சுடச்சுடத் தலைப்புச் செய்திகள்:
டெமாக்ரடிக் கட்சியின் நான்கு நாள் மாநாடு அக்கட்சியினருக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், உள்ள மகிழ்ச்சியையும் நல்கியிருக்கிறது.
கமலா ஹாரிஸ் ஒரேமனதாக டெமாக்ரடிக் கட்சி அமெரிக்க அதிபர் வேட்பளாராக ஒப்புக்கொள்ளப்பட்டு, அதை ஏற்றுக்கொண்டார்.
சுயேச்சையாகப் போட்டியிட்ட ராபர்ட் கென்னடி ஜூனியர் (புகழ்பெற்ற ஜான் கென்னடியின் தம்பி மகன்), தன்னை வாபஸ் வாங்கிக் கொண்டு, டானால்ட் ட்ரம்பை ஆதரிப்பதாக அரிசோனாவில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார்.
இந்தக் குழப்பம், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ என்று சொல்ல இயலாதபடி திணற அடித்துவருகிறது.
கருத்துக் கணிப்புகள்:
நாட்டு அளவில், கமலா ஹாரிஸ் 4% அதிகத்திலிருந்து, 3% குறைவாக இருக்கிறார் என்று கடந்த வாரம் மூன்று கணிப்புகள் கூறின. கமலா சராசரியாக 1.3% அதிக வாக்கு பெறுவார் எனக் கருத இடமளிக்கிறது.
மதில்மேல் பூனை மாநிலங்களில் சென்ற மாதச் சராசரிக் கணிப்பு கீழ்வருமாறு உள்ளது:
கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் - 2%; விஸ்கான்சின் - 1%
ட்ரம்பு முந்தியிருப்பவை: அரிசோனா – 0.5%, நிவாடா – 1.4%, பென்சில்வேனியா – 0.2%; ஜார்ஜியா – 1%, வடக்கு கரோலினா – 0.9%
இவற்றை வைத்துப் பார்த்தால், இந்த மாநிலங்களில் கமலா 25, ட்ரம்ப் 68 எலக்டோரல் வாக்குகள் பெறுவர் என்று புலனாகிறது. ஆனால், வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளதால் நவம்பர் மாதத்தில் வாக்குகள் நிலவரம் எப்படி மாறும் என்று தெரியவில்லை.
இப்படியிருக்க, புகழ் பெற்ற டெமாக்ரடிக் குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி ஜூனியர், ட்ரம்புக்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் மேற்கண்ட மாநிலங்களில் எவர் பக்கம் திரும்புவர் எனக் கூறமுடியாத நிலமை நிலவுகிறது. ஓரிரு வாரங்கள் சென்றால் தெளிவு பிறக்கலாம். இது அனைவருக்கும் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டித் தவிப்பவரின் நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
டெமாக்ரடிக் கட்சி மாநாடு:
ஷிகாகோ நகரில் நடந்த இந்த மாநாட்டில் 5000 பேராளர்கள், 12000 ஆர்வலர்கள், 15000 செய்தியாளர்கள், ட்ரம்புக்கு எதிரான ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்த அரிசோனா நகர மேசா மேயர் போன்றவர் பலரையும் சேர்த்து கிட்டத்தட்ட 50000 பேர் கலந்துகொண்டனர். 5,70,000 பேர் தொலைக்காட்சியில் அதைப் பார்த்தனர்.
தன் 30 வயதிலிருந்து 81 வயதுவரை ஐம்பதாண்டுகள் நாட்டுக்கு உழைத்து, செனட்டராகவும், துணை அதிபராகவும், தற்பொழுது அதிபராகவும் பணியாற்றிவரும் ஜோ பைடன் தானும், கமலாவும் எப்படிப் பல முன்னேற்றங்களைச் செய்தோம் என்பதை மனதை உருக்கும்படி விளக்கி விடைபெற்றார்.
முன்னாள் அதிபர் ஒபாமா, “இன்னும் நான்காண்டுகள் (ட்ரம்ப்பின்) உளறல், தடுமாற்றம் குழப்பம், (நிறைந்த ஆட்சி) நமக்கு வேண்டாம்,” என்று எடுத்துக் கூறினார்.
அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ட்ரம்பின் அரசியல் சின்னத்தனமானது என்று விமர்சித்தார்.
ட்ரம்ப்பைவிடத் தனக்கு வயது குறைவு என்று தொடங்கிய பில் க்லின்ட்டன் நிதானமாக, “குடிமக்களாகிய நாம் என்பதற்குப் பதிலாக நான், எனக்கு, என்னுடைய என்பவருக்கு (ட்ரம்ப்) வாக்களிக்கலாமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
பெண்களுக்குக் கருச்சிதைவுக்குச் சுயஉரிமை வேண்டும் என்பதை ஹிலரி க்லின்டன் வலியுறுத்தினார். ட்ரம்ப் வந்தால் செயற்கை முறைக் கருத்தரிப்புகூட தடை செய்யப்படும் என்று எச்சரித்தார்.
இறுதியில் பேசிய கமலா ஹாரிஸ் ட்ரம்புக்கும், தனக்கும் உள்ள வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, தான் மக்கள் விரும்புவதை நிறைவேற்றும், நடுத்தர மக்களை முன்னேற்றும் அதிபராகப் பணியாற்றுவதாக வாக்களித்தார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்பி கூக்குரல் எழுப்பியவர்கள் முதல் வேலியைக் கடந்து உள்நுழைய முயன்றனர். அவர்கள் அமைதியான முறையில் அடுத்த வேலியைக் கடக்காவண்ணம் வெளியேற்றப் பட்டனர்.
ட்ரம்ப்பின் பிரச்சாரம்:
கமலா ஹாரிஸின் தந்தை ஒரு மார்க்சிசப் பேராசிரியர் என்ற பொய்க் குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார்.
தான் வெல்லாத்து, தேர்தல் ஒழுங்கற்ற முறையில் நடத்தப்பட்டதால்தான் என்று நான்காண்டுகளுக்கு முன் வைத்த குற்றச்சாட்டை மீண்டும் மறைமுகமாகச் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கொடிகளுள்ள (சம்மட்டி/அரிவாள்) கூடத்தில் கமலா ஹாரிஸ் உரையாற்றுவது போன்ற, செயற்கைச் செயலியால் (Artificial Intelligence) செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பட்டதைப் பலரும் வன்மையாகக் கண்டித்தனர்.
கமலா ஹாரிஸின் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் பேசும்போது, கல்விக் குறைபாடு (attention deficit hyperactivity disorder -ADHD) உள்ள அவரது மகன் கண்ணீருடன் அவரைச் சுட்டிக் காட்டி, “அவர் என் அப்பா,” என்று சொல்லி மகிழ்ந்தான். அதைச் சில ரிபப்லிகன் ஆதரவாளர்கள் சமூக வலைத் தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தனர். அது பலரின் எதிர்ப்பைப் பெற்றது.
மற்றதை அடுத்த வாரம் காண்போம்....
(தொடரும்)