சுடச்சுடத் தலைப்புச் செய்திகள்:
அமெரிக்க வாக்காளரைக் கமலாவுக்கு எதிராகத் திருப்புவதற்காக, தேர்தலில் குட்டையைக் குழப்பும் விதமாகக் கமலா ஹாரிஸுக்கு ரஷ்ய அதிபர் ப்யூட்டின் ஆதரவு தெரிவித்ததுடன், ட்ரம்ப்பை மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தலையிடத் தனக்கு உரிமை இருந்திருக்கிறது என்று டானால்ட் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு ஜனவரி 6 தேர்தல் கலவரத்தைப் பற்றிப் பேட்டி கொடுத்துள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக அவருடன் இணைந்து தான் பிறந்த மாநிலமான ஃப்பிலடெல்ஃப்பியாவில், பிட்ஸ்பர்க் நகரில் அதிபர் ஜோ பைடன் பரப்புரை செய்தார்
சில மாநிலங்களில் கருச்சிதைவு மையங்களில் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப் படுகின்றன என்ற பொய்யான பரப்புரையை ட்ரம்ப் முன்வைத்தார்.
நாட்டுக்காகப் போரிட்டு மாண்ட வீரர்களின் ஆர்லிங்டன் சமாதியில் ட்ரம்ப் குடும்பத்துடன் அரசியல் நோக்குடன் கலந்துகொண்டதால் இராணுவம் உள்படப் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பாலியல் வழக்கில் ட்ரம்புக்கு வழங்கவேண்டிய தீர்ப்பைத் தேர்தல் நடக்கும்வரை ஒத்திப்போட முடியாது என்று நியூயார்க் நீதிபதி அறிவித்துள்ளார்.
ஒருவழியாகக் கமலாவும், ட்ரம்பும் அடுத்தவாரம் (செப்டெம்பர் 10) நடைபெறப் போகும் நேர்முக விவாதத்துக்கு ஒப்புக்கொண்டனர்.
கருத்துக் கணிப்புகள்:
கமலா ஹாரிஸுக்குப் பெண்களில் 13% அதிகமாகவும், ட்ரம்புக்கு ஆண்களில் 5% அதிகமாகவும் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் ஆண்களைவிடப் பெண் வாக்காளர்கள் 7% அதிகம். அத்துடன் பெண் வாக்காளர்கள் 3.4% அதிகமாக வாக்களிக்கின்றனர்.
மதில்மேல் பூனை மாநிலங்கள் ஆறில் கமலா ஹாரிஸ் நான்கிலும், ட்ரம்ப் தலா இரண்டிலும் முன்னணியில் இருக்கின்றனர். பென்சில்வேனியாவில் எவரும் முன்னணியில் இல்லை. பென்சில்வேனியாவில் கமலாவும், ஜார்ஜியாவில் ட்ரம்ப்பும் முன்னணியை, இழந்துள்ளனர். நிவாடாவும், ஜார்ஜியாவும் கமலா பக்கம் வந்துள்ளன. இந்த வாரம் தேர்தல் நடந்தால் 273 (270 தேவை) எலெக்டோரல் வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸ் வெல்வார் எனக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இந்த வாரச் சராசரிக் கணிப்பு:
கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் – 1.2%; விஸ்கான்சின் – 1.5%; நிவாடா – 0.6%; ஜார்ஜியா – 0.1%,
ட்ரம்ப் முந்தியிருப்பவை: அரிசோனா – 1.6%; வடக்கு கரோலினா – 0.7%
பென்சில்வேனியா – சமம்
கமலா ஹாரிஸின் வாக்குச் சேகரிப்பு நிலவரம்:
பொருளாதார விஷயத்தில், அதிபர் ஜோ பைடனிடமிருந்து கமலா ஹாரிஸ் தன்னை வேறுபடுத்த ஆரம்பித்திருக்கிறார். இது ட்ரம்புக்கு ஒரு குழப்பமான இடையூறாக அமைந்துவருகிறது.
உக்ரேன்-ரஷ்யப் போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக நிதி-ஆயுத உதவி அளிப்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், ரஷ்ய அதிபர் ப்யூட்டின், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது 'மரணத்தின் முத்தம்' என்றே சொல்லாம்.
“அதிபர் ஜோ பைடன் நமக்கு மிகவும் பிடித்தவர். அவர் போட்டியிலிருந்து விலகி ஹாரிஸுக்கு ஆதரவு அளித்தார். ஆகவே, நாம் அவரை ஆதரிப்போம்,” என்று பொடிவைத்துப் பேசிய ப்யூட்டின், “ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராகப் பல கட்டுப்பாடுகள் வைத்தார். எனவே, அவரை ஆதரிக்க முடியாது!” என்று குட்டையைக் குழப்பியுள்ளார்.
டானாலட் ட்ரம்பின் வாக்குச் சேகரிப்பு நிலவரம்:
“பெட்ரோல் விலையைக் காலனுக்கு (3.8 லிட்டர்) இரண்டு டாலராகக் (Rs. 168) குறைப்பேன்,” என்று ட்ரம்ப் நியூயார்க்கில் உரையாற்றினார். அது பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியமாகும், அதனால் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
கடந்த ஆண்டில் 13 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று ட்ரம்ப் பொய்யான குற்றச்சாட்டையும் வைத்தார்.
அதிபர் செயலாற்றும் திறமை இழந்தால் அவரைத் துணை அதிபரும், அதிபரின் காபினெட் பெரும்பான்மையும் (இந்தியாவின் மந்திரிசபை போல) சேர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம் என அமெரிக்க சட்ட அமைப்பின் 25ம் திருத்தம் கூறுகிறது. அதைப் பின்பற்றிச் செயலிழந்த அதிபர் ஜோ பைடனைப் பதவி நீக்கம் செய்யவில்லை. எனவே, துணை அதிபர் அவ்வாறு செய்ததால் அவரையும் பதவி நீக்கம் செய்யும்படி 25ம் திருத்தத்தைத் திருத்தவேண்டும் என்று ட்ரம்ப் விஸ்கான்சின் மாநிலத்தில் பேசினார்.
ஃபாக்ஸ் ஊடகம் நடத்திய பேட்டியில் சென்ற ஐம்பது ஆண்டுகளில் ஊடுருவியதைவிட அதிகமாகச் சென்ற மூன்று ஆண்டுகளில் தீவிரவாதிகள் ஊடுருவி வந்திருக்கிறார்கள் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
தான் தேர்தலில் வெற்றியடைந்தால் 2024 தேர்தல் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக ட்ரம்ப் தன் சமூக ஊடகம், X, ட்ரூத் சோஷல் இவைகளில் எழுதிப் பயமுறுத்தி உள்ளார்.
கமலா - ட்ரம்ப் நேரடி விவாதம்:
டெமாக்ரடிக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்து 2020ல் கமலா ஹாரிஸை விவாதத்தில் தோற்கடித்த துளசி கப்பார்ட், அக்கட்சியை விட்டு விலகி, ட்ரம்புக்கு விவாதப் பயிற்சிக்குத் உதவி செய்கிறார்.
செப்டம்பர் 10ல் நடக்கப் போகும் இந்த விவாதம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
(தொடரும்)