!’ என்று ஏதோ சாதனை படைத்ததைப் போல அந்நிறுவனம் பேசியது!
விடுமுறை எடுத்து, பயணத் திட்டங்கள் தயாரித்து, குடும்பத்துடன் அடித்துப் பிடித்து விமான நிலையம் வந்ததையோ, அவர்கள் திட்டங்கள் தவிடு பொடியானதையோ, குடும்பத்தாருடன் அல்லல் பட்டதையோ, கணக்கில் கொள்வதல்லவா முறை! அதனை மறந்து விட்டு, கட்டிய கட்டணத்தைத் திருப்பித் தந்து விடுகிறோம் என்பது சரியான முடிவல்லவே!
இதுவும் அதுபோல்தான்! ‘தேதியை மாற்றி வைக்கிறோம்! வந்து தேர்வை எழுதுங்கள்!’ என்று அறிவிப்பது எளிது! அலைக்கழிக்கப்பட்டதற்கும், அல்லலுற வைத்ததற்கும் என்னதான் தீர்வு? தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுத வேண்டுமென்றால் இவற்றையும் அனுபவித்தே ஆக வேண்டுமென்பது எழுதப்படாத விதியா?
நமக்குப் புரியாத இன்னொன்று! உண்மையில் பணியிட மாறுதல் (Transfer) என்பது, வழக்கமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு பணியாளரை அப்பணியிடத்திலிருந்து வேறு பணியிடங்களுக்கு மாற்றுவார்கள். இப்பொழுதெல்லாம் உடனடி பணியிட மாறுதல் என்பது தண்டனை என்கிறார்கள்.
அது எப்படி தண்டனை ஆகும்?
சரி! எது எப்படியோ, நமது தேர்வர்கள் அலைக் கழிக்கப்பட்டு விட்டார்கள்!
மீண்டும் தேர்வெழுதச் செல்லும் அவர்களை, வெற்றி பெற வாழ்த்துவோம்! அவர்களிடம் ஒரு வேண்டுகோளையும் வைப்போம்!
உங்கள் பணிக்காலங்களிலாவது இதுபோன்ற தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ப்ளீஸ்!
காவல் துறையினர் உரிய சான்றுகளைக் காட்டி பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வதைப் போல, மீண்டும் தேர்வெழுத வரும் தேர்வர்களுக்கு, அவர்கள் ஹால் டிக்கெட்டைக் காட்டினாலே, ரெயில், பேருந்து ஆகியவற்றில் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாமே! அரசு நினைத்தால் அனைத்தும் சாத்தியந்தானே!
இது அவர்கள் செலவையாவது குறைக்குமல்லவா?