

குஜராத்தில் படேல் என்ற பெயரில் செல்வந்தரான ஒரு வியாபாரி இருந்தார். அவர் நல்ல ஒரு பக்தரும் கூட. அவருக்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தன. ஒவ்வொரு நாளும் அவர் பூஜை செய்வார். ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து, “படேல் உங்களிடம் தான் எல்லாம் இருக்கிறதே! பிறகு எதற்காக கடவுளுக்கு பூஜை செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு படேல், “நான் செல்வத்தையும் வளத்தையும் கேட்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்யவில்லை. நான் அமைதியையும் ஆனந்தத்தையும் கேட்டே பிரார்த்தனை செய்கிறேன். இதை அவன் மட்டுமே தர முடியும்,” என்று பதில் தந்தார்.
இது தான் உண்மையான பக்தி. கடவுளைத் தவிர வேறு யாரிடமும் அமைதியையும் ஆனந்தத்தையும் பெற முடியாது. சந்தோஷம் என்பது கடவுளுடன் ஒன்றுவதே. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சரி, புற உலகிலிருந்து உங்களால் அமைதியைப் பெற முடியாது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
வெளிநாட்டில் வாழும் பல பக்தர்கள் என்னிடம், “எனக்கு அமைதி வேண்டும்” என்கின்றனர். நான் அவர்களிடம் நீங்களே அமைதியின் வடிவம். Embodiment of Peace. What you get outside is only pieces - நீங்கள் வெளியில் பெறுவது வெறும் துண்டுகளே” என்று சொல்கிறேன்.
நீங்களே சத்தியம், அமைதி, அன்பு, அஹிம்சை, நீங்களே கடவுள். இப்படிப்பட்ட உறுதி உங்களிடம் இருந்தால் துன்பம் வர வழியே இல்லை. நீங்களே ஆனந்தமயம். கடவுள் உங்களிடமிருந்து தனியாக வேறெங்கோ இருப்பதாக நினைக்காதீர்கள். “நான் கடவுள்” என்பதில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள்.
அனுமனின் பக்தி!
ஒரு சமயம் ராமர் அனுமனைக் கேட்டார்: ”நீ எப்படி என்னை சிந்திக்கிறாய்? என்று.
“உடனே அனுமன் சொன்னார்: “உடல் ரீதியாகப் பார்த்தால் நீங்கள் எனது எஜமானர். நான் உங்கள் வேலைக்காரன். மனோ ரீதியாகப் பார்த்தால் நான் உங்களுடைய தெய்வீக வடிவின் ஒரு பொறி. ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் நீங்களும் நானும் ஒன்று!”
இந்த பதிலால் சந்தோஷப்பட்ட ராமர் அனுமனுக்கு ஒரு முத்துமாலையைத் தந்தார். அது ஜனகரால் சீதைக்கு திருமணத்தின் போது தரப்பட்ட மாலையாகும்.
அதை வாங்கிக் கொண்ட அனுமன் மாலையிலிருந்து ஒவ்வொரு முத்தாகப் பிரித்தார். அந்த முத்துக்களை காதுகளில் வைத்துப் பார்த்தார். பிறகு ஒவ்வொன்றாக அவற்றைக் கடித்துப் பார்த்து துப்பினார்.
அனுமனின் இந்தச் செயலைப் பார்த்த சீதைக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அனுமன் தன் குரங்குத்தனத்தை இன்னும் விடவில்லை என்று சீதை நினைத்தாள்.
ராமருக்கு அனுமன் ஏன் இப்படிச் செய்கிறார் என்பது தெரியும். இருந்தாலும் சீதைக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அவர் அனுமனை நோக்கி, ”அனுமா! விலை உயர்ந்த முத்துக்களை ஏன் நீ கடித்துத் துப்புகிறாய்?” என்று கேட்டார்.
“ஐயனே! இந்த முத்துக்களில் உங்கள் பெயரைக் கேட்க முடிகிறதா என்று பார்த்தேன். உங்கள் பெயரைக் கேட்க முடியாததால் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டேன். ராம நாமத்தைக் கொண்டிராத இந்த முத்தானது ஒரு கல்லைத் தவிர வேறொன்றுமில்லை. எனக்கு நீங்களே வேண்டும்” என்றான் அனுமான்.
அவரது இந்த பதிலைக் கேட்ட ராமர் அவரைத் தழுவிக் கொண்டார்.
இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் எங்கு அனுமன் இருக்கிறாரோ அங்கு ராமர் இருக்கிறார் என்பது தான். அனுமானே தனிமனிதனும் இறைவனும் ஒன்றி இருப்பதை உணர்ந்தவர் ஆவார். ஆகவே அனுமன் எப்போதுமே ஆனந்தத்தில் இருந்தார்.
அனுமன் சந்துடு, குணவந்துடு பலவந்துடு (அமைதியைக் கொண்டிருப்பவர், நற்குணங்களைக் கொண்டிருப்பவர், பலத்துடன் இருப்பவர்) என்று பலவித பெயர்களால் போற்றப்படுகிறார். அவரது பலம் அனைத்தும் தெய்வீக நாமமான ராம என்பதிலிருந்தே கிடைத்ததாகும். மக்களில் பலரும் தெய்வீக நாமத்தை உதட்டளவில் கொள்கின்றனர். ஆனால் அனுமன் இந்த நாமத்தை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஜெபித்தார். இறைவனின் நாமம் இதயத்திலிருந்தே ஜெபிக்கப்பட வேண்டும். உதடுகளிலிருந்து அல்ல.