US Election 2024: Part 2 - அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? குழப்பங்களும் கட்டுப்பாடுகளும்!

US Election 2024
US Election 2024
Published on
இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 1 - அமெரிக்க அதிபர் தேர்தல் குழப்பங்கள்!
US Election 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சம்மந்தப்பட்ட சமீபத்திய செய்திகள் என்ன என்று அறிந்துகொண்டு மேலே தொடர்வோம்:

  • கமலா ஹாரிஸ் டெமோக்ரடிக் கட்சி அதிபர் வேட்பாளராக அதிகாரப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • கருத்துக் கணிப்புப்படி, கமலா ஹாரிஸின் ஆதரவு அதிகரித்ததால், டானால்ட் ட்ரம்ப்பும் கமலா ஹாரிஸும் ஒரே அளவு ஆதரவைப் பெற்றுள்ளனர். 

  • டானால்ட் ட்ரம்ப் கருப்பர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு, “கமலா தன்னை இந்தியன் என்றுதான் சொல்லிவந்தார், இப்பொழுது கருப்பர் என்கிறார். அவர் இந்தியரா, கருப்பரா?” என்ற கேள்வியை எழுப்பினார். அது அவரை ஆதரிக்கும் பல கருப்பர் இனத்தோரையும் அவர்மீது கோபம்கொள்ள வைத்துள்ளது.

  • மேலும், அவர் யூதர்களைப் பற்றிக் கூறியதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

  • அவர் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்த ஜே.டி. வான்ஸின் மனைவி வெள்ளைக்காரர் அல்ல; இந்தியர் என்று தீவிர வலதுசாரி வெள்ளையர் பேசியதால் ரிபப்ளிகன் கட்சியைச் சார்ந்த நடுநிலைமையாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  • மேலும், குழந்தையில்லாதவர் நாட்டுப்பற்று இல்லாதவர் என்றெல்லாம் முன்பு அவர் பேசியது வெளிவந்ததால் குழந்தை இல்லாதவர் (கிறிஸ்தவக் கன்னிமார் உள்பட) சினமடைந்துள்ளனர்.

  • ரஷ்யா ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்ள அமரிக்கர்களை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் பல மாதங்களாக இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி விடுதலை செய்துள்ளனர். தான் அதிபர் ஆனால் மட்டுமே, அவர்களை விடுதலை செய்ய இயலும் என்று ட்ரம்ப் கூறியது பொய்யாகி உள்ளது.

  • கடந்த மாதம் கமலா ஹாரிஸுக்கு $31 கோடி தேர்தல் நிதி குவிந்துள்ளது.

  • அவர் யாரைத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • 1,14,000 புதிய வேலைகள் கடந்த மாதம் சேர்க்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவை (1,85,000) எட்டிப் பிடிக்காமல் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.3% ஆக உயர்ந்ததால், பங்குச் சந்தைகள் தளர்ந்து பணவீக்கம் ஏற்படுமோ என்ற கவலை உள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:

அமெரிக்காவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் முறை இந்தியாவிலிருந்து மிகவும் வேறுபட்டது. 

இந்தியாவில் கட்சி எம்.பிக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஆனால், அமெரிக்காவில் மக்கள் மூலமாகக் குழப்பமான வழியில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

அது ஏன், எப்படி என்பதை எளியமுறையில் காண்போம். (எழும் ஐயங்களைப் பின்னூட்டமாக, கருத்துப்பதிவாக எழுதினால், என்னால் இயன்றவரை பதிலளிக்கிறேன்.) 

சமய, பேச்சு, வாழ்வில் முன்னேறுவதைத் தடுக்கும் ஆண்டான்/அடிமை போன்ற பலவிதமான அடக்குமுறைகள் ஐரோப்பாவில் தலைவிரித்தாடின. அங்கிருந்து தப்பிவந்து, தனிமனித, சமய உரிமையுள்ள நாடாக அமெரிக்காவை நிறுவமுற்பட்டதே அதற்குக் காரணம்.

சான்றாக, சமயகுருமார்களின் ஆதரவுடன் ஸ்பெயின் நாடு பல்லாயிரக்கணக்கான யூதர்களைச் சித்திரவதைசெய்து சமயமாற்றம் செய்தது (Inquisition). மறுத்த 2% யூதர்கள் கம்பத்தில் கட்டப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். ஹிட்லரின் ஜெர்மனி, அவர்களை அதிக அளவில் திட்டமிட்டுப் படுகொலை செய்தது (genocide). ரஷ்யாவிலும் இதேதான் (Pogram). பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ராணி மேரி, 280 புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவர்களை உயிரோடு கொளுத்தியதால், 'ரத்தவெறி மேரி (Bloddy Mary),' என்று அழைக்கப்பட்டாள்.

எனவே, ஒரு சமயத்தை மட்டுமே சார்ந்து இயங்காத (Secular) அரசாக விளங்கவேண்டும் எனில், ஆள்பவர் கையில் முழு அதிகாரம் குவியாமல், தனிமனித உரிமை பறிக்கப்படாமலிருக்க அதிகாரத்தை மூன்று பிரிவுகளாக்கி ஒருவர் குடுமி மற்றவரிடம் இருக்கும்படியும், மாநில உரிமைகளைக் காக்கவேண்டியும்,

"ஒருங்கிணைந்த மாநிலங்களின் மக்களான நாங்கள், மிகவும் முழுநிறைவுள்ள ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகவும், நீதியை நிலைநிறுத்தவும், உள்நாட்டு அமைதியை உறுதிபடுத்தவும், பொதுப்பாதுகாப்பை ஏற்பாடு செய்யவும், பொதுநலத்தை மேம்படுத்தவும், நமக்கும் நமது வழித்தோன்றல்களுக்கும் தன்னுரிமையின் பேறுகளைப் பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்களின் அரசியல் அமைப்பை அதிகாரமளித்து நிலைநிறுத்துகிறோம்.” 

