
'நல்வாழ்வு' என்ற ஆசிரமம் பெயரை கேட்டாலே நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதை நிர்வாகம் செய்து வரும் டாக்டர் பெயரும் 'நல்வாழ்வு' என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
இந்த இயற்கையான ஆசிரமம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவசைலம் எனும் ஊரில் உள்ளது.
திரு. ராமகிருஷ்ணன் என்பவரால் 1969இல் சுமார் 33 ஏக்கர் இயற்கையான மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அவரது மகன்தான் டாக்டர் நல்வாழ்வு. இவர் BNYS எனும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட படிப்பு படித்து உள்ளார். இந்த நல்வாழ்வு ஆசிரமத்தில் பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றால் உடம்பில் உள்ள அத்தனை நோய்களும் நீங்கி புது மனிதனாக புத்துணர்ச்சியுடன் வெளிவரலாம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
இந்த முப்பத்தி மூணு ஏக்கர் பரப்பளவில் ஏராளமான மூலிகை மரங்கள், மூலிகை செடிகள், வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள், பழத்தோட்டங்கள் இதற்கு இடையில் நோயாளிகள் தங்குவதற்கு ஏற்றபடி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கையோடு ஒன்றிய தென்றல் தாலாட்டும் இடத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சமையல் உணவுகள் என்பது சுத்தமாக கிடையாது. எல்லாமே இயற்கையோடு ஒன்றிய உணவுகள். முக்கிய உணவுகளாக பழச்சாறுகள், மூலிகை கஷாயம், சுக்கு மல்லி காபி, தேங்காய் துருவல், வாழைப்பழம், பழ வகைகள், கேப்பங்கூழ், முளை கட்டிய பயறு வகைகள், தர்பூசணி சாறு, வில்வ இலை சாறு, நெல்லிசாறு, நாட்டு வெல்லம், வெள்ளரி, கொய்யா, பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் பருவகால பழவகைகள் உணவாக அளிக்க படுகிறது.
இங்கு தங்கி சிகிச்சை பெரும் நபர்களுக்கு மண் குளியல், நீராவி குளியல், சூரிய குளியல், வாழை இலை குளியல், ஆயில் மசாஜ், பிசியோதெரபி, யோகா போன்றவைகளும் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.
இங்குள்ள தினசரி நடைமுறை:
காலை 6.30 மணிக்கு சுக்கு மல்லி காபி வழங்கப்படும்.
7.00 மணிக்கு யோகா நடைபெறும்.
8.00 மணிக்கு மூலிகை சாறு.
9.00 மணிக்கு பார்லி அடுத்தது மண் பட்டி என்னும் சிகிச்சை. (மண்ணை நீரில் குழைத்து ஒரு துணியில் வைத்து மடித்து வயிறு, கண் பகுதியில் வைத்து விடுவார்கள்.)
காலையில் அனைவருக்கும் உடல் பரிசோதனைகள் செய்வார்கள். அடுத்து அனைவருக்கும் மருத்துவர் பரிந்துறைக்கும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கபடும்.
வாழையிலே குளியல், சூரிய குளியல், நீராவி குளியல், மூலிகை மண் குளியல், ஆயில் மசாஜ் போன்றவை நடைபெறும். இவை மூலம் நம் உடம்பில் உள்ள அனைத்து கெட்ட நீர்களும் (கழிவுகள்) வெளியேறி நம் உடம்பு தூய்மைப்படுத்த படுகிறது. மூலிகை மண்குளியல் மூலம் உடல் வெப்பம் நீங்குகிறது. தோல் நோய் போன்ற பிரச்சனைகள் இதன்மூலம் நீக்கப்படுகிறது.
சுளுக்கு தசைப்பிடிப்பு, உடல் வலிகள், மூட்டு வலிகள், முதுகு வலிகள் போன்றவைகளுக்கு ஆயில் மசாஜ், பிசியோதெரபி போன்றவை அளிக்கப்படுகின்றன.
சிகிச்சைகளுக்கு பின்னர் காலை 11 மணிக்கு இயற்கை உணவுகள் அளிக்க படுகிறது. வெல்லம் கலந்த அவல், காய்கறி பசுங் கலவை (vegetable salad) கொத்தமல்லி /கருவேப்பிலை சட்னி, பழங்கள் வழங்கப்படும்.
மதியம் முதல் மாலை வரை வெவ்வேறு சாறுகள் வழங்கப்படும். தர்பூசணி சாறு, வில்வ இலைச்சாறு, நெல்லி சாறு, கேழ்வரகு கூழ், சுக்கு மல்லி காபி வழங்கப்படும்.
இரவு:
தேங்காய், வாழைப்பழம் பிரதான உணவு, மேலும் பழங்களில் சீசனுக்கு தகுந்தவாறு உள்ள பழங்களை வரவழைத்து நமக்கு உணவாக அளிப்பார்கள்.
சுண்டல், முளைகட்டிய பயறுகள் வழங்கப்படுகிறது.
இரவில் தூக்க பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்நீருடன் தேன் கலந்து கொடுக்கிறார்கள்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எனிமா முறை மருத்துவமும் இயற்கையாக நடைபெறும்.
இங்கு தங்கி சிகிச்சை பெறுவதற்கு அறைகள் உள்ளன. பல்வேறு வகையான வசதிகளுடன் அறைகள் உண்டு. முன்பதிவு செய்து செல்லலாம்.
ஏப்ரல் மே மாதம் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இங்கு தங்கி இருக்கும் நாள்களில் விரும்பினால் அருகிலுள்ள இயற்கை சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா அனுப்பி வைப்பார்கள். (பாபநாசம், குற்றாலம்)
வெள்ளி கிழமை அன்று அத்திரி மகரிஷி, கோரக்கர் சித்தர், வாழ்ந்த வன பகுதி இடத்திற்கு விரும்பினால் நடைப்பயிற்சி (4 km) மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள்.
நமது அறைகளை சுற்றி எங்கு பார்த்தாலும் ஏராளமான மூலிகை மரங்களும் மூலிகை செடிகளும் பறவைகளின் ஒலிகளும் மயில் கூட்டங்களும் என தென்மேற்கு பருவக்காற்றுடன் இயற்கையோடு ஒன்றிய நிலையில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
உடம்பில் பல வியாதிகள் உள்ளவர்கள் இங்கு பத்து நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டால் அனைத்து நோய்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
டாக்டர் நல்வாழ்வு அவர்களை +91 76676 13218 / +91 94430 43074 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு வாங்கிக்கொண்டு சிகிச்சை பெற செல்வது நல்லது.