காமராஜர், கலைஞர் ஆட்சியில் இருந்த அந்த ரகசிய வழக்கம்: பின்பற்றுமா புதிய அரசு?

Tamil Nadu CM Vijay
Tamil Nadu CM VijayAI Image
Updated on

சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சி பீடமாக இருந்த நம் தமிழகத்தை, நடிகர் விஜய் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து, பெரும் வரலாறு படைத்திருக்கிறார். அதன் உச்ச கட்டமாக, எமக்குத் தெரிந்து இதுவரை யாரும் பின்பற்றிடாத, நம் தமிழகப் பண்பாட்டையும் நிலைநாட்டி, எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்!

ஆம்! முன்னாள் முதலமைச்சர், பிற கட்சித் தலைவர்கள் என்று அனைவரின் இல்லங்களுக்கும் முதல்வரே சென்று வாழ்த்துப் பெற்றது நமது பண்பாட்டின் பக்குவமான செயல்! இது உலக அரசியலுக்கே ஒரு வழிகாட்டி!

முதல் மூன்று ஆணைகளும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நல்ல முடிவுகளும், மக்கள் நலங்காக்கும் சிறப்பான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை!

மக்கள் நலனில் அக்கறையுள்ள பத்திரிகைகள் தங்கள் தலையங்கங்கள், வாசகர்களின் கடிதங்கள் மூலமாகச் சில குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டி, அவைகளைக் களைவதற்கான சில பரிந்துரைகளையும் தெரிவிப்பதுண்டு.

காமராஜர் மற்றும் கலைஞர் காலத்திலும், நல்ல பத்திரிகைக் கருத்துக்களை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் இருந்ததாகப் படித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், அன்றாடம் முக்கியப் பத்திரிகைகளைப் படித்து, அவற்றில் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியச் செய்திகள் இருக்குமாயின், அவற்றை மட்டும் உரிய முறையில் முதலமைச்சரின் பார்வைக்கு வைப்பார்களாம்.

அவற்றின் மீது நடவடிக்கை தேவைப்படுமாயின், முதலமைச்சரின் குறிப்புடன் அவை உரிய துறை அதிகாரிகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படுமாம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணூன பத்திரிகைத் துறை இதன் மூலம் மேலும் ஊக்கம் பெற்று, அரசின் திட்டங்கள் சிறப்புற, நல்ல பல கருத்துக்களைச் சிந்தித்து எழுத ஏதுவாகும். வாசகர்களும் தங்கள் கருத்துக்கள் உரிய மதிப்பினைப் பெறும் என்பதை உணர்ந்து, நன்கு ஆராய்ந்து தங்கள் கருத்துக்களைக் கூறுவர். இதன் மூலம் உண்மையான ஜனநாயகம் தழைத்திட வழியேற்படும்.

சாதாரண வாசகரின் கருத்துத்தானே என்று, உயர்ந்த மனிதர்கள் எதையும் ஒதுக்குவதில்லை. ஆபிரகாம் லிங்கன் அவர்கள் குழி விழுந்த தன் கன்னங்கள் குறித்துக் கவலை கொண்டிருந்தபோதுதான், ஒரு சிறுமி 'அவர் தாடி வளர்ப்பது மூலம் அந்தச் சிறுகுறையையும் எளிதாக நிவர்த்தி செய்து திருப்தி பெறலாமே' என்ற ஐடியாவை முன் வைக்க, அதனை அவர் அப்படியே ஏற்றுச் செயல்பட்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

இதையும் படியுங்கள்:
பென்சிலைக் கூட விட்டுச் சென்ற நேர்மை: கலாமின் நெகிழ வைக்கும் கதை!
Tamil Nadu CM Vijay

’எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது மிகச் சாதாரணமானவர்கள் கூட உயரிய கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்பதே அதன் மறை பொருள்!

நாடு, நகரத்தை இழந்து அனாதையாக, அடையாளமின்றித் திரிந்த மன்னன், அதிகப் பசியில் அருகிலுள்ள மூதாட்டி வீட்டுக் கதவைத் தட்டிச் சாப்பாடு கேட்கிறான். மூதாட்டியும் அவன் அகோரப் பசியில் இருப்பதை உணர்ந்து, சுடச் சுட உணவைத் தட்டில் பரிமாற, நடுவில் கை வைத்துச் சுட்டுக் கொள்கிறான். மூதாட்டியோ ஓரத்திலுள்ளதை முதலில் சாப்பிட்டுப் பின்னல்லவா நடுச் சோற்றில் கை வைக்க வேண்டுமென்கிறாள். மன்னன் அல்லவா? பொறி தட்டுகிறது. சுற்றியுள்ள கிராமங்களைப் பிடித்து விட்டு, இறுதியாக நடுவிலுள்ள தலைநகரத்தை முற்றுகையிட்டு ஜெயித்தானாம்! மூதாட்டியின் சிறு அறிவுரை அவனுக்கு நாடு, நகரங்களைத் திருப்பித் தந்ததாம்!

இப்படி சொல்லிக் கொண்டே போக, ஏக நிகழ்வுகள் உண்டு.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் உண்மையான பற்றுக் கொண்ட எவரையும் மக்கள் ஏற்றுக் கொள்வர். ஆள்வோரும், ஆளப்படுவோரும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது, நாட்டு முன்னேற்றம் தடையின்றி முன்னோக்கி நகரும்! நகர வேண்டும்!

நல்லதே நடக்குமென்று நம்புவோம்!

logo
Kalki Online
kalkionline.com