எனக்கு கல்கி ராஜேந்திரன் அவர்கள் தவிர நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்த இன்னொரு மூத்த பத்திரிகை ஆசிரியர் சாவி சார்தான். அவருக்கும் என் மீது தனிப்பாசம் உண்டு. அதுவும் குறிப்பாக சாவியை ஆசிரியராகக் கொண்டு, திருவேங்கடம் என்பவர் சாவி பத்திரிகையை நடத்திய காலகட்டத்தில் வாராவாரம் எழுத ஊக்கமளித்தார் அவர். நான் வசித்த தெற்கு போக் ரோடிலேயே தாமஸ் ரோடில் இருந்த அடுக்குமாடிக் குடியுருப்பின் கீழ் தளத்தில் சாவி அலுவலகம். மேலே சாவி குடியிருந்தார். அப்போது, மாலை நேரங்களில் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவேன். சாவிக்கான ஐடியாக்கள், அவரது பழைய அனுபவங்கள், பொதுவான பத்திரிகை உலக நடப்புகள் இன்னபிற பற்றி அவர் பேச, நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நான் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற கல்லூரியின் மாணவர்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அதற்காக ஆசிரியர் சாவியை பேட்டி கண்டோம். அமைந்தகரை அருண் ஓட்டலின் தரைத் தளத்தில் சாவி ஆபீஸ். ஆரம்பகால பத்திரிகைத்துறை அனுபவங்கள் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை அவர் நினைவு கூர்ந்தார். “விசித்திரன்” என்று ஒரு பத்திரிகை. அதன் முதலாளியை சந்தித்து வேலை கேட்டார் சாவி. உடனே, வேலை கொடுத்துவிட்டார் முதலாளி. தனது நெடுநாள் கனவு நிறைவேறிவிட்டதே என்று சாவிக்கு ஏக சந்தோஷம். சம்பளம் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மாதம் ஆயிற்று. முதலாளியிடம் சம்பளம் கேட்டபோது, “முதலில் 25 வாங்கிக்கொள்; உன் வேலையைப் பார்த்துவிட்டு போட்டுத் தருகிறேன்” என்றார். ஆஹா! 25 ரூபாய் சம்பளமா நமக்கு?” என்று சாவிக்கு ஏக குஷி. ஆனால், அந்த சந்தோஷம் அடுத்த சில விநாடிகளிலேயே புஸ் ஆனது. காரணம், முதலாளி சொன்ன சம்பளம் 25 ரூபாய் இல்லை; 25 விசித்ரன் பத்திரிகை பிரதிகள். அதை விற்று வரும் பணம்தான் சம்பளம். ஏமாற்றமடைந்த சாவி, 25 பத்திரிகை பிரதிகளையும் எடைக்குப் போட்டார். எட்டணா கிடைத்ததாம். “அதுதான் எனக்கு விசித்திரன் ஆபீசில் முதல் மாதச் சம்பளம்!” என்று சொல்லிச் சிரித்தார். அதன் பிறகு “ஹனுமான்” பத்திரிகையில் வேலை போன பிறகு, “விகடன்” ஆபீசில் வேலைக்குச் சேர்ந்த அனுபவத்தை அவர் சொன்னபோது, கேட்க தமாஷாக இருந்தாலும், அதில் அவரது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. ஒரு நாள் பத்திரிகையில் “கத்திரி விகடன்” என்ற பெயரில் புதுப் பத்திரிகை ஆரம்பிக்கப்போவதாக சாவி சார் விளம்பரம் கொடுத்தார். ஆனால், அவருக்கு உண்மையில் பத்திரிகை ஆரம்பிக்கும் ஐடியாவோ, அதற்கான பண வசதியோ இல்லை என்பதுதான் உண்மை. அடுத்த சில நாட்களில் சாவி எதிர்பார்த்தபடியே நடந்தது. ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்து ஆசிரியரை சந்திக்கும்படி தகவல் வந்தது. விகடன் அலுவலகத்துக்குப் போன சாவி அங்கே ஆசிரியராக இருந்த கல்கி அவர்களை சந்தித்தார். சுற்றி வளைக்காமல், எடுத்த எடுப்பிலேயே, “ புது பத்திரிகை ஆரம்பித்து நடத்துவதெல்லாம் சிரமம். விகடனிலேயே உதவி ஆசிரியராக வேலை கொடுக்கிறோம். நாளைக்கே வேலைக்கு சேரலாம்; சம்பளம் 40 ரூபாய்!” என்று கல்கி சொல்ல, சாவி சாருக்கு இன்ப அதிர்ச்சி! கத்திரி விகடனை கட் பண்ணிவிட்டு விகடனில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார் சாவி . இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்தபோது மகாத்மா காந்தி “நவகாளி யாத்திரை” மேற்கொண்டார். கல்கியில் உதவி ஆசிரியராக இருந்த சாவி, நவகாளிக்குச் சென்று காந்திஜியை சந்தித்து, களநிலவரம் பற்றி எழுதியது