இலக்கியத்தால் இந்தியாவை இணைத்தவர்

அத்தியாயம் – 48
இலக்கியத்தால் இந்தியாவை இணைத்தவர்
Published on

ஒரு சின்ன ரீவைண்ட்.

திரு.நா.பா. தினமணி கதிரின் ஆசிரியராக இருந்தபோது, நான் லயோலா கல்லூரி மாணவன். (80களின் துவக்கம்) பத்திரிகை உலகில் காலடி எடுத்து வைத்திருந்த எனக்கு அவர் தினமணி கதிரில் ஒரு தொடர் எழுத வாய்ப்பு அளித்தார். பிரபல எழுத்தாளர்களின் முதல் கதை பிரசுரமான அனுபவம் பற்றி அவர்களை பேட்டி கண்டு வாரம் ஒருவராக எழுதினேன்.

சாண்டில்யன், பி.எஸ்.ராமையா, ல.ச.ராமாமிர்தம், லக்ஷ்மி என்ற அந்த வரிசையில் நான் அப்போது விழுப்புரத்தில் வசித்து வந்த சிவசங்கரியையும் பேட்டி கண்டு எழுதினேன். சொந்த ஊர் திருக்கோவிலூர் என்பதால், ஒரு முறை கல்லூரி விடுமுறையில் ஊருக்குப் போகும்போது, விழுப்புரத்தில் அவரை சந்தித்தேன்.

தனக்கு ஏற்பட்ட ஓர் வலி மிகுந்த அனுபவத்தைத்தான் அவர் வார்த்தைகளில் வடித்து முதல் சிறுகதையாக எழுதி கல்கிக்கு அனுப்பி வைத்தார். 1968ல் கல்கியில் வெளியான தனது “அவர்கள் பேசட்டும்” என்ற அந்த முதல் சிறுகதை குறித்த அனுபவங்களை அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.  கதை வெளியாகிய சில நாட்களுக்குப் பிறகு, கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, அவர், “உங்களுக்கு உணர்ச்சிகளை மிகச்சிறப்பாகக் கையாள வருகிறது. அதை உங்கள் ஸ்டிராங் பாயிண்டாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று  கூறினாராம்.  சிவசங்கரி, தன் எழுத்துக்களில் அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டதை அவரது லட்சக்கணக்கான வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

அமரர் கல்கி, கல்கி பத்திரிகையை துவக்கியபோது, முதல் இதழில் “இந்தப் பத்திரிகையின் நோக்கம்” என்று மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவை : 1. தேச நலன். 2. தேச நலன். 3. அதுவும் தேச நலன்தான்! அது போலவே, சிவசங்கரியிடம் “உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டால் அவரது பதில்  “சமூக நலன், சமூக நலன்,  சமூக நலன்” என்றுதான் இருக்கும்.

சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி புனைவும் அவருக்கு லாவகமாக வரும் என்பதற்கு உதாரணம் “ சின்ன நூல் கண்டா நம்மை சிறைப் படுத்துவது?”  அதைப் படித்துவிட்டு  தோல்வியில் இருந்து மீண்டு எழுந்தவர்கள், ஊக்கம் பெற்று உயரே போனவர்கள், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்கள் அநேகம் பேர்.

கல்கி குடும்பத்துக்கும், சிவசங்கரிக்கும் மிகவும் நெருங்கிய பந்தம் உண்டு. சிவசங்கரியின் அப்பாதான் கல்கி நிறுவனத்துக்கு ஆடிட்டர். அதுபற்றிக் கூறும்போது, “ கல்கி மாமா (அமரர் கல்கி) சதாசிவம் மாமா, எம்.எஸ், மாமி எல்லோரையும் நினைவு தெரிந்த நாள் முதலே எனக்குப்  பரிச்சயம்.  எம்.எஸ். மாமி,  டிரஸ் பண்ணிக்கொண்டு, கச்சேரிக்கு ரெடியாகும்போது நான் கிட்டே இருந்து பார்த்திருக்கிறேன்.

