அறிவிற்கு விருந்தாகும் டொராணோவின் 2 அருங்காட்சியகங்கள்!

ராயல் ஒன்டாரியோ
ராயல் ஒன்டாரியோ

ந்த நாடு சென்றாலும் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று அருங்காட்சியகங்கள். அந்த நாட்டைப் பற்றிய விவரங்களுடன், அறிவியல், கலை, கலாச்சாரம் என்று பலவற்றையும் இவை போதிக்கின்றன. ம்யூசியம் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இந்த காட்சி சாலைகள் பல மாடிக் கட்டிடங்களுடன் மிகவும் பெரியவை. ஒரு நாளில் முழுவதும் பார்ப்பது முடியாத காரியம். மேலை நாடுகளில் பல காட்சி சாலைகளில், நீங்கள் பலமுறை வந்து பார்த்துச் செல்வதற்கு உதவுவதற்கு சீசன் டிக்கெட்டுகள் வைத்திருக்கிறார்கள். கனடாவின், நிதி பொருளாதாரத்தின் தலைநகரம் என்று கூறப்படும் டொராணோவில் என்னைக் கவர்ந்த இரண்டு அருங்காட்சியகங்கள் பற்றிப் பார்க்கலாம்

ராயல் ஒன்டாரியோ ம்யூசியம்  

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பற்றிய விவரங்கள் அறிய விரும்புவர்களுக்கு இந்த ம்யூசியம் சிறந்த இடம். விலங்குகள், பறவைகள், பூமி அளிக்கின்ற கனிமங்கள் பற்றி தனித்தனியாக காட்சிக் கூடங்கள். டைனாசர் பற்றிய சிறப்பு கண்காட்சி, அந்த காலகட்டத்தில் பூமியில் இருந்த டைனாசர் வகைகளை எடுத்துரைக்கிற்து

சைனாவைப் பற்றிய காட்சிக் கூடம் மிகவும் பெரியது. சைனாவின் டெர்ர கோட்டா பொம்மைகள், அவர்களின் கலாச்சாரம், கட்டிடக் கலை, பண்டைய சைனாவைப் பற்றிய விவரங்கள், புத்த மதத்தின் வரலாறு, புத்தர், அவருடைய சீடர்கள் சிலைகள், ஆகியவை உள்ளன.

என்னுடைய மனதில் ஒரு குறை. புத்த மதம் தோன்றியது இந்தியாவில். ஆனால், அதைப் பற்றிய விவரங்கள் சரிவர சொல்லப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது.

என்னை மிகவும் கவர்ந்த கண்காட்சிக் கூடம் கோவிட் 19 முகமூடிகள். தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தின. உலகில் எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் உபயோகித்த முகக்கவச மாதிரிகளைக் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள். கொடுமையான நோயிலிருந்து காத்துக் கொள்ள அணிந்து கொண்ட முகக் கவசங்களிலும் பல நாடுகள் கலை நயத்தைப் புகுத்தி உள்ளது ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தியாவிலிருந்து வண்ன மயமான முகக்கவசம் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருந்தது.

ராயல் ஒன்டாரியோ
ராயல் ஒன்டாரியோ

கொரியா, ரோம், ஆப்ரிக்கா, கிரேக்கம், சைப்ரஸ், எகிப்து ஐரோப்பா என்று பல நாடுகளின் பண்டைய நாகரிகம் பற்றி கண்காட்சிக் கூடங்கள் உள்ளன. இந்தியாவின் பண்டைய நாகரிகம் பற்றிய விவரங்கள் எதுவுமில்லை.  பொதுவாக பொருட்காட்சிகளில் பார்வையாளர் வசதிக்கு உணவு விடுதிகள் இருக்கும். வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இங்த அருங்காட்சியகத்தில் பெரிய சிற்றுண்டி சாலையில்லை. பார்வையாளர்கள், வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை உண்பதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.

இந்தப் பொருட்காட்சியை முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும்.

ஒன்டாரியோ சயன்ஸ் சென்டர்

விஞ்ஞான விரும்பிகளுக்கு முக்கியமானது இந்த அருங்காட்சியகம். நுழைந்தவுடன் மக்களைக் கவரும் விதமாக நிலையான மின்சாரம் என்று சொல்லப்படுகிற ஸ்டாடிக் எலக்டிரிசிடி உடலில் பாயும் போது என்ன நடக்கிறது என்பதை விளக்கும் விதமாக உபகரணம் வைத்துள்ளார்கள். அந்த உபகரணத்திலிருந்து உடலில் சிறு மணித்துளிகள் நிலையான மின்சாரம் செலுத்தப்படும்போது, தலையிலுள்ள ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. எதிரிலுள்ள பெரிய கண்ணாடியில் நாம் இதைப் பார்க்கலாம். இதைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.

ஒன்டாரியோ சயன்ஸ்
ஒன்டாரியோ சயன்ஸ்

சூரியன், சந்திரன், பூமி மற்றும் சூரிய மண்டலத்தின் கோள்களைப் பற்றி அறிய விண்வெளி மையம், மனித உடல் மற்றும் அதன் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்ள உயிரியல் மையம், சிறுவர்களுக்கென்று தனிக் கூடம் என்று பலவகைகள் உள்ளன. சிறுவர்களுக்கான இடத்தில் எல்லாப் பொருட்களையும் அவர்கள் கையிலெடுத்து விளையாடி உணரும் வண்ணம் வடிவமைத்துள்ளார்கள்.

ஒரு மனிதனுடைய நம்பிக்கை, அதன் சார்பாக ஏற்படும் எண்ணங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை வலியுறுத்தும் விளக்கங்கள் உள்ளன. காட்சிப் பொருட்களைப் புரிந்து கொள்ள ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழியில் விளக்கங்கள் வைத்துள்ளார்கள். பல காட்சிப் பொருட்களுக்கு விசையை அழுத்திக் கணிணி மூலம் விவரங்கள் அறியலாம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!
ராயல் ஒன்டாரியோ

உடல் நலம் பேணுவதற்கான வழிமுறைகள், நடனமாடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கங்கள் உள்ளன. பரதநாட்டிய விளக்கப் படம் வைத்து, உடலின் எந்த பகுதிகளுக்கு இந்த வகையான நடனம் வலிமை சேர்க்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் மிகப் பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் உள்ளது. கீழிருந்து மேற்கூரையின் பாதி பாகம் அளவு திரை, நாற்பத்துநான்கு ஒலிபெருக்கிகளின் மூலம் எல்லாத் திசைகளிலிருந்தும் ஒலி என்று இந்த அரங்கில் படம் பார்ப்பது ஒரு புதிய அனுபவம். அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட குறும் படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. நிச்சயமாகப் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com