

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் ‘’நண்பர்களுடன் ஊர் சுற்ற பொய் சொல்லி மாட்டிய அனுபவம்’’! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இதோ…
அப்போது எனக்கு வயது சுமார் 25 இருக்கும். திருமணம் ஆகவில்லை. அண்ணா சாலையில் உள்ள ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பே தந்தை இறந்துவிட்டதால், என் மூத்த சகோதரர் பொறுப்பிலேயே அம்மா, அண்ணி, நான், மற்றொரு தங்கை, ஒரு தம்பி என அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தோம்.
பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்திருந்த என் அண்ணன் சொந்தமாக ஒரு வாடகைக் கார் (Taxi) வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். தம்பி தங்கைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வந்தார். இப்போது போலவே அந்தக் காலத்து இளவயதினர்களுக்கெல்லாம் சினிமா மோகம் உண்டு. அதிலும் டைரக்டர் பாலச்சந்தர் படம் என்றால் ரிலீஸ் ஆன உடனே பார்ப்பதும், பல நாள் அந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதும் உண்டு.
அந்த நேரம் பிப்ரவரி, 1973. பாலச்சந்தர் சாரின் 'அரங்கேற்றம்' படம் ரிலீஸ் ஆகி ஓகோவென ஓடிக்கொண்டிருந்தது. நானும் என் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த தோழி ரமாவும் அந்தப் படத்தை எப்படியாவது பார்த்து விடுவதென்று முடிவு செய்தோம். வீட்டுக்குத் தெரியாமல் அலுவலகத்தில் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்று மாட்னி ஷோவில் படத்தைப் பார்த்தோம். ஆறு மணி வாக்கில் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் செய்துவிட்டு அப்படியே நல்லி, குமரன் சில்க்ஸ் கடைப் பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தோம்.
அப்போது அங்கே எங்கள் டாக்ஸி நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். அருகில் நின்றுகொண்டிருந்த என் அண்ணனும் எங்களைப் பார்த்துவிட்டார். "என்ன இந்தப் பக்கம்" என என்னிடம் கேட்டார். என்ன பதில் சொல்வதென்று நான் விழிக்க, தோழி சுதாரித்துக்கொண்டு, "இங்க கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருந்ததால் நான்தான் இவளை அழைத்துக்கொண்டு வந்தேன். இதோ, இப்ப வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாண்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்." என்றாள். அண்ணனும் அதை நம்பிவிட்டார்.
அவர் டாக்ஸியில் பயணித்து வந்த ஒரு குடும்பத்தினர் ஜவுளிக் கடையின் உள்ளே துணி வாங்கிக் கொண்டிருந்தனர். "சரி.. சரி.. உள்ள வாங்க" ன்னு சொல்லி எங்களை கடைக்குள் கூட்டிச்சென்று எனக்கொரு புடவை வாங்கித் தந்தார் என் அண்ணன்.
பின், "பத்திரமா வீட்டுக்குப் போங்கோ" ன்னு சொல்லி எங்களை அனுப்பிவைத்தார். எனக்கோ மிகப்பெரிய ஆச்சர்யம். "திருட்டுத்தனமா சினிமா பார்த்துட்டு, பொய் வேற சொன்னா பரிசு கிடைக்குமா" ன்னு தோழியிடம் கூறி சிரித்துக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினேன். இன்றுவரை இந்த சம்பவம் பற்றின உண்மை எங்க வீட்டார் எவருக்கும் தெரியாது!