அவரது காதருகே சுருள் முடியை ரசித்தது,  கீழ்பாக்கம் கல்கி தோட்டத்து பசுமையான புல்வெளி, அங்கே பூத்த பெரிய டெல்லி கனகாம்பரம், அவர்களது உபசரிப்பு, மொறு, மொறு பொன் நிற ஊத்தப்பம் மற்றும் ருசியான காசி அல்வா எல்லாம்  நினைவிருக்கிறது.

சின்ன வயசில், எனக்கு உடம்பு சரியில்லாது போனால், கல்கி இதழ்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் வெளியான சித்திரங்களுக்கு வண்ணம் தீட்டி, மகிழ்வது என் வழக்கம். கல்கி ஓவியர் சாமா  எனக்கு சித்தப்பா. அவரது சகோதரர் நடேசன் ஓர் நல்ல குழந்தை எழுத்தாளர். கல்கியில் நிறைய எழுதி இருக்கிறார்.” என நெகிழ்ச்சியோடு  சொல்லி மகிழ்வார்.

அவர், பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்திக் கொண்ட காலகட்டத்திலும், அவருக்கு அம்மாவாக மட்டுமின்றி ஒரு சிநேகிதியாகவும் இருந்து வந்த அவருடைய தாயார்  மறைந்தபோது கல்கி ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று  தன் அம்மாவைப் பற்றி மிகுந்த நெகிழ்வுடன் “அம்மா…அம்மு…அம்முகுட்டி” என்று அவர் எழுதிய கட்டுரை படிப்பவர்கள் கண் கலங்கச் செய்துவிடும்.

ஜூனியர் விகடனில் வெளியான பத்து விருந்தினர்கள் என்ற வரிசையில்  சிவசங்கரி அழைக்க விரும்பிய பத்து விருந்தாளிகள் பட்டியலில் சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் வசிக்கும் ஒரு தள்ளாத கிழவிக்கும் இடம் உண்டு என்பது  சிவசங்கரியின் மனிதநேயத்தின் வெளிப்பாடன்றி வேறென்ன?

ஓரு நாவல் எழுதப்போகிறார் என்றால், அதற்காக அவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, தகவல் சேகரிப்பு எல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்தும். ‘ஒரு மனிதனின் கதை’, ‘பாலங்கள்’  எல்லாம் சிவசங்கரி படைத்த பல பானை சோற்றுக்கு ஓரிரு பதங்கள்!

குறிப்பாக பாலங்கள் கதை மூலமாக  மூன்று காலகட்டத்து தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை  படம் பிடித்துக் காட்டியது ஓர் அரிய சாதனைதான்!  அந்தத் தொடர் வெளியானபோது கோபுலு, மாருதி, ஜெயராஜ் என்று மூன்று ஓவியர்கள் மிகப் பொருத்தமாக ஓவியங்கள் வரைந்து தொடர்கதைக்கு சுவை கூட்டினார்கள்.

சிவசங்கரியின் எழுத்தின் கிளைமாக்ஸ் என்று அவரது இலக்கியம் மூலமான இந்திய இணைப்பு திட்டத்தைக் குறிப்பிடலாம். இந்த நாட்டின் மத்திய அரசோ அல்லது அவர்கள் சார்ந்த சாகித்திய அகாடமி போன்ற தேசிய அளவிலான இலக்கிய அமைப்புகளோ முயற்சி மேற்கொண்டு செய்யவேண்டிய ஓர் இமாலயப் பணியை தனி ஒரு மனுஷியாக சிவசங்கரி பதினாறு வருட காலம் கடுமையாக உழைத்து செய்திருப்பதற்கு பத்ம விபூஷன் விருது கூடக் கொடுக்கலாம் என்பேன்!