தெரியும். ஆனால், அவர் காந்தியின் “வெள்ளையனே வெளியேறு” போராட்ட காலத்தில் மண்ணடி போஸ்ட் ஆபீசுக்கு தீவைக்க முயற்சித்த வழக்கில் ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றது எல்லோருக்கும் தெரிய நியாயமில்லை. மண்ணடி போஸ்ட் ஆபீசுக்கு வத்திப்பெட்டியுடன் சென்று குச்சிகள் ஒவ்வொன்றாகக் கிழித்து தபால் பெட்டிக்குள் போட்டு, உள்ளே உள்ள கடிதங்கள் எல்லாம் கொழுந்துவிட்டு எரிந்து, அது தபாலாபீசையே எரித்து தரைமட்டமாக்கப் போகிறது என எதிர்பார்த்து சாவி காத்திருக்க எல்லாம் புஸ்! ஆனாலும், போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து மண்ணடி தபாலாபீசுக்குத் தீ வைத்துவிட்டதாக தகவல் சொல்லிவிட்டு, போலிஸ் வரும்வரை காத்திருந்தார். போலிஸ் வந்து சாவியை கைது செய்து, கேஸ் போட்டது. நீதிபதி ஒன்பது மாத சிறை தண்டனை கொடுத்தார். தனது சிறை அனுபவங்களையும், நன்னடத்தை காரணமாக ஒரு மாதம் முன்னதாகவே விடுதலையானதைப் பற்றியும் பத்திரிகையாளர் ராணி மைந்தன் எழுதிய “சாவி 85” என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் விரிவாகவே சொல்லி இருக்கிறார்..சாவி கல்கி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தது கூட சுவாரசியமான கதைதான். கல்கி ஆரம்பித்த புதிதில், சாவி அதில் வேலைக்கு முயற்சித்தபோது, “இப்போதுதான் பத்திரிகை ஆரம்பித்திருக்கிறோம். கொஞ்ச நாள் கழித்துப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டார் கல்கி. அதன் பின் சில மாதங்கள் கழித்து, கல்கியை சந்திக்கச் சென்றபோது, அவர் பிசியாக எழுதிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். காத்திருந்த நேரத்தில் சாவி ஒரு பேப்பரைக் கேட்டு வாங்கி ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதி உள்ளே அனுப்ப, கல்கி அதைப் படித்து ரசித்துவிட்டு, “பேஷ்! உனக்கு ஹியூமர் நன்றாக வருகிறது!” என்று பாராட்டிவிட்டு, உடனே சாவியை 75 ரூபாய் சம்பளத்தில் கல்கியில் உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். சாவி எழுதிய “வாஷிங்டன்னில் திருமணம்” கதை, தொலைக்காட்சி தொடராக ஒளிப்பரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சாவியை சந்தித்து வாஷிங்டன்னில் திருமணம் எழுதிய அனுபவம் பற்றிக் கேட்டேன். அவரும், பரணீதரனும் திருவையாறு சென்றிருந்தபோது, மாலை வேளையில் காவிரிக் கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இசைக்கலைஞர்களும், ரசிகர்களும், மற்றவர்களும் கைகால் அலம்பி, விபூதி குழைத்து இட்டுக் கொண்டிருந்தார்கள். அது போலவே, திருவையாறு உற்சவத்துக்கு வந்திருந்த வெளிநாட்டவர்களும் செய்துகொண்டிருந்ததை கவனித்தார் சாவி. அந்த வெளிநாட்டவர்களை கவனித்த கணத்தில் சாவிக்குப் பொறி தட்டியது. “திருவையாறு தியாகராஜ உற்சவத்தை தேம்ஸ் நதிக்கரையில் நடத்தினால் எப்படி இருக்கும்” என்று அவரது கற்பனை விரிந்தது. சென்னை திரும்பும்போது வழி நெடுக இதே சிந்தனைதான். சென்னை வரும்போது, தேம்ஸ் நதிக்கரையில் “தியாகராஜ உற்சவம்” என்பது வாஷிங்டன்னில் நம்ம ஊர் திருமணமாக புதுப் பரிமாணம் பெற்றுவிட்டது. ஐடியாவை சொன்னவுடன், விகடன் பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் உடனே பச்சைக் கொடிகாட்டினார். அடுத்தவாரமே தொடருக்கான அறிவிப்பு வெளியானது.. ஜானவாசம், சாஸ்திரிகள், அம்மாமிகள் அப்பளம் இடுவது, கேஸ் லைட் தூக்கும் நரிக்குறவர்கள், சம்மந்தி சண்டை, முகூர்த்தம் என்று தென்னிந்திய திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் சேர்த்து ஜாம் ஜாம் என்று தொடரை எழுத