கடன் பட்ட நெஞ்சம்!

gratitude and humanity
gratitude and humanity
Published on
Kalki Strip
Kalki Strip

சமீபத்தில் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நினைத்தது போல அவ்வளவு எளிதாக முடிய வில்லை. இரண்டு முறை மேலுலகம் போய் வர வேண்டியதாயிற்று. ICUவில் வாயில் வென்டிலேட்டர் திணித்த நிலையில் கிடந்த போது கடவுள் சிந்தனையாகவும் நான் கடன்பட்டவர்கள் சிந்தனையாகவும் இருந்தேன். அப்போது என் கண்முன்னே தோன்றியவர்கள் பலர். முதலில் என் தாத்தா பாட்டி; பின்பு என் அப்பா அம்மா; பின்பு என் மனைவி மகன்; கூட பிறந்தவர்கள் மற்றும் என் பால்ய நண்பர்கள். இந்த நெருக்கமான உறவுகளுக்கு பிறகு என் கண்கள் முன் தோன்றியது அரிசி வியாபாரி சுப்பா ரெட்டி! நான் சிறுவனாக இருந்த போது எங்களுக்கு படி அளந்த பாரி வள்ளல் அவர்.

என் தந்தை ஒரு தமிழ் ஆசிரியர். இந்த காலம் போல் இல்லை அந்த காலம். ஆசிரியர் என்றாலே வறுமை. அவர் வாங்கிய சம்பளம் இரெண்டே நூறு. பசங்களோ ஆறு. அரிசி தொடங்கி எல்லாவற்றையும் அப்பா கடனில் தான் வாங்குவார். ஆறு குஞ்சுகளுக்கு உணவளிக்க காகம் போல அங்கேயும் இங்கேயும் பறப்பார். அரிசி தீர்ந்து போகும் வேகமாக. கடன் வாங்குவதை தவிர வேறு வழி இருக்காது. அப்போதுதான் என் வாழ்க்கையில் அரிசி வியாபாரி நுழைந்தார். பூர்வீகம் நெல்லூர். வாங்குவோமே தவிர கடனை சரியாக அடைக்க மாட்டோம். கையில் பையை கொடுத்து அப்பா என்னை தான் அனுப்புவார்.

ஒவ்வொரு முறையும் கடுப்பாய் ஏதாவது சொல்லுவார் சுப்பா ரெட்டி காரு. ஆனால் அரிசி தர மறுக்க மாட்டார். சில முறை மூடு சரியில்லாத நாட்களில் கடிந்து கொண்டு திருப்பி அனுப்புவார் . ஆனால் நான் தெரு கோடிக்கு போகும் முன் தனது வேலைக்காரரை என் பின்னே அனுப்பி கூப்பிட செய்து, நான் கேட்ட அளவு அரிசியை கொடுக்க செய்வார். இது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை அவருடைய கணக்கர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்னை மிகவும் பாதித்து விட்டது. அந்த பதில்தான் இது...

"என்ன இருந்தாலும் பையனை வெறும் பையுடன் அனுப்ப எனக்கு மனசு வரவில்லை."

சுப்பா ரெட்டி இருப்பார் ஆறடிக்கு மேல் உயரம் . முகம் அகலம். அவர் இதயம் அதை விட அகலம்.

இதையும் படியுங்கள்:
உண்மை பக்தி எது? - ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!
gratitude and humanity

எனக்கு வேலை கிடைத்ததும் அவரிடம் சென்று 'உங்களிடம் திட்டு வாங்கிய ராகவன் வாத்தியார் மகன் நான்' என்று அறிமுகப்படுத்தி கொண்டு, விட்டுப்போன பாக்கியை அடைக்க வந்துள்ளேன் என்று சொன்னேன். அதற்கு அவர் 'அதற்கு அவசியம் இல்லை தம்பி அதை நான் எப்போதோ write off செய்து விட்டேன்' என்று கூறி நான் தர முன் வந்த பணத்தை வாங்க மறுத்து விட்டார். சிலரிடம் நாம் வாங்குகிற கடன்களை அடைக்கவே முடியாது (gratitude and humanity). அப்படி நான் கடன்பட்ட கண்ணிய வான்களில் சுப்பா ரெட்டி காருவும் ஒருவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com