US Election 2024: Part 12 - 'அரசியலைச் சாக்கடையாக்கி வாக்கு மீன்களைச் சேகரிக்க முயலும் ட்ரம்ப்!' ஆனால்...

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் - 8
US Election 2024
US Election 2024
Published on
இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 11 - சாக்கடையாகி வரும் அமெரிக்கத் தேர்தல் நிலவரம்... சகதி கூடுமா? இல்லை தெளியுமா?
US Election 2024

அறிமுகம்:

சென்ற வாரம் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறையான வேகத்துடன் வந்த ஹெலீன் புயல் நான்கு மாநிலங்களில் பேரழிவு செய்தது. அத்துடன் நில்லாது இந்த வாரம் மில்ட்டன் புயல் ஃபுளோரிடா மாநிலத்தில் அதே அளவில் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறையான அளவில் ஒரே நாளில் 18” (450மி.மீ) மழையையும், 120 மைல் (190கி.மீ) வேகக் காற்றுடன், நூறு மைல் அகலத்துக்குப் பலநூறு கோடி டாலர் சேதம் விளைவித்தது.  70 பேர் உயிரிழந்துள்ளனர். அறுநூறுக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  அடுத்தடுத்து இரண்டு மாபெரும் புயல்கள் நாட்டுக்குச் அழிவைத் தந்துள்ளன.

இந்நிலையில் அரசியலை மறந்து அனைவருக்கும் ஆதரவாகப் பரிந்துபேசி உதவி செய்வதுதான் மனிதத் தன்மை.  சென்ற ஹெலீன் புயலின் பின்பு, டானால்ட் ட்ரம்ப் அதைத் செய்யாது அரசியலைச் சாக்கடையாக்கினார். இந்த வாரம், முடைநாற்றம் வீசும் அளவுக்கு அந்தச் சாக்கடையைக் குழப்பி, வாக்கு மீன்களைச் சேகரிக்க முயன்று வருகிறார். எனவே, இந்தவாரமும், தேர்தல் நிலவரம் கட்டுரையாகத் தொடர்கிறது. எவரையும் குறைகூறாது எழுதலாம் என்றாலும், இயலவில்லை.

சாக்கடையைக் குழப்பி, வாக்கு மீன் பிடிக்கும் ட்ரம்ப்:

தமிழ்நாட்டில், “என்னைத் தீர்த்துக்கட்டக் கொலைமுயற்சி நடக்கிறது!” என்று எதுவும் நடக்காதபோதே ஒரு அரசியல்வாதி அடிக்கடி சொல்லுவார். 

உண்மையில் இரண்டுமுறை அப்படி நடந்ததால், எதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் கைதேர்ந்தவரான டானால்ட் ட்ரம்ப், பொங்கி எழுந்து, “ரஷ்யா, சீனா, வட கொரியா நாடுகளுக்குக் கூட நான் பயப்பட வேண்டியதில்லை.  அந்த நாடுகளிலிருந்து எவரும் என்னைக் கொல்ல முயலமாட்டார். ஆனால்  டெமாக்ரடிக் கட்சிக்காரர்கள் முயல்கிறார்கள். ஆபத்து உள்ளிலிருந்துதான் வருகிறது!” என அந்தக் கட்சிக்காரர்கள் மீது தன் ஆதரவாளர்களின் கொலைவெறியை எண்ணெய் ஊற்றி – இல்லையில்லை, பெட்ரோல் ஊற்றி வளர்த்துப் பரப்புரை செய்கிறார். 

முதலில் அவரைக் கொல்ல முயன்றவன் ஒரு ரிபப்லிகன் – அதாவது அவரது கட்சியைச் சேர்ந்தவன். இரண்டாம் முறை முயன்றவன், மறை கழன்ற ஒருவன். இருவரும் டெமாக்ரடிக் கட்சிக்காரர் அல்லர். பழி ஒரிடம், பாவம் ஓரிடம்.

பயணிக்கும்போது அமெரிக்க அதிபருக்கே கொடுக்கப்படும் - ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய, இராணுவ விமானம், அதிகப் பாதுகாப்புகள், பேசும்போது துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கமுடியாத கண்ணாடித் தடுப்புகள், இரகசியப் பாதுகாப்பு அளிக்கும் ஆளில்லா ஆகாய உளவிகள் (spy drones) வேண்டும் என அவரது பிரச்சார அமைப்பு கேட்டுள்ளது.  

இதைக்கேட்டுச் சலிப்படைந்த அதிபர் ஜோ பைடன், “எஃப்-15 போர் விமானங்களை ட்ரம்ப் கேட்காதவரை எதைக் கேட்டாலும் கொடு (த்துத் தொலையு) ங்கள்!” எனப் பதிலளித்துள்ளார்.

அவர் அதிபராக இருந்தபோது, ஃபீமா (FEMA) நிறுவனத்தின் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக உள்ளே நுழைந்தவருக்காகப் (காவலில் வைக்க) பணத்தைத் திருப்பிவிட்டார். அப்படியிருந்தும், கமலா ஃபீமாவின் நூறுகோடி டாலர் பணத்தை அவர்களின் நலத்துக்காகச் செலவிட்டதாகக்  கூசாமல் பொய்க்குற்றம் சாட்டினார்.  