ஆரம்பித்தார் சாவி. ஆனால், எழுதுபவர் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை. தொடர் சூப்பர் டூப்பர் ஹிட். “கதாபாத்திரங்களுக்கு கோபுலுவின் சித்திரங்கள் உயிரூட்டின. கதைப்படி முகூர்த்த தேதியில் விகடன் அலுவலகத்துக்கு ஏராளமான கடிதங்களும், வாழ்த்துத் தந்திகளும் வந்து குவிந்தன. அவ்வளவு ஏன்? சிலர் மணி ஆர்டரில் மொய்ப்பணம் கூட அனுப்பி இருந்தார்கள்!” என்று மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அடுத்து, என்னைக் குடைந்துகொண்டிருந்த கேள்வியைக் கேட்டேன். “சார்! நீங்களோ அன்றைய தேதியில் அமெரிக்கா போனதில்லை. ஆனாலும், நம் ஊர் கல்யாணக் காட்சிகளை, வாஷிங்டனில் கச்சிதமாக பொறுத்தி எப்படி உங்களால் எழுத முடிந்தது?” சாவி சிரித்துக் கொண்டே, “நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியைத்தான் அன்று முதல் இன்று வரை பலரும் என்னைக் கேட்கிறார்கள். விகடன் அலுவலகத்துக்கு அருகில்தான் அமெரிக்கன் லைப்ரரி இருந்தது. அங்கே போய் வாஷிங்டன் பற்றி நிறைய புத்தகங்கள் படித்தேன். வாஷிங்டன் நகரத்து முக்கிய லேண்ட் மார்க் இடங்கள், மேப் எல்லாம் எனக்கு அத்துப்படி ஆனது. அதை வைத்துத்தான் எழுதினேன். அதன்பின் பல வருடங்கள் கழித்து வாஷிங்டன் சென்றபோது, “பரவாயில்லையே! ஊரைப் பார்க்காமலேயே, பிசகில்லாமல் எழுதி இருக்கிறோமே!” என்று சந்தோஷப்பட்டேன்” என்றார். கலைஞருக்கும், சாவிக்கும் இடையிலான நெருங்கிய நட்பு ஸ்பெஷலானது. அது பற்றி சாவியே சொல்லக் கேட்கவேண்டும். ஒருநாள் தன்னுடைய பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, “ரிசப்ஷனுக்கு வந்துவிடுங்கள்! உங்கள் பெயர் கொண்டவர் வருவார்!” என்று சாவி சார் சொன்னபோது ஒரு விநாடி எனக்கு ஒன்றும் புரியவில்லை. “டைரக்டர் மௌலியை சொல்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “ இல்லை! சி.எம். (கலைஞர்) வருகிறார்!” என்றார். நான் சாவியில் “சி.எம்” என்ற பெயரிலும் நிறைய எழுதி இருக்கிறேன். சாவி சார் அதைத்தான் குறிப்பிடுகிறார் என்பது அப்புறம்தான் என் மர மண்டைக்கு உறைத்தது. ஆச்சி மனோரமாவை சந்திக்கும்போது அவர் பலமுறை நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே மரணமடையவேண்டும் என்று உணர்ச்சி பொங்க சொல்லி இருக்கிறார். .புகழ்பெற்ற எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமான சாவி சார் தனது புத்தகங்களின் வெளியீட்டு விழாவின்போதே மேடையில் சரிந்தது சோகமான ஓர் முடிவு. நாரத கான சபா அரங்கில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் சாவி சாரின் புத்தக வெளியீட்டு விழா நடந்துகொண்டிருந்தது. கலைஞர் புத்தகங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி கலைஞருக்கும், சாவிக்கும் இடையிலான பாசப்பிணைப்பினைப் பற்றி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். மைக் முன் வந்து நின்று பேசத்துவங்கிய சாவி சார் தன் மன மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டே இருக்கும்போது, திடீரென்று சரிந்தார். அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. மேடையில் இருந்த முதலமைச்சர் உத்தரவின்பேரில், உடனடியாக அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு நினைவு திரும்பவில்லை. அடுத்த சில நாட்களில் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை தொடர்ந்தது. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அதற்கு சில ஆண்டுகள் முன்பாக சாவி சாருக்கு இதய ஆபரேஷன் நடந்தது. வீடு திரும்பியதும் தனது ஆபரேஷன் அனுபவத்தை நகைச்சுவை கொப்பளிக்க குமுதத்தில் கட்டுரையாக எழுதினார். ஆனால், இந்த முறை, பத்திரிகைகள் அவருக்கு நினைவஞ்சலி எழுதும்படியானது.