'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

Vidyalakshmi Scheme
Educational Loan
Published on

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சம கல்வி உரிமையை வழங்க மத்திய அரசால் வித்யாலட்சுமி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் தகுதிகள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களின் மேற்படிப்புக்கான செலவை சமாளிக்க பெற்றோர்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். கல்விக் கடன் வாங்க நேரடியாக வங்கிகளை நாடினாலும், அதில் ஏகப்பட்ட வழிமுறைகள் உள்ளன. மேலும், சில வங்கிகள் கல்விக் கடனை வசூலிக்க தனியார் ஏஜென்டுகளை நியமிப்பதும் பெற்றோர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் மாணவர்களின் உயர் கல்விக் கனவை நனவாக்கும் முயற்சியில், மத்திய அரசு கொண்டு வந்தது தான் வித்யாலட்சுமி திட்டம்.

நல்ல மதிப்பெண்களை எடுத்தும், நல்லதொரு கல்வி வாய்ப்பு கிடைத்தும் கல்விக் கடனுக்கு எப்படி யாரை அணுகுவது என்று வழி தெரியாமல் நிற்கும் மாணவர்களுக்கு வித்யாலட்சுமி திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் தகுதிவாய்ந்த மாணவர்கள் பயில கல்விக் கடன் அளிக்கப்படும். அடுத்த 7 ஆண்டுகளில், ஆண்டுக்கு 22 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வித்யாலட்சுமி திட்டத்தின் முக்கய அம்சமே பிணையமில்லாமல், உத்தரவாதமில்லாமல் கல்விக் கடன் அளிப்பது தான்.

தகுதிகள்:

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசையின் படி தலைசிறந்த 860 உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், வித்யாலட்சமி திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியானவர்கள்.

தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் மற்றும் கல்வியைத் தொடர தேவைப்படும் செலவுகள் உள்பட அதிகபட்சமாக ரூ.7.5 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும் கல்விக் கடன் வழங்குவது மட்டுமின்றி, வட்டித் தொகையில் மானியமும் வழங்கப்படும்.

தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.8 இலட்சத்திற்கும் கீழே உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
சுமையாக மாறும் கல்விக் கடன்கள்! தவிர்க்க என்ன செய்யலாம்?
Vidyalakshmi Scheme

மிகவும் எளிமையான முறையில், மாணவர்கள் வெளிப்படையாக முற்றிலும் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இணைய தள முகவரி வழியாக வித்யாலட்சுமி திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விரைவில் இத்திட்டம் பிஎம் வித்யாலட்சுமி என மேம்படுத்தப்பட இருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சம கல்வி வாய்ப்பை வழங்கி, மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுகிறது இத்திட்டம். சமீபத்தில் சுமார் ரூ.3,600 கோடியை இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது மத்திய அமைச்சரவை.

இனிவரும் ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் மேலும் சில அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் வித்யாலட்சுமி திட்டம் பற்றிய தகவல்கள் இன்னும் பல மாணவர்களைச் சென்றடையாமல் இருக்கின்றன. இப்படி ஒரு திட்டம் மாணவர்களுக்கு உதவக் காத்திருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது நம் கடமையல்லவா! ஆகையால் முடிந்த அளவிற்கு இத்திட்டம் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தெரிந்த மாணவர்களிடம் எடுத்துரையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com