ஒரு முறை கல்கி தீபாவளி மலருக்காக  இந்த  பிரம்மாண்டமான இலக்கிய பணியின்போது தனக்கு  ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். “நான் எழுத ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆனபோது, " இந்த நாட்டுக்கும், இலக்கிய உலகத்துக்கு நான்  இன்னும் தரவேண்டியது என்ன? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது என் மனதில் உதித்த எண்ணம்தான் இலக்கியம் மூலமாக இந்திய இணைப்பு. இதைச் செய்யச் சொல்லி யாரும் என்னை கட்டாயப் படுத்தவில்லை;   நானாகவே செய்ய  விரும்பினேன்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் கொஞ்ச நஞ்சமில்லை; அந்தப் பயணங்களின்போது அவர் எதிர்கொண்ட சவால்களுக்கும் அளவில்லை. இப்போது இருப்பது போல அன்றைக்கு  சகாயமான விமானப் போக்குவரத்து வசதிகள் கிடையாது. உள்ளங்கையில் இருந்து எண்களை அழுத்தி, எவருடனும் எந்த நேரத்திலும் பேசுவதற்கு மொபைல் போன் கிடையாது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் எத்தனை என்று சட்டென்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் கை கொடுக்க இன்டர்நெட்டும், திருவாளர் கூகுளும் கைக்கெட்டும் தூரத்தில் இல்லை.  ஆனாலும், இவர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கும், பஞ்சாபுக்கும், குஜராத்தில் இருந்து அஸ்ஸாமுக்கும், இதர வட கிழக்கு மாநிலங்களுக்கும் பயணித்து எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், இதர இலக்கியவாதிகளையும் நேரில் சந்தித்துப் பேசி, பேட்டி கண்டார்.

சிவசங்கரி சந்தித்த சவால்களில்தான் எத்தனை ரகங்கள்! சுபாஷ் முக்கோபாத்யாயா என்று ஒரு மூத்த வங்க மொழி கவிஞர். அவரை சிவசங்கரி  முதல் முறை  சந்தித்தபோது எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் தந்தார். இரண்டு வருடங்கள் கழித்து, அவரைப் பற்றி எழுதி முடித்துவிட்டு, திருத்தங்களுக்காக மீண்டும் அவரைச் சந்தித்தபோது, அவர் முழுமையாக கேட்கும் திறன் இழந்து, பேசவும் முடியாத நிலையில் இருந்தார். அவர்,  தான் சொல்ல விரும்பியவற்றை  பலகையில் எழுதிக் காட்டினார்“அவரை முதலில் சந்தித்தபோது, அவரால் நன்றாகக் கேட்க, பேச முடிந்தது  என் அதிருஷ்ட்டம்” என்று கூறுகிறார் சிவசங்கரி.

இவர் அஸ்ஸாம் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அங்கிருந்து அவருடைய  சினேகிதி, "இங்கே 14 தீவிரவாதக் குழுக்கள் இருக்கின்றன. ஆள் கடத்தல் அன்றாடம் நடக்கிறது. இங்கே  உங்களுடைய பாதுகாப்புக்கு  உத்தரவாதமில்லை; எனவே  இங்கே  வருவதைத் தவிர்க்கவும்" என கடிதம் எழுதினார். ஆனாலும், அஸ்ஸாமி மொழியை விட்டுவிட முடியாதே! எனவே, அஸ்ஸாமுக்குச் சென்று ஒரு வாரம் தங்கி, எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடித்துவிட்டு, பத்திரமாக ஊர் திரும்பினேன்” என்று கூறும்போது சிவசங்கரியின் குரலில் உற்சாகம் ததும்புகிறது.

“நான் பார்த்தவரையில் 18 மொழி எழுத்தாளர்களுக்கும் ஒரு கவலை இருக்கிறது. இருபது வருடங்களுக்கு  முன்னால் டெலிவிஷன், இன்டர்னெட் போன்ற மாற்று ஈர்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் இலக்கியம், முடிசூடா ராணியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. இப்போது அந்த நிலை ரொம்பவே  மாறி, இலக்கியமும் இருக்கிறது என்ற சூழ்நிலை நிலவுகிறது” என்று அவர்கள் எல்லோரும் கவலைப்பட்டார்கள் என்று சிவசங்கரி நினைவு கூறுகிறார். நமது இன்றைய கவலை, “ இன்றுள்ள இளைய தலைமுறை இலக்கியமா? அப்படியென்றால்?” என்று கேட்கும் அளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகிவிட்டதே என்பதுதான்!

