தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று மாலை விக்கிரவாண்டியில் நடைபெற்றது. சுமார் 3 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் மிகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் ஆவேசமாகவும் தனது திரைப்பட பாணியில் மக்களிடையே உரை நிகழ்த்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆர் ஆகியோரை குறித்து மிகவும் பெருமைபட இவர் இந்த மாநாட்டு மேடையில் பேசினார். “என்னைக் கூத்தாடி என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். கூத்தாடிகள் என்றால் கேவலமா? எம்ஜிஆர், என்டிஆர் போன்ற கூத்தாடிகள்தான் நாட்டில் நல்லாட்சிக் கொடுத்தனர் என்று அவர் பேசி உள்ளார்.
இந்த மண்ணுக்காக வாழ்ந்தவர்கள்தான் தங்களது கொள்கை தலைவர்கள் எனக் கூறிய விஜய், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரே தங்களது கட்சியின் கொள்கை தலைவர்கள் என்று கூறி இருக்கிறார். அதேபோல், பெரியார் கொள்கை தலைவர் என்பதால் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் பேசி இருக்கிறார்.
முன்னதாக, ‘தவெக கட்சியின் கொள்கை கோட்பாடு என்ன? இவர் யாருக்கு எதிராக அரசியல் களம் காண்கிறார் என்று பலருக்கும் பெருத்த சந்தேகம் இருந்தது. அதற்கு விடையாக இந்த மாநாட்டில் பேசிய விஜய், ‘பிளவுவாத அரசியல் செய்வோர்தாம் தமது முதல் எதிரி’ என மத்தியில் ஆளும் பாஜகவை மறைமுகமாக சாடினார். அதேபோல், திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு லஞ்சம் லாவண்யம் செய்வோர்தாம் தமது இரண்டாவது எதிரி. திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். என்னதான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், இந்த மோடி மஸ்தான் வித்தை எல்லாம் எங்களிடம் எடுபடாது என்று தமிழக திமுக அரசையும் அவர் நேரிடையாக சாடி இருக்கிறார். மேலும், திராவிடமும் தமிழ் தேசியமும் தமது இரு கண்கள் என்றும் இவற்றை தாம் பிரித்துப் பார்க்கப்போவதில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
தாம் செய்யப்போவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் என்று ஆவேசமாக பேசிய விஜய், மாநிலத்தில் ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் மற்றும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமது கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பேசிய விஜய், தம்மோடு கூட்டு சேர விரும்பும் கட்சிகளை தாம் வரவேற்பதாகக் கூறி இருக்கிறார். அதேபோல், கூட்டணி அமைத்து தமது கட்சி வெற்றி பெற்றால் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரப் பகிர்வு தரப்படும் என்று பேசி இருக்கிறார். நுற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையோடு இருக்கும் விஜய், ஏன் மற்ற கட்சிகளை தம்மோடு கூட்டு சேர அழைக்கிறார் என்பது பல்வேறு தரப்பினரின் விமர்சனமாக உள்ளது.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, ‘காய்த்த மரம்தான் கல்லடி படும். நடிகர் விஜய்யின் இந்தப் பேச்சால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை‘ என்று கூறி இருக்கிறார். இதேபோல், ‘தவெக எங்களுக்குப் போட்டியில்லை, திமுகவுக்குதான் போட்டி’ என்று பாஜகவின் எச்.ராஜா கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அதைப்போலேவே, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்று இருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தின் அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில், தவெக கட்சியின் மாநாட்டு நிகழ்வை மக்கள் மனதில் வைத்திருப்பார்களா? விஜய்யின் பேச்சுதான் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்குமா? விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இதுபோன்று பரபரப்பாக இருக்குமா? முக்கியமாக, இந்த மாநாட்டுக்கு வந்திருந்தோர் அனைவரும் நடிகர் விஜய்யை பார்க்க வந்தவர்களா அல்லது அந்தக் கட்சியின் தொண்டர்கள்தானா? என்பது பல்வேறு தரப்பினரின் கேள்விகளாக உள்ளது. ஏனென்றால், விஜய் தமது கட்சியின் வழிகாட்டி என்று கூறும் காமராஜரையே தோற்கடித்தவர்கள்தானே நமது தமிழக மக்கள். அனைத்துக்கும் காலம்தான் பதில் கூற வேண்டும்.