என்று அமெரிக்கத் தந்தையர் அரசியல் அமைப்பை (Constitution) எழுதினர். 

அதனால், இந்தியப் பிரமதருக்கோ, பிரிட்டிஷ் பிரதமருக்கோ உள்ள அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்படவில்லை என்பது வியப்பளிக்கும் விஷயம்.

அரசின் பிரிவுகளும், அதன் கட்டுப்பாடுகளும்:

அரசியல் அமைப்பு அடக்குமுறையாக அமைந்துவிடக்கூடாது என்பதால் திருத்தப்படும் வழியும் வகுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், எளிதில் திருத்தப்படாமல், அனைத்து மக்களின், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் முடிவாக இருக்கக் கடினமான விதிமுறைகளை அமைத்தனர். அதனால்தான், ஒன்பதாயிரம் முறைகள் அமெரிக்க அரசியல் சாசனத்தைத் திருத்த முற்பட்டும், இருநூற்றுமுப்பது ஆண்டுகளில் (1787) இருபத்தேழு திருத்தங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசாக இருந்தாலும், பதவிக்கு வருபவர்கள் தங்களைத் தங்கள் பதவியில் நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் பிற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயத்தை அனுசரிப்பது, அல்லாது அனுசரிக்காமலிருப்பது இவற்றைச் சட்டமியற்றி மட்டுப்படுத்தாமல் இருக்க,

“(அமெரிக்கச்) சட்டமாமன்றம் சமயத்தை நிறுவுதலை மதித்தோ, அல்லது தடையின்றி சமயத்தைப் பின்பற்றுதலை மட்டுப்படுத்தியோ, அல்லது பேச்சுரிமை மற்றும் பத்திரிகையுரிமையைக் குறைத்தோ, மக்கள் அமைதியாகக்கூடுவதை தடைசெய்தோ, குறைகளைக் களைய அரசை விண்ணப்பிப்பதைத் தடுத்தோ சட்டமியற்றக்கூடாது,” 

என்ற முக்கியமான திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தடைகளும், சமப்படுத்துதலும் (Checks and Balances):

நாட்டு அதிகாரம் மூன்றாகப் பங்கிட்டப்பட்டு செயலாட்சித்துறை (Executive Branch), சட்டத்துறை (Legislative Branch), நீதித்துறைகளுக்குப் (Judicial Branch) பிரித்துக் கொடுக்கப்பட்டது.  

ஒவ்வொரு துறையும் தத்தம் விருப்பப்படி செயலாற்றமுடியாதபடி ஒருதுறையின் உரிமைமீறலைத் தடுக்க மற்றொரு துறைக்கு அதிகாரங்களும், உரிமையும் வழங்கப்பட்டன.  

செயலாட்சித்துறை:  இதன் தலைவரான அமெரிக்க அதிபர் (President) அனைத்துப் படைகளுக்கும் தலைவர். புதிய சட்டங்களைப் பரிந்துரைத்து, இயற்றிய சட்டங்களைச் செயல் படுத்துகிறார். நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுறவு பொறுப்பு, சடங்கு முறைமைகளை ஏற்றுச் செய்கிறார். எனினும், இவர் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. என்னென்ன செய்யலாம் என்பதைச் சட்டப்பேரவையே தீர்மானிக்கிறது.

சட்டத்துறை:  சட்டப்பேரவை (Congress) யால் தலைமைதாங்கப்படும் இத்துறை, பிரதிநிதிசபை (House of Representatives), ஆட்சிமன்றம் (Senate) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்றுவது, பட்ஜெட் மசோதாக்களைத் துவங்குவது பிரதிநிதிசபையின் உரிமைகள்; அதிகாரிகளைக் குற்றம்சாட்டுவது, ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது இவையெல்லாம் செனட் (ஆட்சிமன்றம்) டின் உரிமைகள்.

அமெரிக்க அதிபர் சர்வாதிகாரியாகச் செயல்படுவதைத் தடுக்க, மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் இயற்றப்படும் எந்தச் சட்டத்தையும் அவர் செயல்படுத்தத்தான் வேண்டும். ஆனால், இறுதிப் பெரும்பான்மை இல்லாத எச்சட்டத்தையும் அவர் தடைசெய்யலாம்.  நாட்டுநலனில் அக்கறையில்லாமல் கட்சிக்காகமட்டும் இயற்றப்படும் சட்டங்களை மறுக்கவும் அதிபருக்கு உரிமைவழங்கப்பட்டுள்ளதால், ஒற்றுமையுடனும், அனுசரித்தும் செயல்படவேண்டிய கட்டாயம் இரு துறைகளுக்கும் ஏற்படுகிறது.

நீதித்துறை: இத்துறை உச்சநீதிமன்றத்தால் வழிநடத்தப்படுகிறது. அரசியல் அமைப்பின் உட்பொருளை உணர்ந்து தீர்ப்பு வழங்குவது, சட்டங்களை சீராய்வது, மாநிலங்களின் உரிமைபற்றிய வழக்குகளை விசாரித்து முடிவுசெய்வது இத்துறையின் பொறுப்புகளாக அமைகின்றன.

இன்னும் பேசுவோம் ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com