சுடச்சுடச் செய்திகள்:
டானால்ட் ட்ரம்ப் கால்ஃப் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அங்கு ஏ.கே-47 எந்திரத் துப்பாக்கியைப் பார்த்ததும், காரில் தப்ப முயன்ற 58 வயதான ரயன் வெஸ்லி ரூத் என்பவனை கொலைக்கு முயற்சிக்கிறான் என்று இரகசியப் போலிசார் விரட்டிப் பிடித்தனர். இவன் 2002லேயே போலீசாரால் கைது செய்யப்பட்டவன்.
நேர்முக விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றதாகக் அனைத்துக் கருத்துக் கணிப்புகள் அறிவிக்கின்றன. ஆனால் தான் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் எங்கும் பேசிவருகிறார்.
இன்னும் எவர் வெற்றிபெறுவார் என்று சொல்ல இயலவில்லை.
விவாதத்தில், “அடைக்கல அகதிகள் மற்றவர் வளர்க்கும் நாய்களையும், பூனைகளையும் கொன்று தின்கிறார்கள்,” என்று ட்ரம்ப் கூறிய பொய்யான வதந்தியால், ஒஹையோ மாநிலத்தில் ஸ்பிர்ங்ஃபீல்ட் என்ற ஊர் அமர்க்களப் படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் கதவடைப்பு! இந்த வதந்திக்கு அந்த ஊர் மேயரும், மாநில ஆளுநரும் மறுப்புத் தெரிவித்தும், ட்ரம்ப்பும், அவரது துணை அதிபர் வேட்பாளர் வான்ஸும் மீண்டும் மீண்டும் அந்த வதந்தியை ஊடகங்களில் சொல்லுகின்றனர். இது வெள்ளையரைத் தன் பக்க ட்ரம்ப் செய்யும் முயற்சி என்று பேசப்படுகிறது.
வலதுசாரிக்கும் பொய்ச் சதிச்செய்தி பரப்பிவரும் வலதுசாரியான லோரா லூமர் என்ற பெண்ணுக்கும் ட்ரம்ப் அதிக மதிப்பு கொடுத்துத் தன்னுடன் கூட்டிச் செல்வது, செப்டெம்பர் 11ல் உயிரிழந்தோரின் நினைவுநாளுக்கு அவரையும் உடன் அழைத்துச் சென்றது போன்ற செயல்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது. அவரது ஆதரவாளர் தென் கரோலினா செனட்டர் லின்சி க்ராம், லோரா லூமரை ‘உண்மையிலேயே ஒரு விஷமி’ என்று கூறியுள்ளார்.
அந்த லோரா லூமர், “கமலா ஹாரிஸ் பதவிக்கு வந்தால், வெள்ளை அதிபர் மாளிகை கறி (மசாலா) வாடை அடிக்கும், வெள்ளை மாளிகைப் பேச்சுகள் (இந்திய) கால் சென்டர் முலம் நடத்தப்படும் என்று எக்ஸ் (ட்விட்டர்) ஊடகத்தில் பரப்புரை செய்துள்ளார்.
நேர்முக விவாதம்:
செப்டெம்பர் 10ம் தேதி ஏ.பி.சி. ஊடகம் நடத்திய நேர்முக விவாதத்தை .7 கோடியே 10 லட்சம் பேர் பார்த்தனர்.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார் என ட்ரம்ப்பை ஆதரிக்கும் ஃபாக்ஸ் உட்பட, அனைத்து ஊடகங்களும் அறிவித்துள்ளன.
விவாதம் நடத்திய ஏ.பி.சி ஊடகம் பாரபட்சமாக நடந்து கொண்டது என்று ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி நிலைமையைச் சமாளிக்க முயற்சிக்கின்றனர்.