வட கரோலினாவில் மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்கள் வரவில்லை. மேலும் ரிபப்லிகன் ஆதரவு அதிகமுள்ள இடங்களில் நிவாரணப் பணி சரிவர நடக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியதை அவரது கட்சிக்காரர்களே மறுத்து, ஜோ பைடனையும், கமலாவையும் புகழ்ந்து பேசிவருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 10 - துணை அதிபர் நேர்முக விவாதம் அக்டோபர் 1- முடிவு எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?
US Election 2024

புயலால் பாதிக்கப்பட்டு வீடு, சொத்து இழந்தவருக்கு நடுவண் அரசு $750 மட்டுமே கொடுக்கும் என்ற பச்சைப் பொய்யைப் பரப்பினார்.  (முதலில் $750 கொடுத்துவிட்டு, பிறகு நஷ்டத்தைப் பொறுத்து மேலும் பல்லாயிரம் உதவி கிட்டும்.  இதே ஃபீமா நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கலை மிகவும் குறைத்தது, இவர் ஆதரவான ரிபப்லிகன் ஆட்சி.)

கமலா ஹாரிஸ் மனநலம் குன்றியவர் என்று சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஏசிவருகிறார். கமலாவுக்கு வாக்களிக்கும் யூதர்கள் தங்கள் மூளையைச் சோதனை செய்யவேண்டும் எனப் பலமுறை பேசிவருகிறார்.  

கார்கள் உற்பத்தி செய்யப்படும் டெட்ராய்ட் நகர் இப்பொழுது களையிழந்து குற்றம் மலிந்து உள்ளது. அங்கு பேசும்போது, கமலா ஆட்சிக்கு வந்தால், நாடே டெட்ராய்ட் போல ஆகிவிடும் என்று அந்த நகரத்தையே இழித்துப் பேசியுள்ளார். இதுதான் அவர் யூதர்களிடமும், டெட்ராய்ட் நகரிலும் வாக்குக் கேட்கும் முறை!

இந்த வாரம் ஃபுளோரிடா மாநிலத்தைத் தாக்கிய மில்ட்டன் புயல் கரைகடக்கும்போது மக்களைப் பாதுகாப்பாக வைக்கவிடாமல் ட்ரம்ப்பையும், அவரது ஆதரவாளர்களையும் பொய்ச் சதிச் செய்திகளைப் (conspiracy theories) பரப்பிவந்தனர். அதை எதிர்த்து ரிபப்லிகன் கட்சியினரே பேசும் அளவுக்கு ஆகிவிட்டது.

அவரது ஆதரவாளரும், அமெரிக்கப் பிரதிநிதி சபை உறுப்பினருமான மார்ஜரி டெய்லர் கிரீன், “அவர்கள் இயற்கையைக் கட்டுப்படுத்தி (ரிபப்லிகன் மாநிலங்களுக்கு புயலை அனுப்பி) வருகின்றனர்,” என்று பொய்யுரை பரப்பினார்.  அந்தக் கட்சியைச் சேர்ந்த ஃபுளோரிடா மாநில உறுப்பினர் மார்ஜரி தனது மூளையைச் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கண்டனம் செய்தார்.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 9 - சமூக வலைத்தளத்தில் (ட்விட்டர் – எக்ஸ்) எலான் மஸ்க்கின் கிண்டல் ட்விட்! அடுத்து என்ன நடக்கும்?
US Election 2024

கமலாவின் கனிவு:

இப்படி ட்ரம்ப் குட்டையைக் குழப்பும்போது, கமலா புயலில் தாக்குண்டவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டோரைப் பாராட்டியும் பேசிவருகிறார். ட்ரம்ப்பின் பொய்யுரைகளை மறுத்து, புயலில் பாதிக்கப்பட்டவர் கேட்டாலே ஃபீமா உதவிசெய்யும்; நாட்டைப் பிளந்து அமெரிக்கர்களைத் துண்டாடும் ட்ரம்ப்பின் முயற்சிக்குச் செவிசாய்க்கவேண்டாம் என்று பேசிவருகிறார்.

அவரை ஆதரித்து முன்னாள் அதிபர்கள் ஒபாமாவும், பில் க்லின்ட்டனும் தேர்தல் பிர்ச்சாரம் செய்கிறார்கள்.

வரி குறைப்பும், பொருளாதாரமும்:

ட்ரம்ப் வரியைக் குறைப்பார் என்பதே கணிணிசார் (ஐ.டி) வேலை செய்யும், அதிகமாக ஊதியம் பெறும், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்களில் ட்ரம்ப்பை ஆதரிப்பதின் முக்கிய காரணம்.  

ஆனால் பொருளாதார நிபுணர்கள் இந்த வரிக் குறைப்பால் கடன் பளு ஏழரை ட்ரில்லியன் டாலர்கள் (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர்கள்) அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் ((CNN News).  நடுத்தர மக்களுக்குக் கமலாவின் உதவி, பற்றாக்குறையை மூன்றரை ட்ரில்லயன் டாலர்கள் அதிகரிக்கும். ஆக, இப்படிப்பட்ட வரிக்குறைப்புகள் விலைவாசி ஏறுவதற்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 8 - அமெரிக்க தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது! அடுத்து என்ன நடக்கும்?
US Election 2024

கருத்துக் கணிப்புகள்:

எவர் வெல்வார் என்று சொல்ல இயலாது என்றுதான் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாட்டளவில் பல பத்து லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றாலும், எலெக்டோரல் வாக்குகள் குறைவாகப் பெற்று, கமலா ஹாரிஸ் தோற்கவும் கூடும் என்று சில கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

ஆயினும், கடந்த மூன்று தேர்தல்களும் எவர் வெற்றி பெறுவார் என்று துல்லியமாகச் சொன்ன ஆலன் லிஹ்ட்மன் தனது 13 புள்ளிப்படி, கமலாதான் வெல்வார் என்று உறுதியாகக் கூறுகிறார்.  

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com