
சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. நகர சாலைகளை வாகனங்கள் இந்த அளவுக்கு ஆக்கிரமிக்கும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கணிக்க முடியாததன் சோகம், இப்போது சாலைகளைத் திணற அடிக்கின்றன.
குறிப்பிட்ட ஒரு பிரதான சாலையில் ஏதேனும் பழுது என்றால் அதை சீரமைக்க முடியாதபடி இருபத்து நான்கு மணிநேரமும் வாகனப் போக்குவரத்து இருந்துகொண்டிருப்பது பெரிய இடையூறு. இப்போது, பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் சாலைகள் பழுதுபார்க்கப்படுவதும், அமைக்கப்படுவதும் நடப்பதால், போக்குவரத்து இல்லாத குறுகிய நேரத்துக்குள் அந்த சாலைப்பணி நடந்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் அவற்றின் தரம் கேள்விக்குரியதாகி விடுகிறது. ஒருசில நாட்களில் பலரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் பயணிப்பதால் புதுப்பிக்கப்பட்ட சாலை உடனே பழுதுபட்டும் விடுகிறது.
இதுபோதாதென்று, இப்படி சாலை போடப்பட்ட பிறகுதான், குடிநீர், கழிவுநீர் துறையினருக்கும், மின்சாரத் துறையினருக்கும், தொலைபேசி துறையினருக்கும், அதே சாலையில் தாம் செய்யவேண்டிய வேலைகள் நினைவுக்கு வரும் போலிருக்கிறது! உடனே அந்தப் புத்தம்புது சாலைகளைத் தோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை, பின்னால் என்றோ ஒருநாளில் ஏற்படக்கூடிய, பாதாள சாக்கடைக் குழாய் அடைப்பை நீக்க, கழிவுநீர் வாரியம், இப்போதே அரை அடி உயரத்துக்கு ஒரு படிபோல மூடியுடன் ஒரு வாயையும் அமைத்துவிடுவதுதான்!
இப்படி ஏற்கெனவே பரிதாப நிலையில் அல்லாடிக் கொண்டிருக்கும் சாலையை, தம் விருப்பம்போலச் சுற்றித் திரியும் மாடுகளும் மேலும் அவமானப்படுத்துகின்றன.
ஆமாம், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பிரதான சாலைகளில் மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக நிற்பதாலும், ஊகிக்கவே முடியாதபடி தம் போக்குக்கு அவை திடீரென்று ஓடுவதாலும் அல்லது நகராமல் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு அமர்ந்திருப்பதாலும், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக ஆலந்தூர் எம்.கே.என். சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். அதே பகுதியில் மாடு வளர்க்கும் சிலர் அவற்றைத் திறந்தவெளி பகுதியில் மேயவிடுவதால், அவை பிரதான சாலைகளின் குறுக்கே நின்று போக்குவரத்துக்கு இடையூறு உண்டாக்குகின்றன. திடீரென்று மாடுகள் சாலையைக் கடப்பதால், தடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். இவ்வாறு மாடுகளால் ஏற்படும் விபத்துகள் அனேகமாக தினசரி நிகழ்வுகளாகவே உள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பலமுறை புகார் கொடுத்திருப்பதும், ஆனாலும் அதை அலட்சியம் செய்தபடி மாடுகள் சாலைகளில் பவனி வருவதும் மாறவேயில்லை.
பொறுப்பற்ற வகையில் இப்படி மாடுகளைத் திரியவிடுவதால், அவை தம் கண்களில் படும் எல்லாவற்றையும் தின்றுவிடுவதைத் தவிர்க்க முடியாது. இலை, தழை, குப்பை, பிளாஸ்டிக் என்று பசிக்காகக் கண்ணில்பட்டதையெல்லாம் தின்று உடல்நலம் குன்றி, விரைவில் இறந்தும்போகும் நஷ்டத்துக்கும் மாடுகளின் உரிமையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அப்படித்தான் இருக்கும். ஏனென்றால், எலும்புக்கூடாக ஆரோக்கியம் குன்றி தள்ளாடும் மாட்டுக்குகூட ஊசிபோட்டு பால் கறக்கும் இரக்கமற்றவர்கள்தானே அவர்கள்!
நகருக்குள் யாரும் மாடு வளர்க்கக்கூடாது, நகருக்கு வெளியே அரசு அனுமதிக்கும் ஒரு பகுதியில் அனைத்து மாடுகளையும் பராமரிக்கவேண்டும் என்று ஓர் அரசாணை எப்போதோ வெளியிடப்பட்டதாக ஞாபகம். எப்போதாவது ஒருமுறை இவ்வாறு திரியும் மாடுகளைப் பிடித்துப் போய் மாநகராட்சி கொட்டடியில் அடைக்கிறார்கள்; மாட்டின் சொந்தக்காரர் உரிய தண்டம் செலுத்திவிட்டு அழைத்துச் செல்கிறார். ஆனால் மறுபடியும் அதே மாடு சாலையில் மேய்கிறது. சொந்தக்காரரைப் பொறுத்தவரை அதற்கான தீவனச் செலவை விட தண்டத் தொகை குறைவுதான் போலிருக்கிறது!