விவாதத்தில் ட்ரம்ப் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள்:
கமலாவும், அவர் தந்தையும், மார்க்ஸிட்டுகள்
ஹைட்டியிலிருந்து வந்த அடைக்கல அகதிகள் ஒஹையோ மாநிலத்திலுள்ள ஸ்ப்ரிங்ஃபீல்ட ஊரில் வளர்ப்புப் பிராணிகளைக் கொன்று தின்கிறார்கள். அவர்கள் அமெரிக்கக் குடிமக்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறார்கள். இது தவறு என்று அந்த ஊர் மேயர் உறுதிசெய்துள்ளார் என ஊடக நடுவர் அறிவித்ததையும் ட்ரம்ப் ஏற்கவில்லை.
கமலா ஆட்சிக்கு வந்தால், குழந்தை பிறந்தவுடன்கூட அதைக் கொல்வார்கள் என்று ட்ரம்ப் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். அது எப்பொழுதும் சட்டப்படி குற்றம். (அப்பொழுது கமலாவின் முக, உடல் பாவனை ட்ரம்ப்பை நகையாடுவது போல இருந்தது.)
எதைச் சொன்னால் தடுமாறுவார் என்று கமலா வைத்த தூண்டிலில் ட்ரம்ப் சிக்கித் தனிமனிதத் தாக்குதலிலும், தற்பெருமையிலும் இறங்கியதால், அவர் பேசியது எடுபடவில்லை.
குற்றவாளியை அரசு வக்கீல் விசாரிப்பதுபோலக் கமலா ட்ரம்ப்பின்மீது குற்றம்சாட்டியது ட்ரம்பைத் தடுமாறவைத்தது.
ட்ரம்ப் தற்போதைய அதிபர் பைடனைப் பற்றிப் பேசியபோது, கமலா, “நீங்கள் என்னுடன்தான் போட்டியிடுகிறீர்கள், பைடனுடன் அல்ல!” என்று அவர் வாயை அடைத்தார்.
'மாஜி அதிபர் ஒபாமாவின் மலிவுச் சுகாதாரத் திட்டத்தை (Affordable health care) எதிர்க்கிறீகளே, உங்கள் திட்டம் என்ன' என்று கேட்டதற்கு ட்ரம்ப் வெற்றி அடைந்தபின்தான் உறுதிப் படுத்தவேண்டும் என்றது, அவரிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்பதைத் தெளிவாக்கியது.
ட்ரம்ப் தனது பணக்கார நண்பர்களுக்குத்தான் வரியைக் குறைப்பார், தான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததால், நடுத்தரமக்களை எப்படி முன்னேற்றுவேன் என்று கமலா விவரித்தார்.
'ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் தற்கொலைத் தீவிரவாதியால் இறந்ததற்கு ராணுவத் தலைவர்களைப் பதவி நீக்கம் செய்யவில்லை; ஆனால் தான் பதவி நீக்கம் செய்ததாக ட்ரம்ப் மார்தட்டியவுடன், கமலா, “உங்களை மக்கள் பதவிநீக்கம் செய்துவிட்டனர்,” என்று முத்தாப்பு வைத்தார்.
கருத்துக் கணிப்புகள்:
நாட்டளவில் கமலா ஹாரிஸுக்கு 5% அதிக ஆதரவு உள்ளது.
பொருளாதாரம் முன்னேறினால் கமலாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மதில்மேல் பூனை மாநிலங்கள் - கமலா ஹாரிஸ் நான்கிலும், ட்ரம்ப்பும் மூன்றிலும் முன்னணியில் இருக்கின்றனர். பென்சில்வேனியா கமலா பக்கமும், ஜார்ஜியா கமலாவிடமிருந்து ட்ரம்ப் பக்கமும் வந்துள்ளன. இந்த வாரம் தேர்தல் நடந்தால் 276 (270 தேவை) எலெக்டோரல் வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸ் வெல்வார் எனக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இந்த வாரச் சராசரிக் கணிப்பு:
கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் – 0.7%; விஸ்கான்சின் – 1.2%; நிவாடா – 0.9%; பென்சில்வேனியா – 0.1%
ட்ரம்ப் முந்தியிருப்பவை: அரிசோனா – 1.3%; வடக்கு கரோலினா – 0.1% ஜார்ஜியா – 0.3%
தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு வாரங்களில் வராதோர் வாக்குகளும் அனுப்பப்பட்டுவிடும். என்ன நடக்கும்? அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)