எழுத்துலகில் சாதனைப் படைத்தவரான சிவசங்கரி, தான் எழுத்தாளரானது  தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அழகான, அர்த்தமுள்ள ஓர் விபத்து” என்று சொல்லுவார். அவர் மட்டும் எழுத்துத் துறைக்கு வராமல் இருந்திருந்தால்,  ஒரு உலகப் புகழ் பெற்ற பரத நாட்டியக் கலைஞராகத் திகழ்ந்திருப்பார். காரணம், சின்ன வயசில் கே.ஜே.சரசாவிடம் பரத நாட்டியம் கற்றுக் கொண்டபோது, அதுவே அவரது வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது.  இவரோடு கூட, கே.ஜே.சரசாவிடம் நடனம் கற்றுக் கொண்ட இன்னொருவர் யார் தெரியுமா? ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைந்தபோது, அவரை நன்கு அறிந்த சிலரிடம் பேசி, அவருக்கு  அஞ்சலியாக கல்கியில் ஒரு கவர் ஸ்டோரி வெளியானது. அதற்காக, ஜெ பற்றி பேசியவர்களில் சிவசங்கரியும் ஒருவர். அம்முவும் சிவசங்கரியும் நெருங்கிய தோழிகள்!

சிவசங்கரி பகிர்ந்துகொண்ட விஷயங்களில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கே:

“எங்கள் நட்பு என்னுடைய கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. அப்போது அவர், சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.  நான் என் கல்யாணத்துக்குப் பிறகு ஜெமினி அருகில் கதீட்ரல் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்போது, அம்மு ஷூட்டிங் இல்லாத நாட்களில்,  எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்தும், வெகுநேரம் பேசிக்கொண்டிருப்போம். பல சமயங்களில், நாங்கள் இருவரும் மட்டுமே வீட்டில் இருப்போம். அவர் எங்கள் வீட்டு கிச்சன் மேடையில் அமர்ந்து கொள்வார். நான் அவருக்கு சுடச்சுட தோசை வார்த்துக் கொடுப்பேன்.  அவர் ரொம்ப ருசித்து சாப்பிடுவார். அந்த அளவுக்கு நெருக்கமான நட்பு எங்களுக்குள்ளே இருந்தது”.

••• ••• •••

ண்மையில் சிவசங்கரியின் வாழ்க்கை அனுபவங்கள் “சூரிய வம்சம்” என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வானதி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. சிவசங்கரியுடன் உரையாடி, ஒலிப்பதிவு செய்து, அவற்றுக்குக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் பத்திரிகையாளர் ஜி. மீனாட்சி. அந்தப் புத்தகங்களில் மீனாட்சியின் பங்களிப்பினை புகைப்படத்துடன் குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் சிவசங்கரி! இத்தகைய பண்பாடு நம் ஊரில் பலருக்கு இல்லை என்பது வேதனையளிக்கும் உண்மை!

இன்று பலரிடமும் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு அந்தப் பணத்தை இந்த சமூகத்துக்குப் பயன்படும் வகையில் மற்றவர்களுக்கு அளிக்க மனம் இருக்கிறது? அண்மையில் சிவசங்கரி  தன் அறக்கட்டளையில் இருந்து  சில பத்திரிகைகளுக்கு நிதி உதவி அளித்தது பற்றி அறிந்தபோது பெரும் வியப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்குப் பின் பத்திரிகை உலகம் கடுமையான பாதிப்புக்குள்ளான சூழ்நிலையில் அமுதசுரபி, கலைமகள், இலக்கிய பீடம், லேடீஸ் ஸ்பெஷல், உரத்த சிந்தனை, நவீன விருட்சம், குவிகம்  ஆகியோருக்கு சிவசங்கரி  நன்கொடை அளித்து,  உதவி இருப்பது எத்தனை மகத்தான செயல்! வாழ்த்துகள் மேடம்!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com