

சமீப காலமாக பார்க்கின்ற, கேள்விப்படுகிற சமூக வலைத்தள நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால், "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
'சோசியல் மீடியா' (Social Media) என்று சொல்லப்படும் சமூக ஊடகம் என்பது ஒருவர் இணையம் வழியாக மற்றவருக்கு தனது கருத்துகளை தெரிவிக்க அல்லது பகிர பயன்படுகிற தளம். முன்பு செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு என்று மக்களிடையே வழக்கத்தில் இருந்த செய்தித்தாள், தொலைக்காட்சி போன்ற ஊடக பகிர்விலிருந்து இது வேறுபடுகிறது. அது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், X தளம் என்று வளர்ந்து கொண்டே போகிறது. இவை முற்றிலும் வேடிக்கை, பொழுதுபோக்கு, தனிப்பட்ட திறமை, பெருமை, விளம்பரம், பணம் சம்பாதித்தல் என அதிக அளவில் ஆர்வமாகப் பார்த்து பகிரப்படுகிறது. பரவுகிறது.
இந்த தகவல் பரிமாற்றத்தில் பல நன்மைகளும் இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தில் இதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், ‘ஊடகங்கள் வழியே பகிரப்படுவதெல்லாம் முற்றிலும் உண்மையே !. உண்மையைத் தவிர வேறில்லை என்று நம்புவதும், முக்கியமாக அதிக அளவில் பார்க்கப்படும் (VIEWS) அல்லது அதிக நபர்களால் விரும்பப்படும் (LIKES) செய்தியே உண்மையாக இருக்குமென்று நம்பி மேலும் பலருக்கு அதை பகிர்வதுமே ஆகும்.
ஆனால் சில நேரங்களில் உண்மையல்லாத, ஆதாரமற்ற, செய்திகளை, பொழுதுபோக்கு என்ற பெயரில், பணம், புகழை சம்பாதிப்பதற்காக சிலர் பகிர்வதால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள்! ஒரு செய்தியை பகிரும் போது, அதன் உண்மை தன்மை என்ன? இதனால் யாருக்கு பாதிப்பு? எந்த அளவுக்குப் பாதிப்பு?! என்றெல்லாம் அவர்கள் யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலே உள்ள படத்தை பாருங்கள். ஒரு சிங்கம், குட்டி சிங்கத்தை விழுங்குவது போல ஒரு படத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து பார்க்கிறபோது அப்படி தெரிகிறது. ஆனால் உண்மை என்ன ? இரண்டாவது படத்தில் இருப்பது போல, தாய் சிங்கம் தனது குட்டியை தூக்கிச் செல்லும் காட்சியே அது.
ஆக நாம் பார்க்கின்ற கோணத்தில், நமது மூளை, அந்த காட்சியின் உண்மைத் தன்மையை அறியாமல், வேறு விதமாக புரிந்துகொள்ள வைக்கிறது. ஒரு நிகழ்வை பல நபர்கள், பல கோணங்களில் இருந்து பார்க்கின்ற போது, அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடும்.
ஒருவருக்கு '9' ஆக தெரிவது, மற்றவருக்கு '6' ஆக தெரிகிறது என்றால், இதில் இருவரும் சரியாக சொல்வதாக கூட இருக்கலாம். ஏனென்றால் இருவரும் அவரவர் கோணத்தில், அவரவர் இடத்தில் இருந்து பார்ப்பதால், அவர்களுக்கு அது சரியாக இருக்கிறது.
'நீங்கள் பார்ப்பது நிஜமான உண்மை (Reality) அல்ல; அது உங்கள் மூளையால் கட்டமைக்கப்பட்ட நிஜத்தின் ஒரு மாதிரி (Representation or Model) மட்டுமே என்று நரம்பியலில் (neuroscience) சொல்வார்கள்'.
இதையே தெய்வப்புலவர் திருவள்ளுவர் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று எழுதியிருக்கிறார்.
சமீபத்திய செய்தி ஒன்றில், பேருந்தில் பயணித்த ஒரு நபரின் நடத்தையைப் பற்றி, இன்னொருவர் 'ரீல்ஸ்' எனப்படும் சமூக ஊடக மூலமாக பகிர்ந்து கொண்டார். பிறகு தவறு செய்ததாக சொல்லப்பட்ட நபர், தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வந்தது.
இந்த நிகழ்வை பார்த்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் எல்லாம் அதைப்பற்றி அவரவர் கோணத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை கவனித்தோமானால், இந்த ரீல்ஸை பகிர்ந்தவரும், தவறு செய்ததாக சொல்லப்பட்டவரும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எது சரி! எது தவறு என்று கருத்து பரிமாற்றம் செய்கிறவர்கள் யாவரும் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்கள்.
இந்த செய்தியைப் போல பல உதாரணங்கள் இதற்கு முன்பும் இருக்கிறது. இனிமேலும் இது போல நிகழக்கூடும். ஆனால் காண்பதெல்லாம் மெய்யா? காட்சிப் பிழையா?! சொல்வதெல்லாம் உண்மையா?! என்று தெரிந்து கொள்ள வேண்டும். ரீல் (REEL) மற்றும் ரியல் (REAL) இரண்டும் ஒன்றா அல்லது வேறா என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு செய்தியை பகிரும் முன்பு, அந்தச் செய்தி ஏற்படுத்தக்கூடிய பாதிப்பின் தீவிரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய நீதித்துறையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான "நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது" என்பதை மனதில் இருத்தி செயல்பட வேண்டும்!