
உணவு பங்கீட்டு அட்டை பெறுதல், தேசிய அங்கீகாரமான ஆதார் அட்டை பெறுதல், முதியோர் ஓய்வூதியம் பெற வாழ்க்கைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மனை/வீடு பட்டா போன்ற பல அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் அரசு அலுவலகங்களுக்குப் போகிறார்கள். ஆனால் அந்த அலுவலகப் பணிமுறைகள், பணிச்சுமை அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வரும் மக்கள் சில நடைமுறைகளை அனுசரிக்காதது போன்ற காரணங்களால் அந்தந்த வேலைகள் முடிய காலதமாகிறது. குறிப்பிட்ட ஒரே தேவைக்காக ஒரு அரசு அலுவலகத்தை நூற்றுக்கணக்கான பேர் முற்றுகையிடும்போது அவர்களுக்குச் சேவை செய்யவேண்டிய அரசு அலுவலர்கள் சலித்துக் கொள்வது இயல்புதான். அதனாலேயே எரிச்சலுற்று தம் பொறுப்பையே தவிர்த்து பொதுமக்களைப் பகைவர்களாகப் பார்க்கும் முரட்டுத்தனமும் சில அலுவலர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
இவ்வாறு தவிர்க்கப்படுபவர்கள் தாம் முறையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்திருக்கிறோமா, உரிய ஆவணங்களை இணைத்திருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. மாறாகத் தமக்கு அந்த சேவை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் அவர்களுக்கு மேலோங்குகிறது.
இந்த பலவீனத்தை சில இடைத்தரகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாம் மேற்கொண்ட நடைமுறைகளில் தவறு இருப்பதைப் புரிந்து கொள்ளவோ அல்லது புரிந்து கொண்டாலும் வீம்பாக அதை மறைக்கவோ செய்யும் சிலர், இந்த இடைத்தரகர்களின் வலையில் விழுகிறார்கள்.
இடைத்தரகர்களும், அவருடைய பொறுப்பின்மை 'தீ'க்கு சலுகை என்ற நெய்யை வார்க்கிறார்கள். இந்த சலுகைக்காகத் தமக்கு குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
தாம் கொஞ்சமும் சிரமப்படாமல் தமக்குத் தேவையான சான்றிதழ் கிடைக்கும் சந்தோஷத்தில் பொதுமக்களில் சிலரும் அதற்குச் சம்மதிக்கிறார்கள். இடைத்தரகரும் தாம் அலுவலருடன் கொண்டிருக்கும் நட்பை முன்வைத்து, தம்மை நம்பியிருக்கும் பொதுஜனத்துக்கு எளிதாக அவருடைய தேவையைப் பூர்த்தி செய்து கொடுத்து விடுகிறார்.
இப்போது பொதுவாக மேலே குறிப்பிட்ட சேவைகளை கணினி மூலமே பெற முடியும் என்றாலும், அந்த வசதியோ அல்லது கணினி அறிவோ இல்லாத பலர் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகத்தான் போக வேண்டியிருக்கிறது. தற்போது அரசு அலுவலகங்களில் இத்தகைய இடைத்தரகர்கள் மலிந்துவிட்டதற்கும் இதுதான் அடிப்படை காரணம்.
அதேசமயம் பொதுமக்களுக்கு, குறிப்பாக அறியாமை வயப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்காக உதவும் நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தென்சென்னை பகுதியில் உள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்துக்குக் காலை பத்து மணிக்கெல்லாம் ஒரு சமூக சேவகர் வருகிறார். அங்கே தமக்கு வேண்டிய சான்றிதழை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் தாமே வலியப்போய் அவர்களுக்காக அவர்கள் சொல்லும் விவரங்களை வைத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அவர்களுக்கு அதை ஒருமுறைப் படித்துக் காண்பித்து, பிறகு அவர்களுடைய கையெழுத்து அல்லது கைநாட்டு வாங்கி அதை உரிய அலுவலரிடம் சேர்ப்பித்தார்.
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் பேசினேன்.
‘‘இது என்னாலான சமூக சேவை சார். இப்படி சேவை செய்வதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றவன். இவ்வாறு உதவி பெறும் நபர்கள் மறுமுறை வேறு ஏதாவது தேவைக்காக வரும்போது அவர்களாகவே அதற்கான அலுவலக நடைமுறைகளைத் தெரிந்துகொண்டிருப்பதை நான் கவனித்து மகிழ்கிறேன். என் சேவை வெறும் உதவியாக இல்லாமல், அவர்களுக்குக் கற்பிக்கவும் செய்வதை அறிந்து பெருமைப்படுகிறேன். இந்த சேவையால் ஆரம்பத்தில் இடைத்தரகர்கள் சிலருடைய பகைமையை நான் சம்பாதித்துக் கொண்டாலும், இந்த அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவருக்கொருவர் எரிச்சலடையாமல் நிம்மதியாகப் பணியாற்றுவதும், தேவைகளை அடைவதும் நான் அடைந்த வெற்றியாகவே கருதுகிறேன்,’’ என்றார் அவர்.
ஆச்சரியமாகத்தான் இருந்தது. மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்ற பெருத்த நிம்மதியும் ஏற்பட்டது.